தாராளமயத் தத்துவத்தின் தத்துப் பிள்ளையாய்
BSNL உருவாக்கப்பட்டு
13 ஆண்டுகள் முடிந்து
இன்று 14வது ஆண்டு துவங்குகிறது.
திரும்பிப் பார்த்தால்
நிறைவான ஊதியம்,
சந்தோசம் அளித்த சில சலுகைகள்.
சரி தான்,
மஞ்சள் நீராட்டு, மாலை மரியாதை இல்லாமல்
எந்த ஆடும் பலியிடப்படுவதில்லை.
”பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மெண்ட் வீக்” கதையாக
நிறைவான ஊதியமும் சலுகைகளும்
இன்னும் எத்தனை நாட்களுக்கு,
என்ற அக்கறை கலந்த அச்சம் எழுகின்றது.
கள்ளிப் பால் கொடுத்து
பெற்ற குழந்தையைக் கொல்லும்
கயமைக் குணத்தோடு அரசு, ஒரு புறம்;
உண்ட வீட்டிற்கு ரண்டகம் செய்யும்
உச்சமட்ட அதிகாரிகள், மறு புறம்.
நடுவிலே,கையறு நிலையில் ஊழியர்கள்.
ஒப்பந்த ஊழியர்கள் ஊதியமின்றி
சேவைக்கு உபகரணங்களின்றி
பராமரிப்புக்குப் பணமின்றி
விரிவாக்கத்திற்குத் திட்டமின்றி
திண்டாடித் திணறிக் கொண்டிருக்கின்றது, நிறுவனம்.
GPFம் மாத ஊதியமும்
கிடைக்குமா, கிடைக்காதா என்ற அச்சம் ஆரம்பாகி விட்டது.
நிறுவனத்தின் நிதி நிலையைச் சீரமைக்கும் பணி
மதிநிறை மந்திரிகள் குழுவிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.
உறுதியான முடிவுகளின்றி, அவ்வப்பொது அமர்வதும்
அசட்டையாய் சிலவற்றைப் பரிசீலிப்பதும்
வாடிக்கையாகி விட்டது.
வீட்டில் இருப்பதை விற்றுத் தின்னும் மடமையோடு
அரசு நிறுவன பங்குகளை விற்று வருமானம் தேடும் அரசுக்கு
நமது நிறுவனத்தின் மீது என்ன அக்கறை இருக்க முடியும்?
நிறுவனத்தில் இணைய மாட்டேன்,
நிறுவனத்தை விட்டுப் போகவும் மாட்டேன்
ஆனால், நிறுவனத்தின் ஊதியத்தை மட்டும் பெற்றுக் கொள்வேன்,
என்று அடம்பிடிக்கும் உச்சமட்ட அதிகாரிகளுக்கு
நமது நிறுவனத்தின் மீது என்ன அக்கறை இருக்க முடியும்?
நமது வாழ்வையும் வளத்தையும்
தீர்மானிக்கும் நிறுவனத்தைப் பற்றி
நம்மைத் தவிர
வேறு யார் அக்கறைப் பட முடியும்?
நிறுவனத்தைக் காத்து நம்மையும் காக்கும்
உன்னதப் பணியை உத்வேகத்தோடு தொடங்குவோம்!
நிறுவனத்தை நிலை நிறுத்துவோம்!
நீடித்த பலன்களை உறுதி செய்வோம்!
BSNLஐ வளப்படுத்துவோம்!
BSNLஆல் வளம் பெறுவோம்!
No comments:
Post a Comment