தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 21 March 2014

இன்று சர்வதேச வனங்கள் தினம் - வனங்களே பூமிக்கு ஆதாரம்ஒரே நாளில் வனங்கள் குறித்து இரண்டு செய்திகள் வந்துள்ளன. முதலாவது செய்தி பூமி வெப்பமடைதலைக் குறைப்பதில் அமேசான் வனங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்று கூறுகிறது. இங்குள்ள தாவரங்கள் வெளியிடும் கரியமிலவாயுவை விட உட்கொள்ளும் கரியமிலவாயுவின் அளவு அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தாவரங்கள் பகலில் கரியமிலவாயுவை உட்கொண்டு, இரவில் வெளிவிடுகின்றன. இதனால்தான் முன்னோர்கள் இரவில் மரங்களின் கீழ் படுக்கக்கூடாது என்று சொல்லி வந்தார்கள். இன்று அது அறிவியல் உண்மையாகி விட்டது. மற்றொரு செய்தி திருப்பதியில் பெருமாள் கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காடுகள் தீப்பற்றி எரிகின்றன என்று அச்செய்தி கூறுகிறது. சேஷாச்சலம் காடுகளில் கடந்த மூன்று நாட்களாக தீ எரிந்து வருகிறது. இந்திய விமானப்படையின் நான்கு ஹெலிகாப்டர்களும், நூறு ராணுவவீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதிக்கு வரும் இரண்டு நடைபாதைகளையும் மூடி விட்டது.

தீயைக் கட்டுப்படுத்த அதுவும் வன இலாகா, தீயணைப்புத் துறை, காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது.ஒருபுறம் வனங்களின் அவசியம் குறித்த செய்தி வரும் போது, அவை அழிந்து வரும் அவலம் குறித்த செய்தியும் வந்துள்ளது. முதல் செய்தி மகிழ்ச்சியையும் இரண்டாவது செய்தி வருத்தத்தையும் அளித்துள்ளது. ஆண்டு தோறும் மூன்று கோடியே இருபது லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்ற தகவலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும். இன்று உலகின் நிலப்பகுதியில் முப்பது சதவீதத்தில் வனங்கள் இருக்கின்றன.

ஒரு காலகட்டத்தில் பூமியின் ஐம்பது சதவீத நிலப்பரப்பில் வனங்கள் இருந்தன. மக்கள் தொகை பெருக்கமும், தொழில் வளர்ச்சியும், விவசாய நிலங்கள் பரவலானதும் வனங்களின் பரப்பளவு குறைந்ததற்கு காரணமாகும். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காலு அணை கட்டுவதற்கு 999.328 ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. இது போல் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் வனங்கள் பெருமளவு அழிக்கப்படுகின்றன. வனம் என்றால் மரங்கள் அடர்ந்த பகுதி மட்டுமல்ல. அதுவொரு உயிரினங்கள் வாழும் வளாகமாகும். உலகம் முழுவதும் உள்ள வனங்களில் சுமார் 60ஆயிரம் வகை மரங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றை மனிதர்கள் இது வரை அடையாளம் கண்டதில்லை.வனம் என்ற பசும் போர்வையின் கீழ் ஒன்றையொன்று சார்ந்து வாழும் தாவரங்களும் மிருகங்களும், பறவைகளும் இயற்கையின் சொர்க்கமாகும். அத்தி மரம் பெருக இருவாச்சி பறவைகளின் பெருக்கம் தேவை.

பசுமையான புல்வெளி இருப்பதால் மான்களின் எண்ணிக்கை பெருகும், அவற்றை உண்டு வாழும் மிருகங்களும் அதிகமாகும். மிருகங்களுக்கு மட்டுமல்லாது, மனிதர்களுக்கும் வனங்கள் பயன்படுகின்றன. வனங்கள் உலகின் 160 கோடி ஏழை மக்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக விளங்குகின்றன. வனங்களின் அடர்த்தி பூமி வெப்பமடைதல் உள்ளிட்ட தட்பவெப்ப மாற்றலைக் குறைக்கிறது. வனங்கள் அழிக்கப்படுவதால் உலக கார்பன் வெளியீட்டில் 12 முதல் 18 விழுக்காடு அதிகரிக்கிறது. இது உலகின் போக்குவரத்துத் துறை வெளியிடும் கார்பன் வாயுக்கு சமமாகும். ஆரோக்கியமான வனங்கள் வாயு மண்டலத்தில் உள்ள கார்பன் அளவைக் குறைக்கின்றன.

வனங்கள் அழிக்கப்படுவதால் நாட்டின் தாவரவளமும், விலங்குகள் வளமும் அழிக்கப்படுகின்றன. வனங்கள் அழிக்கப்படுவதால். மண்பரப்பு வலுவிழக்கின்றது. இதனால் மழைகாலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக பருவமல்லாத காலங்களில் மழையும் பெருவெள்ளமும் ஏற்படுகிறது. விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் இந்திய நாட்டுக்கு வனவளம் மிகவும் அவசியமானதாகும். வனங்கள் அழிக்கப்படுவது குறித்து ஒவ்வொருவரும் கவலையுடன் சிந்திக்க வேண்டும். வனங்களின் நலனுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், பத்து மரக்கன்றுகள் நட வேண்டும் என்று வனத்துறை கூறுகிறது. ஆனால் இது கட்டாயமாக பின்பற்றப்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக ஒரு விழுக்காடு மரக்கன்றுகள்தான் நடப்பட்டுள்ளது.

அவையும் பராமரிக்கப்படுவதில்லை. வனங்களின் முக்கியத்துவத்தையும்,அவை பராமரிக்கப்பட வேண்டியது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஐ சர்வதேச வனங்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று 2012 நவம்பர் 28 அன்று தீர்மானித்தது.

அதன்படி 2013 மார்ச் 21 முதல் சர்வதேச வனங்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. வனங்கள் அழிந்தால், அவற்றில் வாழும் மிருகங்களும், தாவரங்களும் ஆங்கிலத்தில் புளோரா அண்ட் பானா என்று அழைக்கப்படும் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். அத்துடன் மனித இனமும் அழியும் அபாயமும் உருவாகும். எனவே வனங்களைக் காப்போம் இப்பூவுலகைக் காப்போம் என உறுதியேற்போம் !

Wednesday 19 March 2014

மாவட்டச் செயற்குழுக் கூட்டம்மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
14.3.2014 அன்று நமது மாவட்ட சங்க அலுவலகத்தில்
நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு
மாவட்ட தலைவர் தோழர் கேசவன் தலைமை ஏற்றார்.

மாவட்ட செயலாளர் தோழர் பூமிநாதன்
RGB தேர்தலில் நமது வேட்பாளர் வெற்றி பெற நாம்
ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும்,
மார்ச் 22 அன்று நமது BSLNLEU அமைப்பு தினம் கொண்டாட்டம் பற்றியும்
BSLNLEU & TNTCWU  போராட்ட திட்டம் பற்றியும் எடுத்துரைத்தார்.

ராஜ்கோட்டில் நடந்த அகில இந்திய செயற்குழுவில் கலந்து கொண்ட
நமது மாநில உதவி செயலர் தோழர் பழனிசாமி,  
மத்திய செயற்குழு முடிவுகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.

செயற்குழு உறுப்பினர்களின் பயனுள்ள செழுமையான விவாதங்களுடன் தீர்க்கமான முடிகள் எடுக்கப்பட்டு
தோழர் கனகராஜ் நன்றி கூற
செயற்குழு கூட்டம் இனிதே முடிந்தது.

                                         

தோழர். இ.எம்.எஸ் நினைவு நாள் - மார்ச் 19சிலர் வரலாற்றில் இடம்பெறுவார்கள், சிலர் வரலாற்றை உருவாக்குவார்கள். இதில் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்தான் தோழர் இ.எம்.எஸ். ஒரு சனாதன ஜமீன் குடும்பத்தில் 1909-ல் பிறந்தவர் அவர். ஆண்டுக்கு 50,000 மரக்கால் நெல் குத்தகைதாரர்களிடமிருந்து மட்டும் அவருடைய குடும்பத்துக்கு வரும். வீட்டு வேலைகளைச் செய்ய மட்டும் 12 நாயர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் இருந்தனர். எனில், எப்படிப்பட்ட செல்வச் செழிப்பான குடும்பத்திலிருந்து அவர் வந்தவர் என்பதை விளக்க வேண்டியதில்லை.

தன் குடும்பத்துக்கென்று எதையும் வைக்காமல், அவ்வளவு சொத்துகளையும் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுத்த ஓர் அறையில் காலமெல்லாம் வாழ்ந்து மறைந்தார் அந்த மனிதர்.

தான் விரும்பும் மாற்றத்தைத் தன்னிடத்திலிருந்து தொடங்கியவர் இ.எம்.எஸ். தன் பள்ளிப் பருவத்தில் குடுமியை எடுத்தவர், கல்லூரிப் பருவத்தில் பூணூலை அறுத்தெறிந்தார். நம்பூதிரி இளைஞர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராக இருந்த அவர், இத்தகைய சீர்திருத்தத்தை மற்றவர்களும் கடைப்பிடிக்க வற்புறுத்தினார். இதுகுறித்த சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.

சென்னைச் சிறையில் இருந்தபோது இ.எம்.எஸ். பூணூல் அணியாததைப் பார்த்த, அப்போது அவருடன் சிறையில் இருந்த காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, இ.எம்.எஸ்-ஸுக்குப் பூணூல் ஒன்றை அளித்திருக்கிறார். அந்தப் பூணூலை வாங்கிய இ.எம்.எஸ். பிராமணர் அல்லாத ஒரு தண்டனைக் கைதியிடம் கொண்டுபோய்க் கொடுத்தார்.

நாடு முழுவதும் திரண்ட விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, தோழர் இ.எம்.எஸ்-ஸையும் இழுத்தது. 1932-ல் கல்லூரியை விட்டு வெளியேறி, காந்தி அறைகூவல் விடுத்த உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்றார். அப்போது ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருக்க நேர்ந்தது. வரலாற்றுத் துறை மாணவரான இ.எம்.எஸ். கல்லூரியை விட்டு வெளியேறியபோது, அவரது பேராசிரியர் நீ வரலாற்று மாணவன் மட்டுமல்ல; வரலாற்றை உருவாக்க வேண்டியவன்என வாழ்த்தியிருக்கிறார். 1927-ல் சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி மாநாட்டில் இ.எம்.எஸ். பங்கேற்றார். பூரண சுதந்திரம் வேண்டும் என்ற தீர்மானத்தை ஆதரித்தவர்கள் பக்கம் இ.எம்.எஸ். நின்றார்.

காந்தியால் கவரப்பட்டு, சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று ஒன்றரை வருடச் சிறை வாழ்க்கைக்குப் பிறகு விடுதலையாகி வெளியே வந்தவர், இரண்டு வருடக் குடும்ப வாழ்க்கைக்குப் பிறகு மீண்டும் அவர்மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதை அறிந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டார்.

தலைமறைவுக் காலம் கற்றுக்கொடுத்த வாழ்க்கை
சுமார் ஆறாண்டுக் காலம் இ.எம்.எஸ். தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார். ஆசார அனுஷ்டானங்களில் நியதிகளைக் கடைப்பிடித்து வளர்ந்த பெரியதொரு பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து கட்சிக்கு வந்த தோழர் இ.எம்.எஸ்., தலைமறைவு வாழ்க்கையின்போது மிகச் சாதாரண வாழ்க்கையை நடத்தும் ஏழை மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மீனவர்கள் ஆகியோரது குடிசைகளில், அவர்களுடன் இரண்டறக் கலந்து, அவர்கள் தந்த உணவை - அசைவம் உட்பட - உண்டு எந்தவித எதிர்ப்புமின்றி, கட்சி ஊழியம் செய்தார்.

அந்தக் காலகட்டத்தில் வரலாற்றையும் அரசியலையும் மார்க்ஸியக் கொள்கைகளையும் ஆழமாக அலசத் தொடங்கிய இ.எம்.எஸ்., மெல்ல மெல்ல காந்தியிடமிருந்து விலகி, புதிய பாதையைத் தேர்ந்தெடுத்தார். அப்போது தலித் மக்களுடன் வாழ்ந்ததுதான் தன் வாழ்வில் பெரிய தாக்கத்தை உருவாக்கிய நாட்கள் என்று அவரே தனது சுயசரிதையில் குறிப்பிடுகிறார்.

சுதந்திரத்துக்காக ஆவேசமாக காந்தி போராடினாலும், சமுதாயச் சீர்திருத்தத்தில் அவருடைய பங்களிப்பு போதாது என்று இ.எம்.எஸ். கருதினார். இதனால் காந்தியிடமிருந்தும் நேருவிடமிருந்தும் விலகி, ஜெயப் பிரகாஷ் நாராயணன் தலைமையிலான காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1936-ல் தோழர் இ.எம்.எஸ்-ஸை கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்த்த பெருமை தோழர் சுந்தரய்யாவைச் சாரும்.

தோழர் இ.எம்.எஸ். யாரும் நம்ப முடியாத அளவுக்குப் பரந்த வாசிப்பு உள்ளவர். படித்ததைப் போலவே எல்லாத் துறைகளைப் பற்றியும் எழுதிக் குவித்தார். அவருடைய எழுத்துகள் 100 தொகுதிகளாக வெளிவந்துள்ளன.

1937-ல் மலபார் பகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டு சென்னை ராஜதானியில் சட்டமன்ற உறுப்பினரானார். (தமிழக சட்டமன்றத்தில் முன்னோடி உறுப்பினர்களில் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது) சென்னையைத் தலைநகரமாகக் கொண்ட அன்றைய அரசு மலபார் விவசாயிகள் பிரச்சினைபற்றி ஆய்வு செய்து அறிக்கை அளித்திட அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட வல்லுநர் குழுவில் தோழர் இ.எம்.எஸ்ஸும் இடம்பெற்றிருந்தார்.

இந்தக் குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் அளித்த அறிக்கைக்குத் தனது மாற்றுக் கருத்தை ஒரு குறிப்பாக அளித்தார். (அன்றைய விவசாயிகள் நிலைமையும், அதற்கு இ.எம்.எஸ். அளித்த தீர்வையும் இப்போதும் பேராசிரியர்கள் பாராட்டுகிறார்கள். அவர் அளித்த தீர்வு, எதிர்காலத்தில் தேசம் தழுவிய விவசாயிகள் இயக்கங்களின் முழக்கங்களாக மாறின.)

தோழர் இ.எம்.எஸ். தான் வாழ்ந்த காலத்தில் ஒவ்வொரு கட்டத்திலும் நிலவிய வரலாற்றுச் சூழலைத் தாண்டிச் சிந்தித்தவர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, மொழிவழி மாநிலப் பிரிவினைக் கோரிக்கைகள் எழுந்தபோது, ‘ஐக்கிய கேரளம்நூலை இ.எம்.எஸ். எழுதினார். தமிழகம், ஆந்திரம், கேரளம், கர்நாடகம் என மொழிவழி மாநிலங்கள் அமைவதற்கு வித்திட்ட பல முன்னோடிகளில் தோழர் இ.எம்.எஸ்-ஸும் ஒருவர்.

நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி
1957-ல் நாட்டின் முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி இ.எம்.எஸ். தலைமையில் கேரளத்தில் அமைந்தது. 28 மாதங்களே நீடித்த இந்த ஆட்சியின் குறுகிய காலத்தில், உபரி நில விநியோகம், குத்தகை விவசாயிகளின் நில வெளியேற்றத் தடுப்பு, குடியுரிமைப் பாதுகாப்பு (மனைப்பட்டா), கல்வியளிப்பதில் அரசின் பங்களிப்பை உறுதிப்படுத்துதல், பரந்துபட்ட சுகாதார அடிப்படைக் கட்டமைப்பை நிறுவுதல் போன்ற பல திட்டங்களைக் கொண்டுவந்தார்.

கல்வி, சுகாதாரம், பிறப்பிலேயே இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் குறைப்பது போன்ற மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இன்றும் கேரளம் முதலிடத்தில் இருப்பதற்குத் தோழர் இ.எம்.எஸ்-ஸின் பங்களிப்பு முக்கியமானது.