தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 21 March 2014

இன்று சர்வதேச வனங்கள் தினம் - வனங்களே பூமிக்கு ஆதாரம்



ஒரே நாளில் வனங்கள் குறித்து இரண்டு செய்திகள் வந்துள்ளன. முதலாவது செய்தி பூமி வெப்பமடைதலைக் குறைப்பதில் அமேசான் வனங்கள் பெரும் பங்காற்றுகின்றன என்று கூறுகிறது. இங்குள்ள தாவரங்கள் வெளியிடும் கரியமிலவாயுவை விட உட்கொள்ளும் கரியமிலவாயுவின் அளவு அதிகம் என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

தாவரங்கள் பகலில் கரியமிலவாயுவை உட்கொண்டு, இரவில் வெளிவிடுகின்றன. இதனால்தான் முன்னோர்கள் இரவில் மரங்களின் கீழ் படுக்கக்கூடாது என்று சொல்லி வந்தார்கள். இன்று அது அறிவியல் உண்மையாகி விட்டது. மற்றொரு செய்தி திருப்பதியில் பெருமாள் கோவிலில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காடுகள் தீப்பற்றி எரிகின்றன என்று அச்செய்தி கூறுகிறது. சேஷாச்சலம் காடுகளில் கடந்த மூன்று நாட்களாக தீ எரிந்து வருகிறது. இந்திய விமானப்படையின் நான்கு ஹெலிகாப்டர்களும், நூறு ராணுவவீரர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திருப்பதி தேவஸ்தானமும் திருப்பதிக்கு வரும் இரண்டு நடைபாதைகளையும் மூடி விட்டது.

தீயைக் கட்டுப்படுத்த அதுவும் வன இலாகா, தீயணைப்புத் துறை, காவல்துறை உள்ளிட்ட பல துறைகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை தீ அணைக்கும் பணியில் ஈடுபடுத்தி வருகிறது.ஒருபுறம் வனங்களின் அவசியம் குறித்த செய்தி வரும் போது, அவை அழிந்து வரும் அவலம் குறித்த செய்தியும் வந்துள்ளது. முதல் செய்தி மகிழ்ச்சியையும் இரண்டாவது செய்தி வருத்தத்தையும் அளித்துள்ளது. ஆண்டு தோறும் மூன்று கோடியே இருபது லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள வனங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன என்ற தகவலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும். இன்று உலகின் நிலப்பகுதியில் முப்பது சதவீதத்தில் வனங்கள் இருக்கின்றன.

ஒரு காலகட்டத்தில் பூமியின் ஐம்பது சதவீத நிலப்பரப்பில் வனங்கள் இருந்தன. மக்கள் தொகை பெருக்கமும், தொழில் வளர்ச்சியும், விவசாய நிலங்கள் பரவலானதும் வனங்களின் பரப்பளவு குறைந்ததற்கு காரணமாகும். மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காலு அணை கட்டுவதற்கு 999.328 ஹெக்டேர் பரப்பளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன. இது போல் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும் வனங்கள் பெருமளவு அழிக்கப்படுகின்றன. வனம் என்றால் மரங்கள் அடர்ந்த பகுதி மட்டுமல்ல. அதுவொரு உயிரினங்கள் வாழும் வளாகமாகும். உலகம் முழுவதும் உள்ள வனங்களில் சுமார் 60ஆயிரம் வகை மரங்கள் உள்ளன. அவற்றில் பலவற்றை மனிதர்கள் இது வரை அடையாளம் கண்டதில்லை.வனம் என்ற பசும் போர்வையின் கீழ் ஒன்றையொன்று சார்ந்து வாழும் தாவரங்களும் மிருகங்களும், பறவைகளும் இயற்கையின் சொர்க்கமாகும். அத்தி மரம் பெருக இருவாச்சி பறவைகளின் பெருக்கம் தேவை.

பசுமையான புல்வெளி இருப்பதால் மான்களின் எண்ணிக்கை பெருகும், அவற்றை உண்டு வாழும் மிருகங்களும் அதிகமாகும். மிருகங்களுக்கு மட்டுமல்லாது, மனிதர்களுக்கும் வனங்கள் பயன்படுகின்றன. வனங்கள் உலகின் 160 கோடி ஏழை மக்களுக்கு வாழ்க்கை ஆதாரமாக விளங்குகின்றன. வனங்களின் அடர்த்தி பூமி வெப்பமடைதல் உள்ளிட்ட தட்பவெப்ப மாற்றலைக் குறைக்கிறது. வனங்கள் அழிக்கப்படுவதால் உலக கார்பன் வெளியீட்டில் 12 முதல் 18 விழுக்காடு அதிகரிக்கிறது. இது உலகின் போக்குவரத்துத் துறை வெளியிடும் கார்பன் வாயுக்கு சமமாகும். ஆரோக்கியமான வனங்கள் வாயு மண்டலத்தில் உள்ள கார்பன் அளவைக் குறைக்கின்றன.

வனங்கள் அழிக்கப்படுவதால் நாட்டின் தாவரவளமும், விலங்குகள் வளமும் அழிக்கப்படுகின்றன. வனங்கள் அழிக்கப்படுவதால். மண்பரப்பு வலுவிழக்கின்றது. இதனால் மழைகாலங்களில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இதன் விளைவாக பருவமல்லாத காலங்களில் மழையும் பெருவெள்ளமும் ஏற்படுகிறது. விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் இந்திய நாட்டுக்கு வனவளம் மிகவும் அவசியமானதாகும். வனங்கள் அழிக்கப்படுவது குறித்து ஒவ்வொருவரும் கவலையுடன் சிந்திக்க வேண்டும். வனங்களின் நலனுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும். ஒரு மரத்தை வெட்டினால், பத்து மரக்கன்றுகள் நட வேண்டும் என்று வனத்துறை கூறுகிறது. ஆனால் இது கட்டாயமாக பின்பற்றப்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் வெட்டப்பட்ட மரங்களுக்கு ஈடாக ஒரு விழுக்காடு மரக்கன்றுகள்தான் நடப்பட்டுள்ளது.

அவையும் பராமரிக்கப்படுவதில்லை. வனங்களின் முக்கியத்துவத்தையும்,அவை பராமரிக்கப்பட வேண்டியது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 ஐ சர்வதேச வனங்கள் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று 2012 நவம்பர் 28 அன்று தீர்மானித்தது.

அதன்படி 2013 மார்ச் 21 முதல் சர்வதேச வனங்கள் தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. வனங்கள் அழிந்தால், அவற்றில் வாழும் மிருகங்களும், தாவரங்களும் ஆங்கிலத்தில் புளோரா அண்ட் பானா என்று அழைக்கப்படும் அனைத்து உயிரினங்களும் அழிந்து விடும். அத்துடன் மனித இனமும் அழியும் அபாயமும் உருவாகும். எனவே வனங்களைக் காப்போம் இப்பூவுலகைக் காப்போம் என உறுதியேற்போம் !

No comments:

Post a Comment