தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 14 March 2014

கார்ல் மார்க்ஸ் - நினைவு நாள் - மார்ச் 14



மார்க்ஸ் இறந்து 131 ஆண்டுகளாகின்றன. அவர் பிறந்து 196 ஆண்டுகள் முடியப் போகிறது. இருப்பினும் அவர் முன்வைத்த கருத்துக்கள், அவர் உருவாக்கிய தத்துவம், நடைமுறையிலும், கருத்துத் துறையிலும் இன்றும் உலகம் முழுவதும் செல்வாக்கு பெற்றதாக உள்ளது.மானுடத்தின் எதிர்காலம் சோசலிசம், அதைத் தொடர்ந்து கம்யூனிஸம் என்ற கருத்தை மார்க்ஸ் முன்வைத்தார். ஆனால் இன்றுவரை லட்சோப லட்சக்கணக்கான மக்கள் விரும்பும் சோசலிசம் உலகம் முழுவதிலும் மலரவில்லை.

நெருக்கடி நிறைந்த அமைப்பு என்று மிகச் சரியாக மார்க்ஸ் கணித்த, வரலாற்று வளர்ச்சியில் குப்பைத் தொட்டியில் தூக்கி எறியப்பட வேண்டிய முதலாளித்துவ அமைப்பு இன்றும் உலகில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஏகாதிபத்திய - முதலாளித்துவ ஆதிக்கத்தில் உள்ள இவ்வுலகில், சோசலிச சமூகத்தை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட துவக்க முயற்சிகள் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேர்ந்தது. இவையெல்லாம் உண்மையாக இருந்தும், மார்க்ஸின் தத்துவமும் அவரது தீர்க்கதரிசனப் பார்வையும் இன்றும் வலுவானவை, பொருள்மிக்கவை என்றே கணிசமான பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது. இதன் ரகசியம் என்ன? முதலாவதாக, மானுட சிந்தனை ஓட்டத்தில் ஒரு மிக அடிப்படையான பங்களிப்பின் மூலம் புதிய சிந்தனைக்கு வித்திட்டார் அவர்.

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். வரலாறு என்பது அரண்மனை சூழ்ச்சிகள், யுத்தங்கள், அரசகுல சந்ததிகள் அவர்களின் வீரதீரச் செயல்கள் ஆகியவற்றின் வர்ணனை அல்ல என்று உணர்த்தி மானுட சிந்தனை வளர்ச்சியில் புதியதடம் பதித்தார். மனிதர்களை, அவர்களது உணர்வுப் பூர்வமான, நோக்கம் சார்ந்த செயல்பாட்டை - மனித உழைப்பை -மானுட வரலாறு பற்றிய தனது ஆய்வில் மையமான இடத்தில் மார்க்ஸ் வைத்தார்.

மனிதர்கள் தங்களது உணர்வுப்பூர்வமான உற்பத்தி சார் நடவடிக்கை மூலம் இயற்கையை மாற்றி தங்களது வாழ்வுக்கான பொருட்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இதுதான் மானுட உயிரினத்தின் தனிச்சிறப்பு என்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்தினார். இதன்மூலம், மானுடமும் வளர்ந்தது, மாறியது, தொடர்ந்து புதிய அறிவையும், திறன்களையும் பெற்றுக் கொண்டே வந்தது, இயற்கையின் செயல் முறைகளை மேலும் மேலும் ஆழமாகத் தெரிந்து கொண்டது, இந்த அறிவு மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகளை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இவ்வாறாக, உற்பத்திசக்திகள் இடையறாது வளர்வது என்பது மானுட வரலாற்று வளர்ச்சியின் மாறாத அம்சமாக உள்ளது. மானுட வரலாற்று வளர்ச்சி பற்றி மார்க்ஸ் முன்வைத்த மிக முக்கியமான இரண்டாவது அம்சம், உற்பத்தி என்பது தனிமனித செயல் அல்ல, எப்பொழுதும் ஒரு சமூக ஏற்பாட்டின் மூலம்தான் அது நிகழ முடியும் என்பதாகும். மனிதர்கள் இணைந்துதான் உற்பத்தியில் ஈடுபட முடியும்.

மானுட வளர்ச்சியின் எல்லாக் கட்டங்களிலும் உற்பத்தி சமூகத்தின் வாயிலாகவே நிகழ்கிறது. மூன்றாவதாக, மானுட சமூகத்தின் உற்பத்தி சக்திகள் தொடர்ந்து வளர்ந்து வருவதால், அவை நடப்பில் உள்ள சமூக உற்பத்தி ஏற்பாடுகளுடன் ( இவற்றை மார்க்ஸ் சமூக உற்பத்தி உறவுகள் என்று வர்ணித்தார்) முரண்பட வேண்டிய நிலை ஏற்படும் என்று மார்க்ஸ் நிரூபித்தார். நான்காவதாக, உற்பத்தி சக்திகள் வளர்ச்சியடையும் பொழுது சமூகத்தில் உபரி உற்பத்தி உருவாகும். இது, மற்ற மக்களை உழைக்க வைத்து அவர்கள் உழைப்பு மூலம் சமூகத்தின் ஒரு சிறு பகுதி வாழ முடியும் என்ற வாய்ப்பை ஏற்படுத்துகிறது. வேறு வகையில் சொன்னால், உபரி, வர்க்க சமூகத்தையும், வர்க்க சுரண்டலையும் சாத்தியமாக்குகிறது. சுரண்டும் வர்க்கம், சுரண்டப்படும் வர்க்கம் என்ற வர்க்கப் பிரிவினை கொண்ட வர்க்க சமூகம் ஏற்படுகிறது. இவ்வாறு ஒரு சிறுபகுதி பெரும்பகுதி மக்களை சுரண்டுவது இச்சிறு பகுதி சமூகத்தின் உற்பத்திக் கருவிகளை தனது ஏகபோகமாக ஆக்கிக் கொண்டு சமூக உற்பத்தியின் மீது ஆதிக்கம் செலுத்துவதன் மூலம்தான் சாத்தியம்.

இத்தகைய, ஏற்றத் தாழ்வான சமூக ஏற்பாட்டை நடைமுறைப் படுத்தவும், சுரண்டப்படும் பெரும்பகுதி மக்களை சுரண்டும் சிறுபகுதியினருக்கு உழைத்திடச் செய்வதற்கு உகந்த கருவியாக அரசு செயல்படுகிறது. ஆளும் வர்க்கம் அரசு அடக்குமுறை மூலம் மட்டுமே ஆள முடியாது. தத்துவமும் தேவை. சுரண்டப்படுவோரையே சுரண்டலை நியாயம் என்று கருத வைக்க, மதம், இலக்கியம், பண்பாடு உள்ளிட்ட பல தத்துவார்த்தக் கருவிகள் பயன்படுகின்றன. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியும், அதற்கான வர்க்க சமூகமும் மானுட வரலாற்று வளர்ச்சியில் தவிர்க்க முடியாதவை என்பதைமட்டும் மார்க்ஸ் கூறி இருந்தால், சுரண்டலையும் வர்க்க ஆட்சியையும் நியாயப்படுத்த அவரது கருத்துக்களை ஆளும்வர்க்கங்கள் பயன்படுத்தியிருக்கமுடியும். ஆனால் மார்க்ஸ் அத்துடன் நிற்கவில்லை. வர்க்கப் போராட்டங்கள் மூலம், வர்க்கச் சமூக அமைப்புகளை தூக்கி எறிய முடியும், மானுட வரலாற்று வளர்ச்சியில் வர்க்க வேறுபாடு அற்ற சமூகத்தை உருவாக்க முடியும் என்று காட்டியது மார்க்ஸின் மகத்தான பங்களிப்பாகும்.

மானுட வரலாற்று வளர்ச்சியின் பல்வேறு கட்டங்களில் நிலவும் வர்க்க சமூகத்தை தூக்கி எறிந்து, அடுத்த கட்ட வளர்ச்சிக்கு மானுடத்தை இட்டுச் செல்லும் வர்க்கம் எதுவாக இருக்கும் என்பதைப் பற்றிய வெளிச்சம் அளித்தது மார்க்ஸ்தான். இதையொட்டித்தான், நிலப்பிரபுத்துவ அமைப்பை தூக்கி எறிவதில் முதலாளி வர்க்கம் முக்கியபங்காற்றும் என்பதையும், நவீன உலகில் முதலாளித்துவ அமைப்பை தூக்கி எறிவதில் தொழிலாளி வர்க்கம் தலைமைப் பாத்திரம் வகிக்கும் என்பதையும் மார்க்ஸ் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இதன் தொடர்ச்சியாக, மானுட சமூகம் சோசலிசத்தையும் அதற்கு அடுத்து கம்யூனிசத்தையும் நோக்கி பீடுநடை போடும் என்று அவர் நமக்கு திசைவழி காட்டிச் சென்றுள்ளார். வரலாற்றையும், வரலாற்றுக் கட்டங்களையும் ஆண்டுகளிலோ, பத்தாண்டுகளிலோ, நூற்றாண்டுகளிலோ கூட, அளவிட முடியாது. முதலாளித்துவ உற்பத்தி அமைப்பு தோன்றி அது உலகம் முழுவதும் பரவவும், தனது இன்றைய ஆதிக்க நிலையை அடையவும் பல நூறு ஆண்டுகள் எடுத்துள்ளது என்பது நம்முன் உள்ள அனுபவம்.

வர்க்கச் சுரண்டலற்ற, சுய உணர்வுடன் தன்னை திட்டமிட்டு உருவாக்கிக் கொள்ளும் நியாயமான மானுட சமூகத்தை உருவாக மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப முயற்சிகள் ஏகாதிபத்திய - முதலாளித்துவ உலக சூழலில் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேர்ந்தது வியப்பல்ல. இம்முயற்சியின் நிரந்தர தோல்வியும் அல்ல. சோசலிசத்தை கட்டும் முயற்சிகள் இளம் சோசலிச நாடுகளை அழித்தொழிக்க ஏகாதிபத்தியம் செய்த அத்தனை ஈனத்தனமான முயற்சிகளுக்கு மத்தியிலும், மிகவும் பின் தங்கிய சூழலில் இருந்து பாய்ச்சல் வேகத்தில் முன்னேறின என்பது வரலாற்று உண்மை. தொழில்நுட்பம், சந்தைகள், நிதி, ஊடகம் என்று பலதுறைகளில் ஏகாதியபத்தியத்தின் ஏகபோக கிடுக்குப்பிடி இருந்தும் கூட, தொழில்நுட்பம் மறுக்கப்பட்டு, வணிக பகிஷ்கரிப்பையும் எதிர்கொண்டு, காலனிச் சுரண்டலின்றி, உழைக்கும் மக்களை புறக்கணிக்காமல், அனைவருக்கும் கல்வி, வேலை, ஆரோக்கியம், மகத்தான தொழில் வளர்ச்சி, உலக அமைதியையும் ஜனநாயகத்தையும் காக்க மகத்தான பங்களிப்பு இவை அனைத்தும் 20ஆம் நூற்றாண்டு சோசலிச முயற்சிகளின் சாதனைகள்.

இவற்றிற்கு வழிகாட்டியது மார்க்ஸின் தத்துவம், அரசியல் - பொருளாதாரம், சோசலிசப் பார்வை. நாம் இன்று மேற்கொண்டிருப்பது எதிர்மறையான உலகில், வீரமும் விவேகமும் மிக்க முயற்சிகளால் சோசலிசத்தை நிர்மாணிக்கும் வரலாற்றுப் பணியாகும். மானுட சமூகத்தின் சமகால முற்போக்கு சக்திகள் இப்பணியில் களம் இறங்கி உள்ளோம். இது மாபெரும் சவால். நம்முன் நீண்ட கடுமையான பயணம் உள்ளது. ஆனால் அதன் இறுதியில் மானுடம் அடையப் போவது மகத்தான விடுதலை. இந்த உன்னத இலட்சியத்திற்கு எவ்வளவு முயற்சி எடுத்தாலும் அது தேவையே, சிறந்ததே. சோசலிசத்தின் இறுதி வெற்றியை சாத்தியம் ஆக்கிட தலைமுறை தலை முறையாய் நாம் பாடுபடுவதே மார்க்சுக்கு நாம்செலுத்தும் சிறந்த அஞ்சலியாகும். தனது 17வது வயதில் மார்க்ஸ் எழுதினார்: மானுட முன்னேற்றத்திற்காக நமது வாழ்வை அர்ப்பணிப்பதே மிகச்சிறந்த வாழ்வாகும்வாழ்வில் அவ்வாறே வாழ்ந்து காட்டினார் அவர்.

No comments:

Post a Comment