இந்தியன் ஆயில் நிறுவனத்தின் (ஐ.ஓ.சி.) 10 சதவீத அளவுப் பங்குகளை பொதுத் துறை நிறுவனங்களுக்கு சலுகை விலையில் விற்பது தொடர்பாக மத்திய அமைச்சர் குழு கூட்டத்தில் இறுதி முடிவெடுக்கப்பட்டது. இதன் மூலம் ரூ. 5,300 கோடி திரட்ட இயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.ஓ.சி.யின் 10 சதவீத அளவுப் பங்குகளை விற்பது குறித்து அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் குழுவின் சிறப்பு கூட்டம் புது தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எண்ணெய்-இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் பங்கு விற்பனை குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத அளவுப் பங்குகளை (சுமார் 24.27 கோடி பங்குகள்), பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு அளிக்கத் தீர்மானிக்கப்பட்டது. இரு நிறுவனங்களும் தலா 5 சதவீத பங்குகளைப் பெறும். ஐ.ஓ.சி.யின் பங்கு விலையில் 10 சதவீத அளவு தள்ளுபடி விலையில் பங்குகளை அளிப்பது பற்றிய முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் வெள்ளிக்கிழமை காலையில் ஐ.ஓ.சி. பங்கின் விலை ரூ. 249 என்ற நிலையில் இருந்தது. இதையடுத்து, நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ. 60,456 கோடியாக உள்ளது.
சந்தை விலையை விட ஒரு சதவீதம் கூடுதலாகவோ குறைவாகவோ பங்கு விலையை நிர்ணயிக்கலாம் என்று ஜனவரி மாதம் நடைபெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஓ.என்.ஜி.சி. மற்றும் ஆயில் இந்தியா இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. கடந்த ஆறு மாதங்களில் ஐ.ஓ.சி. பங்கின் சராசரி விலையை மதிப்பிட்டு, பங்குகளை வாங்குவதாக அந்நிறுவனங்கள் தெரிவித்திருந்தன. இதையடுத்து, சந்தையில் நிலவும் பங்கு விலையில் 10 சதவீத தள்ளுபடி அளிக்க அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர் குழு தீர்மானித்தது. இந்த விற்பனை மூலம் ரூ. 5,300 கோடி திரட்ட இயலும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்: தினமணி