தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 22 October 2013

டாடா - பிர்லா - அம்பானி



சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று இந்திய அரசியல் சாசனம் கூறுகிறது. ஆனால் அதிகார வர்க்கம் இந்த வாசகத்தில் அடைப்புக்குறி போட்டு பெருமுதலாளிகள் நீங்கலாக என்று சேர்த்திருப்பார்கள் போலிருக்கிறது. இந்தியாவினுடைய கார்ப்பரேட் முதலாளிகள் விசயத்தில் சட்டம் சந்து பொந்துக்குள் சென்று பதுங்குகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலையீடு மட்டுமே சட்டத்தின் ஆட்சி மீது நம்பிக்கை தருவதாக உள்ளது. ஒடிசாவின் சம்பல்பூரில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த இரு நிலக்கரிச் சுரங்கங்களை தனது நிறுவனங்களுக்கு ஒதுக்குமாறு இந்தியாவின் கார்ப்பரேட் முதலாளிகளில் ஒருவரான குமாரமங்கலம் பிர்லா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட அந்த நிலக்கரிச் சுரங்கங்கள் முறையான அனுமதி ஒப்புதல் அரசாணை எதுவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தின் ஆணைப்படி நிலக்கரிச் சுரங்க முறைகேடு குறித்து விசாரித்து வரும் மத்திய புலனாய்வுத்துறை பிர்லா மீது முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்தது. உடனடியாக பிரதமரே தலையிட்டு பிர்லாவை அழைத்து சமாதானம் செய்யுமாறு மத்திய நிதி அமைச்சர் .சிதம்பரத்திற்கு ஜாடை காட்டியிருக்கிறார். நிதியமைச்சரை சந்தித்துவிட்டு திரும்பிய பிர்லா சிபிஐ வழக்கு குறித்து கவலையில்லை என்று பேட்டி கொடுக்கிறார். மற்றொரு மத்திய அமைச்சரான ஆனந்த்சர்மா பிர்லாவின் நேர்மையை யாரும் சந்தேகிக்கக்கூடாது என்று வெளிப்படையாக பிர்லாவுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறார். முதலாளிகளுக்கு காவடி தூக்கும் பாஜகவும் பிர்லாவை ஆதரிக்கிறது. எதிர்க்கட்சித் தலைவரான அருண்ஜெட்லி, பிர்லா மீதான நடவடிக்கை முதலீட்டாளர்களின் உணர்வுகளைப் பாதிக்கும் என்று கண்ணீர் வடிக்கிறார். 

முதலாளிகள் அமைப்பு அனைத்தும் பிர்லா மீது வழக்கு தொடுத்ததை கண்டித்துள்ளன. மற்றொரு பெருமுதலாளியான டாடா, கார்ப்பரேட் தரகரான நீரா ராடியாவின் டேப் உரையாடல்களை வெளியிடக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். எலி ஏன் நிர்வாணமாக ஓடுகிறது என்பது இப்போது தெளிவாகிவிட்டது. நீரா ராடியா உரையாடல்களை ஆய்வுசெய்தபோது 17 உரையாடல்களில் குற்றத்தன்மையும் முறைகேடும் இருப்பது உறுதியாகியுள்ளது. 

அரசு அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆதாயமடைந்துள்ளன என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளதோடு டாடா, முகேஷ் அம்பானி போன்றவர்களிடம் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தாழ்தள சொகுசுப் பேருந்து என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட டாடா நிறுவன தயாரிப்பு பேருந்துகள் விவகாரமும் சம்பந்தப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து பெருமுதலாளிகள் கொள்ளையடித்துள்ளனர். இவர்களிடையே இடைத்தரகராக நீரா ராடியா செயல்பட்டிருக்கிறார். 

பிர்லாவுக்கு நிலக்கரிச் சுரங்கம் கொடுத்தது, டாடாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியது, அம்பானிகளுக்கு நாட்டின் செல்வத்தை அள்ளி வழங்கியது என பல விவகாரங்கள் திட்டமிட்டு மூடி மறைக்கப்படுகின்றன. உச்சநீதிமன்றம் ஒளி பாய்ச்சி உண்மைகளை நாட்டுக்குச் சொல்ல வேண்டும்
நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment