தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 17 October 2013

நிலக்கரி சுரங்க ஊழல் பிரதமரும் சதிகாரர்தான் நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் குற்றச்சாட்டு



நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழலில் நான் சதிகாரன் என்றால் பிரதமர் மன்மோகன் சிங்கும் சதிகாரர்தான். ஏனென்றால் இந்த விஷயத்தில் இறுதி முடிவை அவரே எடுத்தார் என்று நிலக் கரித்துறை முன்னாள் செயலாளர் சி.பரேக் கூறியுள்ளார். நிலக்கரி சுரங்க முறைகேடு தொடர்பாக தொழிலதிபர் குமார் மங்கலம் பிர்லா, நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் பரேக் ஆகியோர் மீது மத்திய புலனாய்வுத்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. பரேக் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப் பட்டவுடன் மும்பை, தில்லி, ஐதராபாத், புவனேஸ்வரம் ஆகிய இடங்களிலும் பரேக்கின் இல்லத்திலும் சோதனை நடத்தப்பட்டது. இதுகுறித்து ஐதராபாத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் நிலக்கரி சுரங்கம் ஒதுக்கப்பட்டதில் எவ்வித முறைகேடும் இல்லை. என்மீதும் பிர்லா மீதும் மத்திய புலனாய்வுத்துறை ஏன் வழக்கு பதிவு செய்துள்ளது என்று எனக்குத் தெரியவில்லை என்று கூறிய அவர் இந்த விஷயத்தில் பிர்லா சதிசெய்தார் என்றால் அவர் முதல் சதிகாரர், நான் சதி செய்தேன் என்றால் நான் இரண்டாவது சதிகாரன். அனைத்து இறுதி முடிவுகளையும் எடுத்த பிரதமர் மன்மோகன் சிங்கை மூன்றாவது சதிகாரராக இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று அவர் கூறினார். நிலக்கரித்துறை அமைச்சராக இருந்த சிபு சோரன் ராஜினாமா செய்த பிறகு நிலக்கரித்துறை தொடர்புடைய அனைத்து முடிவுகளையும் பிரதமர் மன்மோகன் சிங்கே எடுத்தார் என்று அவர் கூறி யுள்ளார்.

பிரதமர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனைத்து முடிவுகளிலும் தொடர்பு உண்டு என்று அவர் கூறியுள்ளார். ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் .ராசா, அலைவரிசைக் கற்றை ஒதுக்கீடு தொடர்பான முடிவுகளுக்கு பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் .சிதம்பரம் ஆகியோர் ஒப்புதல் அளித்தனர். எனவே அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அவர்களை விசாரிக்கவில்லை.

மாறாக அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கியது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க ஊழல் விஷயத்திலும் பிரதமர் மன்மோகன் சிங்கே இறுதி முடிவு எடுத்தார் என்று இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பரேக் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, மத்திய அமைச்சர் மணீஷ் திவாரி கூறுகையில், இந்த வழக்கு விசாரணை உச்சநீதி மன்றத்தின் மேற்பார்வையின் கீழ் நடந்து வருகிறது. விசாரணைக்கு அரசு முழுமையாக ஒத்துழைக்கும் என்றார். நிலக்கரி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிர்லா மற்றும் பரேக்கிடம்  சிபிஐ விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment