உத்தப்புரம் தீண்டாமைக் கொடுமை
உள்ளிட்ட பல்வேறு சமூகக்கொடுமைகளுக்கு எதிராக போராடியவரும், பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தலித் தலைவர்கள் தேர்தலின் மூலம் பொறுப்பேற்கும் வகையில் நடத்தப்பட்ட போராட்டத்திற்கு முன்னணியில் நின்றவருமான, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் - தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் தோழர் எம்.தங்கராஜ் சாலை
விபத்தில் திங்களன்று காலமானார்.
அவருக்கு வயது 51. மதுரை அருகே உள்ள திருமங்கலம் பகுதியில் கட்சிப்பணியாற்றி விட்டு அக்-27 ம் தேதி சொந்த ஊருக்குத் திரும்பும் போது செக்கானூரணி அருகே உள்ள சிக்கம்பட்டியில் தோழர் தங்கராஜ் சாலைவிபத்தில் சிக்கினார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை கே.கே.நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடைபெற்றது. இந்த நிலையில் திங்களன்று நள்ளிரவு அவர் மரணமடைந்தார்.
வாலிபர் இயக்கத்திலிருந்து: தோழர் எம்.தங்கராஜ், கருமாத்தூர் அருகே உள்ள நத்தப்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி, மாயக்காள் ஆகியோரின் மகனாவார். 8 ஆம் வகுப்பு வரை படித்த அவர், ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவராவார். சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியில் இணைந்து தனது இடதுசாரி இயக்கப்பணியைத் துவக்கிய அவர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் உசிலம்பட்டி தாலூகா செயலாளராக பணியாற்றியுள்ளார்.
இதன்
பின் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத் துக்கொண்ட தங்கராஜ், மாவட்டக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வந்தார்.
பாப்பாபட்டி,கீரிபட்டி, நாட்டாமங்கலம் ஆகிய கிராமங்கள் தலித் மக்களுக்கான ஊராட்சிகளாக இருந்த நிலையில் சாதி ஆதிக்கவெறியர்களின் காரணமாக தொடர்ந்து ஜனநாயக ரீதியாக தேர்தலை நடத்தமுடியாத நிலை இருந்து வந்தது. இந்த மூன்று கிராமங்களிலும் தேர்தல் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
நடத்திய போராட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவரான தோழர் எம்.தங்கராஜ், முன்னணிப் பங்கு வகித் தார்.
இந்த தேர்தலை சிறப்பாக நடத்திய மாவட்ட ஆட்சியருக்கு நடத்திய பாராட்டு விழாவில் எம்.தங்கராஜ் உள்ளிட்டோர் பாராட்டப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்புமுன்னணியின் மதுரை மாவட்டச் செயலாளராக பணியாற்றி வந்த எம்.தங்கராஜ், மதுரை மாவட்டத்தில் நிலவும் தீண்டாமைக்கொடுமைகள் குறித்த கள ஆய்வை நடத்தினார். இந்த ஆய்வின் போது தான் உசிலம்பட்டி அருகே உள்ள உத்தப்புரத்தில் தலித் மக்களைப் பிரிக்கும் தீண்டாமை சுவர் கட்டப்பட்டது தெரியவந்தது. இந்த சுவரை அகற்ற வேண்டும் என்று நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை வகித்தார். உத்தப்புரம் தலித் மக்களுக்கு நீதிகேட்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த முற்றுகைப்போராட்டத்தில் பங்கெடுத்த எம்.தங்கராஜ் உள்ளிட்ட தலைவர்கள் காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் நடைபெற்ற தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பல்வேறு இயக்கங்களில் பங்கெடுத்த எம்.தங்கராஜ், அமைப்பின் மாநிலச்செயலாளராக பணியாற்றி வந்தார். தனது மரணத்திற்கு முந்தைய நாள், அக்டோபர்
26 ம் தேதி உசிலம்பட்டியில் பளியர் இன சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து அங்கு நேரடியாகச்
சென்று எம்.தங்கராஜ் ஆய்வு நடத்தியதன் விளைவாக மூன்று பேர் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. தலித் மக்களின் விடுதலைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காவும் தலித் அமைப்புகளுடன் இணைந்து பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர் எம்.தங்கராஜ். அவருக்கு தமிழ்ச்செல்வி என்ற மனைவியும், அனாமிகா என்ற மகளும், அனுசீலன் என்ற மகனும் உள்ளனர்.
கண்ணீர் அஞ்சலி : தோழர் தங்கராஜின் இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று அவரது சொந்த ஊரான நத்தப்பட்டியில் நடந்தது. உத்தப்புரம் தலித் மக்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள், ஊழியர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
No comments:
Post a Comment