தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 24 August 2013

சரித்திர சாதனை!

சுதந்திர இந்தியாவில் இதுவரை 14 பிரதமர்கள் பதவி வகித்திருக்கிறார்கள். அவர்கள் யாருக்குமே இல்லாத பெருமைகள் இன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மட்டுமே உண்டு. தனது ஒன்பது ஆண்டு பதவிக் காலத்தில், இதற்கு முன் எந்தப் பிரதமரின் ஆட்சியிலும் இல்லாத அளவுக்கு ஊழல்களும் முறைகேடுகளும் நடந்திருக்கின்றன என்று அவர் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். அதைவிடப் பெரிய சாதனை, ஒரு மிக முக்கியமான வழக்கு விசாரணையுடன் தொடர்புடைய 257 கோப்புகளை காணவில்லை, மாயமாக மறைந்து விட்டன என்று கிஞ்சித்தும் கூச்சமில்லாமல் சொல்லும் முதல் அரசும் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகத்தான் இருக்கும்.

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு விவகாரத்தில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 257 கோப்புகள் சொல்லி வைத்தாற்போல காணாமல் போவது என்பது எப்படி நடந்திருக்க முடியும்? மாயமாய் மறைந்துவிட்ட 257 கோப்புகளில், 157 கோப்புகள், நரசிம்மராவில் தொடங்கி அடல் பிகாரி வாஜ்பாய் வரையிலான நான்கு பிரதமர்கள் பதவியில் இருந்த 1993 முதல் 2004 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பானவை. ஏனைய 100 கோப்புகள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்தவை. இதில் வேடிக்கை என்னவென்றால், 2006 முதல் 2009 வரை, சம்பந்தப்பட்ட துறை, நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்கின் பொறுப்பில் இருந்தது என்பதுதான்.

இந்தக் கோப்புகள் என்னென்ன பிரச்னைகள் தொடர்பானவை தெரியுமா? நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான விண்ணப்பங்கள், அந்த விண்ணப்பங்கள் பற்றிய விவரங்கள், நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள் என்ன காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன என்பது தொடர்பான குறிப்புகள், சுரங்க ஒதுக்கீட்டிற்காக என்னென்ன விதிமுறைகளும், வரைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட்டன என்கிற விவரங்கள், ஒதுக்கீடு பெறப்பட்டதால் லாபமடைந்த நிறுவனங்களும் அவர்களது பின்னணியும், மாநில அரசு அல்லது மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் இன்னாருக்கு ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கோரும் பரிந்துரைகள் போன்றவைதான் காணாமல்போன கோப்புகளில் காணப்பட்ட விவரங்கள்.


உதாரணத்திற்கு, காங்கிரஸ் எம்.பி. நவீன் ஜிண்டாலின் நிறுவனம் அளித்திருந்த தவறான தகவல்கள், இன்னொரு காங்கிரஸ் எம்.பி.யான விஜய் தாப்தாவின் கோரிக்கையைப் பரிசீலிக்கும்படி பணித்த மாநில, மத்திய அரசுகளின் பரிந்துரைகள் போன்றவையும் இந்த காணாமல்போன கோப்புகளில் காணப்பட்டவைதான்.

ஆரம்பம் முதலே, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான சி.பி..யின் விசாரணையை முடக்கவும், தடம் புரளச் செய்யவும் என்னென்ன செய்ய முடியுமோ அதை எல்லாம் அரசு செய்து வந்திருக்கிறது. இதனை உணர்ந்துதான் உச்ச நீதிமன்றம் தனது நேரடிக் கண்காணிப்பில் சி.பி.. இந்த விசாரணையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டது.

அப்படியும்கூட, சி.பி.. உச்ச நீதிமன்றத்திற்கு அளித்த வழக்கு நிலவர வரைவு அறிக்கையை சட்ட அமைச்சரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் மாற்றியும் திருத்தியும், அந்த அறிக்கையை நீர்த்துப்போகச் செய்தனர் எனும்போது, இப்போது ஒட்டுமொத்தமாக கோப்புகளே காணாமல் போயிருப்பதாகக் கூறுவதில் வியப்பொன்றும் இல்லை.

அது மத்திய அரசோ, மாநில அரசோ பிரிட்டிஷாரால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய நிர்வாக அமைப்பின் சிறப்பே, தேவைப்படுகிற எந்தவொரு கோப்பையும் 24 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்து விடலாம், நகலெடுத்து விடலாம் என்பதுதான். ஒவ்வொரு கோப்பும் ஒன்றுக்கு நான்கு இடங்களில் பதிவாகும் விதத்தில் அமைந்ததுதான் இந்திய நிர்வாக அமைப்பு. ஆனால், அரசு கூறுகிறது, குறிப்பிட்ட 257 கோப்புகள் சம்பந்தப்பட்ட எல்லா தடயங்களும் மறைந்துவிட்டன என்று.

கோப்புகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தேடுதல் குழு ஒன்று அமைத்தார்கள். அந்தக் குழுவின் பரிந்துரை என்ன தெரியுமா? விண்ணப்பித்தவர்களிடமிருந்து அவர்கள் கொடுத்த தகவல்களை மறுபடியும் கேட்டு வாங்கலாம் என்பது. குற்றவாளியிடம் காரணம்கூறச் சொல்லும் கதையாக அல்லவா இருக்கிறது இது!

கோப்புகளைக் காணவில்லை என்றால் உடனே என்ன செய்ய வேண்டும்? அதைப் பாதுகாக்கத் தவறியவர்கள்மீது நடவடிக்கை எடுப்பதுதானே நியாயம்? கோப்புகளைத் தேடி எடுக்கக் குழுவை அமைத்திருக்கிறார்களே தவிர, அதற்குப் பொறுப்பான அதிகாரிகளைக் கைது செய்து விசாரணை நடத்தவில்லையே, ஏன்? இதிலிருந்தே எதையோ மறைக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிகிறது.

பிரதமர் உள்ளிட்ட முக்கியமான நபர்கள் மாட்டிக் கொள்வதைவிட கோப்புகளைத் தொலைத்ததற்கு உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தையும், எதையும் மறந்துவிடும் மக்கள் மன்றத்தின் விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது என்று முடிவெடுத்து விட்டார்களோ என்னவோ?

மிக முக்கியமான கோப்புகளைக்கூட பத்திரமாகப் பாதுகாக்கத் தெரியாத அரசின் பாதுகாப்பில் 120 கோடி இந்தியர்களின் தலையெழுத்தும் வருங்காலமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றம் நடந்தால் என்ன நடக்காமல் முடங்கினால்தான் என்ன?

......நன்றி: தினமணி

No comments:

Post a Comment