தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday, 2 August 2013

தடம் புரண்ட அரசின் தறிகெட்ட வேகம்



மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியை விட்டுச் செல்ல இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில் நாட்டின் பொருளாதாரத்தைக் காவு கொடுப்பதில் வேகம் காட்டி வருகிறது. ஏற்கனவே, ஜனநாயக இயக்கங்களின் எதிர்ப்புகளைப் புறக்கணித்து சில்லரை விற்பனையில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு அனுமதியளிக்கும் நடவடிக்கையை விசுவாசத்துடன் எடுத்தது. பன்னாட்டு நிறுவனங்கள் நாட்டின் வளத்தை சுரண்ட வழிவகுத்தது. அப்படியும் பசியடங்காத பன்னாட்டு லாப வேட்டைக்காரர்கள் திருப்திப்படாத நிலையில், தற்போது இருக்கிற சில கட்டுப்பாடுகளையும் தளர்த்த முடிவு செய்திருக்கிறது அரசு.


சில்லரை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்டை அனுமதித்தபோது உள்நாட்டு எதிர்ப்பை சமாளிக்க சில விதிகள் சேர்க்கப்பட்டன. சிறு வர்த்தகத்திற்திற்கான அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்துவதில் முதலீடு, கொள்முதல் செய்யும் விற்பனைப் பொருட்களில் 30 விழுக்காட்டை இந்தியாவின் குறு - சிறு - நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் என்பது ஒரு விதி. அதை நீக்கக் கெடுபிடி செய்த வால்மார்ட் போன்ற நிறுவனங்கள் வேண்டுமென்றே தங்கள் கிளைகளை அமைக்காமல் இழுத்தடித்தன. இப்போது அந்த விதியை நீக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது.


பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரத்தில் மட்டுமே பல் பொருள் வணிகத்தில் பன்னாட்டு நிறுவன வளாகங்கள் அனுமதிக்கப்படும் என்ற விதியையும் தளர்த்துமாறும் நிர்ப்பந்திக்கப்பட்டது. அதற்கும் மத்திய அரசு தயாராகிவிட்டது. சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடுகளை வர வழைத்தால் குறு - சிறு - நடுத்தர தொழில்கள் பாதுகாக்கப்படும் என்று நியாயப்படுத்தியவர்கள் இப்போது என்ன சொல்லப்போகிறார்கள்? பாதுகாப்பு துறையில் தற்போதுள்ள நேரடி அந்நிய முதலீட்டு வரம்பை 24 விழுக்காட்டில் இருந்து 49 விழுக்காடாகவும், தொலைத் தொடர்புத் துறையில் 74 விழுக்காட்டை 100 விழுக்காடாகவும் உயர்த்த முடிவு செய்துள்ளது.


இந்த முடிவுக்கு ஏற்கனவே உள்துறை அமைச்சகமே தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. சக அமைச்சகத்தின் எச்சரிக்கையையும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஏற்கெனவே வங்கித் துறையில் தனியாரை அனுமதித்த காரணத்தால் எச்டிஎப்சி, எச்எஸ்பிசி போன்ற தனியார் வங்கிகளில் தீவிரவாத அமைப்புகளின் பணம் புழங்குவதும் சட்டவிரோதமான வழிகளில் வரும் பணத்தை சுவிஸ் வங்கிகளில் போடு வதற்கு அவ்வங்கிகள் உதவி செய்வதும் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் அமலாக்கப் பிரிவு விசாரணையில் உள்ளது. தற்போதுள்ள இணையத் தொடர்புகளைப் பயன்படுத்தி இந்தியா உட்பட பல நாடுகளில் அமெரிக்க என் எஸ் ஏ நிறுவனம் உளவு பார்த்த விவகாரம் வெளி யாகியிருக்கிறது.


இதன் பின்னரும் தொலைத்தொடர்பு மற்றும் பாதுகாப்பு துறையில் மத்திய அரசு நேரடி அந்நிய முதலீட்டு வரம்பை அதிகரிக்க முடிவு செய்கிறது என்றால், அது முதலீடுகளை ஈர்ப் பதில் அரசுக்கு உள்ள அக்கறை என யாரும் நம்ப மாட்டார்கள். தற்சார்புள்ள பொருளாதாரத்தை வளர்ப்பதில் தோல்வியடைந்த அரசின் தடம்புரண்ட நடவடிக்கைகள் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.

நன்றி - தீக்கதிர்

No comments:

Post a Comment