வசதி படைத்தவர்கள் அந்நிய கரன்சியில் முதலீடு செய்து வருவதும் இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ந்த வண்ணம் உள்ளது. இதனால் அனைத்து பொருட்களின் விலைவாசியும் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை மேலும் உயரும் என்று அபாய சங்கு ஊதப்படுகிறது.
இந்நிலையில் புதுதில்லி யில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீத்தாராம் யெச்சூரி, இந்திய நாட்டில் உள்ள வசதிபடைத்தவர்கள் அந்நிய கரன்சியில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்தியப் பொருளாதாரத்தின் மீது அவர்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இதற்கு காரணம் இந்திய பொருளாதாரத்தின் உள் நாட்டுத் தேவை உயராததே ஆகும் என்று கூறினார்.இப்போதைய உடனடி நடவடிக்கையாக வசதி படைத்தவர்களுக்குத் தரும் சலுகையை நிறுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் வரிச்சலுகை என்ற பெயரில் வசதிபடைத்தவர்களுக்கு ஐந்து லட்சம் கோடி அளவிற்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. வசதி படைத்தவர்கள் தங்களது பணத்தை தங்கம், பங்குச் சந்தை, நில வணிகம் போன்றவற்றில் முதலீடு செய்கிறார்கள். தங்களுக்கு கிடைக்கும் சலுகையைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை பெருக்கவோ, வேலைவாய்பை அதிகரிக்கவோ அவர்கள் முயலவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், நாட்டில் பொருளாதார அவசர நிலை ஏற்பட்டுள்ளது. இப்போதுள்ள சூழ் நிலைமையை சமாளிக்க மத்திய அரசிடம் அரசியல் உறுதி இல்லை என்று குற்றம்சாட்டினார். பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், மன்மோகன் சிங் அரசு இந்தியப் பொருளாதாரத்தை தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்த்துள்ளது என்றார். பாஜகவின் மற்றொரு தலை வரான ஜஸ்வந்த் சின்கா கூறுகையில், நிலைமையை சீர்செய்ய முடியவில்லை என்றால் மன்மோகன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.
இதனிடையே மத்திய நிதி அமைச்சகம் நிலைமை தானாகவே சீராகிவிடும். மக்கள் பீதியடையவேண்டாம் என்று கூறியுள்ளது. பொருளாதார ஆலோசகர் அரவிந்த் மாயாராம் கூறு கையில், சமச்சீரற்ற உணர்ச் சிக் கொந்தளிப்பும் இப் போதுள்ள நிலைமைக்கு காரணமாகும். யாரும் பீதியடைய வேண்டியதில்லை. இது தானாகவே சரியாகி விடும் என்றார்.
மேலும் சரிவு : இதனிடையே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு புதனன்று மேலும் சரிவடைந்து ரூ.68 ஆக குறைந்தது. வங்கிகள் அந்நிய செலாவணி பரிவர்த்தனை (பாரக்ஸ்) சந்தையில் முந்தைய தினம் ரூபாயின் மதிப்பு 66.24ஆக இருந்தது. அது மேலும் சரிவடைந்து ரூ. 68 என்ற மிக மோசமான நிலையை எட்டியது. 1.8 சதவீதம் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment