புதுதில்லி, ஆக.1- அரசியல் தரகர் நீரா ராடியாவின் உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஐந்து ஆண்டுகள் ஆகியுள்ளது. இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு உரிமம் ஒதுக்குவதில் அரசியல் தரகராக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டவர் நீரா ராடியா. இவர் நிறுவனம் ஆரம்பித்து 9 வருடங்களுக்குள் ரூ.300 கோடி அளவிற்கு நிறுவனத்தை விரிவுபடுத்தியுள்ளதாக கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் 16ம் தேதி மத்திய நிதியமைச்சகத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து நீரா ராடியாவுடன் யாரெல்லாம் பேசுகிறார்கள் என்பது குறித்து அறிந்து கொள்வதற்காக அவரது தொலைபேசி உரையாடல்களை கண்காணிக்க
நிதியமைச்சகம் உத்தரவிட்டது.
இதில், முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி, பெரு முதலாளிகளான ரத்தன் டாடா, அனில் அம்பானி மற்றும் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலருடன் அவர் உரையாடியுள்ளார். இதனையடுத்து வருமான வரித்துறையினர், கடந்த 2008ம் ஆண்டு ஆகஸ்ட் 20ம் தேதி முதல் 60 நாட்களும், அக்டோபர் 19ம் தேதி முதுல் 60 நாட்களும், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி முதல் 60 நாட்களும் நீரா ராடியாவின் உரையாடல்களைப் பதிவு செய்தனர். ஆனால், அதன்பிறகு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.இதுகுறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்க்வி மற்றும் வி.கோபால் கவுடா தெரிவிக்கையில், நீரா ராடியாவின் டேப்புகள் கண்காணிக்கும் பணிகள் துவங்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசு அதிகாரிகள் இவ்விவகாரத்தில் மெத்தனமாக இருக்கின்றனர். ராடியா மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்த அரசு அதிகாரிகள் இதுவரை என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளனர்? அல்லது அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்காக காத்துக் கொண்டிருக்கின்றனரா? என்று கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு தான் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மகிழ்ச்சியானதல்ல என்றும் தெரிவித்தனர்.நீரா ராடியாவின் உரையாடல்களை பரிசோதித்த அதிகாரிகளின் பெயர்களை தெரிவிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், உரையாடல்களை பரிசோதித்த அதிகாரிகள் அதில் அடங்கியுள்ள பேச்சுவார்த்தைகள் குறித்து தங்களது உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தனரா? என்று கேள்வியெழுப்பினர். மேலும், உரையாடல்களின் அசல் பதிவுகளையும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து இவ்வழக்கில் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment