தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 3 September 2013

இருட்டு நம்பிக்கை உதவாது!



இரவு நேரத்தில் பெட்ரோல் பங்க் மூடுவதால், அன்னியச் செலாவணியைக் குறைத்துவிடலாம் என்கிற இருட்டு நம்பிக்கைக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு ஏற்பட்டவுடன், "அத்தகைய முடிவை அரசு மேற்கொள்ளவில்லை. இது வெறுமனே மக்கள் அளித்த யோசனைதான்' என்று தட்டைத் திருப்பிப் போடுகிறார் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

இப்போதைய நடைமுறையிலேயே, நகரங்களில் இரவு நேரத்தில் திறந்திருக்கும் பெட்ரோல் பங்க்குகளை விரல்விட்டு எண்ணிவிடலாம். நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறந்து இருக்கின்றன. இந்தச் சூழ்நிலையில் இத்தகைய யோசனையை மக்கள் சொன்னார்கள் என்று சொல்வதே ஒரு போலித்தனம்.

சில நாள்களுக்கு முன்பு "அசோசெம்" மாநாட்டில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், "நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சரிசெய்ய முதல் நடவடிக்கையாகத் தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி அளவைக் குறைத்தாக வேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தார். 2012-13 நிதியாண்டில் பொருள்கள் இறக்குமதி 195 பில்லியன் டாலராக இருந்தது என்றால், பெட்ரோலியப் பொருள்கள் மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி 109 பில்லியன் டாலராகவும், தங்கம் இறக்குமதி 47 பில்லியன் டாலராகவும் இருந்தன. பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதியைக் குறைக்க வேண்டியது அவசியம் என்பதில் யாருக்குமே கருத்து வேறுபாடு இருக்க முடியாது.

அதிகமான அன்னிய செலாவணியைக் கொடுத்து பெட்ரோலிய கச்சா எண்ணெயை பெருமளவு இறக்குமதி செய்து, அதை மானியத்தில் மக்களுக்கு வழங்குகிறது மத்திய அரசு. ஆனால், இந்த பெட்ரோலியப் பொருளை பயன்படுத்துவோர் யார்? அதிகம் வீணடிப்பது யார்?


இந்தியாவில் 2011-12-ஆம் ஆண்டில் சுமார் 27 லட்சம் பயணியர் வாகனங்கள் (பஸ், கார்) தயாரிக்கப்பட்டுள்ளன. இது 2005-06-ஆம் ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு. 2011-12 ஆண்டில் தயாரிக்கப்பட்ட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கையும் 1.34 கோடி. இதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட அளவைப்போல் இரு மடங்கு. போக்குவரத்து நெரிசலால் சாலைகள் திணறும் அளவுக்கு வாகனப் பெருக்கம் இந்தியாவுக்கு தேவைதானா?

உலகிலுள்ள எல்லா மோட்டார் கார் நிறுவனங்களும் இந்தியாவில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முன்வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. அடடா, ஹுண்டாயிலிருந்து பென்ஸ் நிறுவனம்வரை இங்கே தங்கள் மோட்டார் வாகனங்களைத் தயாரித்து ஏற்றுமதி செய்யப் போகிறார்கள், அதனால் பலருக்கு வேலைவாய்ப்பும், இந்தியாவுக்கு அன்னியச் செலாவணியும் கிடைக்கப் போகிறது என்று அகமகிழ்ந்தோம். ஆனால் நடந்தது என்னவோ தலைகீழாக!

ஆளுக்கு ஆள் போட்டி போட்டுக் கொண்டு உலகிலுள்ள எல்லா மோட்டார் கார் நிறுவனங்களும் தங்களது தயாரிப்புகளை உள்நாட்டில் விற்பனை செய்வதில்தான் முனைப்புக் காட்டின. இவர்களுக்கு உதவுவதற்காகப் பன்னாட்டு வங்கிகளுக்கும் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. விளைவு? இந்தியர்கள் வீண் ஜம்பத்திற்காகக் கார்களையும், இரு சக்கர வாகனங்களையும் தவணையில் வாங்கிக் கடனாளிகளாகக் காலம் தள்ளுகிறார்கள். பெட்ரோல் போடப் பணமில்லாமல் பொதுப் போக்குவரத்தில் பயணிப்பவர்களும், தவணை அடைக்க முடியாமல் வாகனங்களை இழப்பவர்களும் லட்சக்கணக்கில்!

பெட்ரோல் டீசலை சேமிக்க ஐரோப்பா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யோசனைகள் என்னென்ன?

பொதுமக்கள் பயணம் செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், சிறு தூரங்களை மிதிவண்டியில் (சைக்கிளில்) சென்றடைவதை ஊக்குவித்தல், குறைந்த எரிபொருளில் இயங்கும் ஊர்திகளையும், கதிரொளியில் இயங்கும் வாகனங்களையும் ஊக்குவித்தல் ஆகியவைதான். மேலும்,பொதுவாகனங்களை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவதை ஊக்குவிக்க, கட்டணங்களைக் குறைத்து நிர்ணயிக்கிறார்கள். இந்தியாவில், அரசுப் பேருந்துகளுக்கு வழங்கப்படும் டீசல் விலை அதிகம். இந்நிலையில் அரசுப் பேருந்துகளைக் குறைந்த கட்டணத்தில் எப்படி இயக்க முடியும்?

முதலில், தனியாருக்கு இருசக்கர வாகனங்களுக்கும், சொகுசுக் கார்களுக்கும் கண்மூடித்தனமாக வழங்கப்படும் தவணை முறைக் கடன் நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவதாக, குறைந்த கட்டணத்தில் நிறைந்த வசதிகளுடன் பொதுப்போக்குவரத்து அதிகரிக்கப்பட வேண்டும். திறம்பட நடத்தப்படவும் வேண்டும்.

மூன்றாவதாக, எரிவாயு உருளைகளைப் பொருத்தவரை வணிகப் பயன்பாட்டுக்கு ஒரு விலையும், வீட்டுப் பயன்பாட்டுக்கு ஒரு விலையும் நிர்ணயித்திருப்பதைப் போல பெட்ரோல் டீசலையும் வணிகப் பயன்பாடு, தனிநபர் சொகுசுப் பயணம், தனிநபர் பயன்பாடு, அரசுப் போக்குவரத்து என ஒவ்வொரு பிரிவுக்கும் விலையை தனித்தனியாக நிர்ணயித்து, கட்டுப்படுத்தும் நடைமுறை இருந்திருந்தால், பெட்ரோல் டீசல் பயன்பாடு குறைந்திருக்கும். பொது வாகனங்களை மக்கள் பயன்படுத்தும் நிலைமை தானே உருவாகியிருக்கும்.

109 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலியப் பொருள்கள் யாரால் அதிகம் வீணடிக்கப்படுகிறது? அதைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியும்.

பெட்ரோல் பயன்பாட்டை மக்கள் குறைத்துக்கொள்ளும் சாதனையை, ரூ.17 கோடி செலவில் வீதி நாடகத்தாலும், விழிப்புணர்வு பிரசாரத்தாலும் செய்துவிட முடியும் என்று அரசு நினைத்தால் அது மடமை.

No comments:

Post a Comment