தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Tuesday 24 September 2013

ஆதார் அட்டை கட்டாயமில்லை : உச்சநீதிமன்றம் அதிரடிசமையல் எரிவாயு சிலிண்டர் பெறுவது உள்பட அனைத்து அத்தியாவசியத் தேவைகளைப் பெறுவதற்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. தமிழகம் உள்பட பல் வேறு மாநிலங்களிலும் ஆதார் அடையாள அட்டை இருந்தால்தான் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் சப்ளை உட்பட பல்வேறு அத்தியாவசிய சேவைகளைப் பெற முடியும் என்ற நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தப் பின்னணியில் உச்சநீதிமன்றத்தின் மேற்கண்ட தீர்ப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. நாட்டின் அனைத்து மக்களையும் ஆதார் அடையாள அட்டை திட்டத்தின் கீழ் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர்களில் ஒருவரான நந்தன் நீல்கனி தலைமையில் ஒருங்கிணைந்த அடையாள ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் நாட் டின் பல மாநிலங்களை தேர்வு செய்து ஆதார் அடை யாள அட்டை வழங்கும் பணியை துவங்கியது.

ஆனால் அந்தப் பணி எங்குமே முழுமையடையவில்லை. பல மாநிலங்களில் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்குக் கூட இன்னும் அட்டை வழங்கப் படவில்லை. பல மாநிலங்களில் புகைப்படம் எடுக்கும் அடிப்படை பணி கூட துவங்கவில்லை. இந்நிலையில் ரேசன் பொருட்கள், முதியோர் பென்சன், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகளை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்ற அறிவிப்புகள் பல இடங்களில் வெளியாகி யுள்ளன.

தமிழகத்திலும் சோதனை முறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் சேவையை ஆதார் அடையாள அட்டை திட்டத்துடன் இணைத்துள்ளனர். சமையல் எரிவாயுக்கு அரசு அளிக்கும் மானியத்தை நேரடி பணப்பட்டு வாடா திட்டத்தின்கீழ் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. எனினும் மாநிலம் முழுவதும் இதற்கான பணிகள் நடைபெறாத நிலை உள்ளது. இத்தகைய பின்னணியில் சமீபத்தில் ஓய்வுபெற்ற கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.புட்ட சுவாமி, ஆதார் அட்டை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஒருங்கிணைந்த அடையாள ஆணையத்தை உருவாக்கும்போது அத்தியாவசியச் சேவை களுக்கு இந்த அவசியம் இல்லை என்று மத்திய அரசு கூறியிருந்தது; ஆனால் தற்போது ஒவ்வொரு சேவைக்கும் ஆதார் அட்டை அவசியம் என்று கூறுவது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது என அவர் தனது மனுவில் கூறியிருந்தார். மேலும் ஆதார் அட்டை வழங்கும் பணியில் இந்தியாவில் எந்தப் பகுதியிலும் முழுமை பெறாத நிலையில் அதை கட்டாயப்படுத்துவது சரியல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.சவுகான், எஸ்.. பாப்டி ஆகியோர் அடங்கிய அமர்வாயம், “அத்தியாவசியச் சேவைகளை அளிப்பதற்காக எந்தவொரு குடிமகனிடமிருந்தும் ஆதார் அட்டை கட்டாயம் என்று மத்திய, மாநில அரசுகள் நிர்ப்பந்திக்கக்கூடாதுஎன்று உத்தரவிட்டனர்.

மேலும், சட்டவிரோதமாக நாட்டிற்குள் வரும் நபர்களுக்கு ஆதார் அட் டை வழங்காமல் கண் காணிக்க வேண்டியதும் மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆதார் அட்டை திட் டத்திற்காக ரூ.50ஆயிரம் கோடி செலவழிக்கப்பட் டுள்ளது என்று இந்த வழக்கில் மத்திய அரசு தனது தரப்பு நியாயத்தை முன் வைத்தது. ஆனால் அதை நீதிமன்றம் நிராகரித்தது. அத்தியாவசியமான எந்தச் சேவைக்கும் ஆதார் அடை யாள அட்டை கட்டாயமில்லை என்றும் உறுதி செய்தது.

1 comment:

  1. குற்றவாளியாகும் குடிமக்களே..!

    ஆதார் அட்டையை கட்டாயமாக்குவதற்கு மத்திய அரசு சொல்லும் காரணங்களில், முக்கியமானது பொது வினியோக குடும்ப அட்டைகளில் போலிகள் இருப்பதாக சொல்கிறது.

    அப்படி இருந்தால், அந்த போலி அட்டையை வைத்திருப்பவர்கள் மீதும், அந்த அட்டையை வழங்கிய அரசு ஊழியர்கள் மீதுமே குற்றவியல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியுமே தவிர, நூற்று இருபது கோடி மக்களை குற்றவாளிகளாக ஆக்கமுடியாது.

    மேலும், http://www.neethiyaithedy.org/?p=1060

    ReplyDelete