தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 4 September 2013

ரகுராம் ராஜனுக்கு புரியுமா?



ரகுராம் ராஜன் இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவராக இன்று பதவியேற்கிறார். ரூபாய் மதிப்பு வேகமாக சரிந்து கொண்டிருக்கும் போதி லும், பொருளாதாரசீர்திருத்தங்களைமேலும் தீவிரமாக அமலாக்குவோம் என்று சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் அழுத்தம் திருத்தமாக கூறியிருக்கிற பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நம்பகமானவர்தான் இந்த ரகுராம் ராஜன்.

பன்னாட்டு நிதி நிறுவனத்தில் பயிற்சி பெற்ற பொருளாதார நிபுணர். கடந்த ஓராண்டு காலம் சிதம்பரத்தின் நிதியமைச்சகத்தில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக இருந்தவர். இன்று ஓய்வு பெறுகிற டி.சுப்பாராவுக்கு அடுத்து, திடீரென்று ரிசர்வ் வங்கியின் ஆளுநராக அறி விக்கப்பட்டு பொறுப்பேற்கிறார் ரகுராம். நாடு எதிர்கொண்டுள்ள நடப்புக்கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சனைக்கு ஒரே இரவில் தீர்வு கண்டுவிட முடியாது என்று பதவியேற்புக்கு முன்பு தனது பேட்டியில் கூறியிருக்கிறார் இவர்.


நாங்கள் அமலாக்குகிற நவீன - தாராளமய - உலகமய கொள்கைகளை மறுபேச்சின்றி எல்லோரும் ஏற்றுக் கொண்டால் நாடு நாளைய தினமே சுபிட்சம் அடைந்துவிடும் என்று இது காறும் கதைத்துக்கொண்டிருந்த மன்மோகன் சிங் வகையறா, அந்தக் கொள்கைகளால் ஏற்பட்டுக் கொண்டிருக்கும் பயங்கரங்களுக்கு ஒரே நாளில் தீர்வு கண்டுவிட முடியாது என்று ஒட்டு மொத்த மக்களையும் ஓரம்கட்டுகிறார்கள்.

வகைதொகையில்லாமல் அனைத்துத் துறை களிலும் அந்நிய மூலதனத்தை அனுமதித்தது, பெட்ரோலியத் தேவைக்கு ஈரான் போன்ற நாடுகள் நமக்கு உதவ முன்வந்தபோதிலும் அதை உதறித்தள்ளி அமெரிக்காவுக்கு அடி பணிந்து அளவில்லாமல் இறக்குமதி செய்தது, அந்நிய முதலாளிகளுக்கும் உள்நாட்டு பெரு முதலாளிகளுக்கும் கோடி கோடியாக சலுகைகளை வாரி வழங்கியதன் மூலம் உள்நாட்டு தொழில்களையெல்லாம் நசுக்கியது என இவர்களது ஆட்சியின் நாசகரப் பாதையே இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம்.

இதற்கு ஒரே இரவில் அல்ல, ஒரே நொடியில் கூட தீர்வு காண முடியும். அது, இந்த நாசகரப் பாதையை கை விடுவது என முடிவெடுப்பதே. இந்தியாவில் முதலீடு செய்த அந்நிய முதலா ளிகளும், இந்திய வளங்களையும் உழைப்பை யும் சுரண்டிக் கொழுத்த உள்நாட்டு பெரு முதலாளிகளும் இந்தியப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை இழந்து, தங்கள் முதலீடுகளையெல் லாம் டாலருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதை உடனடியாக நிறுத்த அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகையை இக்கணமே நிறுத்த வேண்டும்; ஒவ்வோராண்டும் வரிச் சலுகை என்ற பெயரில் வசதிப் படைத்தவர்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன.

அதை முதலில் நிறுத்துங்கள் என்று சில நாட்களுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி எம்.பி., வற்புறுத்தினார். எரிகிற கொள்ளியைப் பிடுங்கினால் கொதிப்பது தானாக அடங்கும் என்பதைப்போல வசதி படைத்தவர்களுக்கு வாரி வழங்கும் சலுகைகளை நிறுத்தி விட்டு, கோடானகோடி ஏழைகளின் கைகளில் காசுகள் கிடைக்க வழி செய்வீர்; அவர்கள் கைகளில் காசு இருந்தால்தான் பொருளாதாரச் சக்கரம் சுழலும். ரிசர்வ் வங்கியின் கரன்சியும் மதிப்பு பெறும். ரகுராம் ராஜனுக்கு இது புரியுமா? புரிந்தாலும் செய்வாரா?

No comments:

Post a Comment