இதைவிட நாற்சந்தியில் நிற்க வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கன்னத்தில் பளார், பளாரென்று அறைந்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. இந்த அளவுக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க இருக்கும் நாளில், இப்படியொரு கருத்தை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரதமரை ராகுல் காந்தி கேவலப்படுத்தி இருக்கக் கூடாது!
இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக கிரிமினல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் தொடர வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சட்டத்திருத்தம் அனுப்பப்பட்டபோது, அவர் அதில் சில ஐயப்பாடுகள் இருப்பதாகவும், வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் நாடு திரும்பியவுடன் அவரிடம் சில விளக்கங்கள் பெற்ற பிறகு கையொப்பம் இடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதாவது, தனக்கு இந்த அவசரச் சட்டத்திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர்.
மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8(4) இன்படி, "தண்டனை பெற்றவர் எம்.பி., எம்.எல்.ஏவாக இருந்து, அவர் 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்து தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டால், அவர் தொடர்ந்து பதவியில் நீடிக்கலாம்'. சராசரி இந்தியக் குடிமகனுக்கு இல்லாத உரிமை, அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருக்கு எப்படி இருக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்பி, தண்டனை பெற்ற நாள் முதலே மக்கள் பிரதிநிதிகளும் பதவி இழந்து விடுகிறார்கள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.
இந்தத் தீர்ப்பால் இப்போது பதவி வகிக்கும் யாரும் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஒரு சட்டத் திருத்தம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இப்போது நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்தில் இருக்கிறது. அந்த நிலையில்தான், அரசு அவசரச் சட்டம் நிறைவேற்றத் தயாரானது.
காங்கிரஸ் எம்.பி. ரஸþத் மசூதையும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவையும் காப்பாற்றுவதுதான் இந்த அவசரச் சட்டத்தின் நோக்கம் என்பது எல்லோருக்குமே தெரியும். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியும், அமைச்சரவையும் ஒப்புதல் அளித்த பிறகுதான் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முயற்சியில் அரசு இறங்கியது என்பதும் ஊரறிந்த உண்மை. இப்படி ஓர் அவசரச் சட்டம் தேவையில்லாதது என்பதிலும், ஊழல் பெருச்சாளிகளைக் காப்பாற்றுவதுதான் அதன் நோக்கம் என்பதிலும் கூட யாருக்கும் சந்தேகம் இருக்க வழியில்லை.
இத்தனை நாள்களாக இது பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டிருந்த போதெல்லாம் மௌனம் காத்த, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு இப்போது திடீர் ஞானோதயம் ஏற்பட்டு, ""இந்த அவசரச் சட்டமே முட்டாள்தானமானது. இது கிழித்தெறியப்பட வேண்டியது'' என்று அஜய் மக்கானின் பத்திரிகையாளர் கூட்டத்திற்கு வலியப் போய் அவர் பொரிந்து தள்ள வேண்டிய அவசியமென்ன?
கடந்த மூன்று மாதங்களாக இந்தச் சட்டத்திருத்தம் பற்றியும், உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றியும் ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் உயர்மட்டக்குழுவின் ஒப்புதலுடன்தான் அவசரச் சட்டம் பிறப்பிக்கும் முடிவை அமைச்சரவை எடுத்தது. இவ்வளவும் நடந்தது தெரியாமல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் இருந்திருக்கிறார் என்று தெரிகிறது. இல்லையென்றால் அப்போதே தனது எதிர்ப்பைத் தெரிவித்திருப்பாரே...
இப்படி ஓர் அவசரச் சட்டம் கொண்டு வருவதில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடன்பாடு இருக்கவில்லை என்பதும், அரசியல் நிர்பந்தங்களின் காரணமாகவும், கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின் பேரிலும், அமைச்சரவை முடிவெடுத்ததாலும்தான் அவர் இதற்கு உடன்பட்டார் என்பதும் தெரிந்த விஷயம். இப்போது திடீரென்று இப்படி ஓர் அறிவிப்பின் மூலம் பிரதமர் ஊழல் அரசியல்வாதிகளுக்குப் பாதுகாப்புத் தருபவர் போலவும் தான் "பரிசுத்தமானவர்' என்றும் ராகுல் காந்தி காட்டிக் கொள்ள விரும்புகிறார் என்றால் அதை யதார்த்த நிகழ்வாக கொள்ள முடியாது. சோனியா காந்தியின் ஒப்புதல் இல்லாமல் நடந்ததாகவும் கருத முடியாது.
அவசரச் சட்டத்திற்கு எதிர்ப்பு வலுக்கிறது என்று தெரிந்ததும், தான் அதிலிருந்து விலகி நிற்க ராகுல் காந்தி செய்திருக்கும் தந்திரம் இது என்பது தெரிகிறது. அதற்காக, பரம விசுவாசியாக இருந்த பிரதமர் மன்மோகன் சிங், இப்படி அவமானப்படுத்தப்பட்டிருப்பதுதான் பரிதாபம். பலிகடாக்களுக்கு என்றைக்கு இருந்தாலும் ஒருநாள் இந்த நிலைமை ஏற்படத்தானே வேண்டும்.
பாவம் பிரதமர்!
நன்றி: ‘தினமணி’
No comments:
Post a Comment