தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday 30 January 2014

காந்திஜி நினைவு நாள் - ஜனவரி 30



காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத்துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான்இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்லஎன்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது.
இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர்,
தி ஹிந்து நாளிதலில் இருந்து.