தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Thursday, 7 November 2013

நவம்பர் புரட்சி



புரட்சி
வெறும் விருப்பமாக மட்டும்
வெளிப்படுவது போதுமா?
அது செயலாய்
உன்னிடம் மலரும் நாள் எது?
நவம்பர் ஏழு கேட்கிறது

உலகை மாற்றுதல் புரட்சி என்பது
உண்மைதான், ஆனால் -
அதற்கு முதலில் உன்னை மாற்றுதல்
வேண்டுமென்பதை உணர்வாயா?

தாய், தந்தை உருவில்
பாசவடிவாய் முதலாளித்துவ வாழ்க்கை
உனக்கு வழங்கப்படும்போது,
காதலின் காந்தவிழிகளால், சாந்த சொரூபமாய்
தனியுடமை உன்னை நெருங்கும்போது,
எதிர்த்து போராடத் தயங்குபவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நறுமணம்?

தாழ்த்தப்பட்ட மக்களை
உறவாட அனுமதிக்காத வீடு
போராடும் தொழிலாளி வர்க்கத்தை
மதிக்கத் தெரியாத சொந்தம்இவைகளை
வெறுக்கத் தெரியாதவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் உணர்ச்சி பலம்?

வீடுகூட்ட, சோறாக்க, துணிதுவைக்க
பிள்ளைக்கு கால்கழுவஎன
அனைத்து வேலைக்கும் பெண்ணை ஒதுக்கிவைத்து,
அரசியல் வேலைக்கு மட்டும் தடுப்பு வைத்து
பிறவிசுகம் காணும் சராசரி ஆணாய்
உறுத்தலின்றி வாழ்பவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நன்னெறி?

கருவறை வரைக்கும் கைநீட்டிச் சுரண்டும்
ஏகாதிபத்திய தீவிரத்தின் இயல்பறிந்தும்
இயன்றவரை என்னால் முடிந்த வேலைகளைச் செய்கிறேன்என
வரம்பிட்டுக் கொள்ளும் வாழ்க்கை முறையைத் தகர்க்காமல்
வருமா புரட்சி?

கொண்டாடும் உங்களிடம்
இந்த நவம்பர் ஏழு வேண்டுவது இதைத்தான்:
தயவுசெய்து உங்கள் பழைய உணர்ச்சிகளுக்கு
சலுகை வழங்காதீர்!
புரட்சிக் கடமைகளுக்கு தடையாய் வரும்
உங்கள் சொந்த உணர்ச்சிகளை
எதிர்க்கத் தயங்காதீர்!
தன்சுகம் மறுத்துத் துடித்துக் கொண்டிருக்கும்
நவம்பர் தியாகிகள் இதயத்தின்
தீராத ஆசை கேட்கிறதா உங்கள் செவிகளுக்கு?

தோழர்களேபுரட்சிக்கு உங்களிடம் இடம் கொடுங்கள்

நன்றி: துரை சண்முகம்


No comments:

Post a Comment