“சரி! சார்! உங்கள் வழிக்கே வருகிறோம்; மோடியை கார்ப்பரேட் முதலாளிகளில் ஒரு பகுதியினரும், கார்ப்பரேட் ஊடகங்களும்தான் தூக்கிப் பிடிக்கின்றன ஒப்புக்கொள்கிறோம். அவர்களுக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? ஆர். எஸ். எஸ் சின் மதவெறி அவர்கள் அறியமாட்டார்களா? இத்தனை காலம் இவற்றை எல்லாம் எதிர்த்தவர்கள்தாமே
அவர்களும்; இப்போது மனம்மாறிய மர்மம் என்ன ? காலம் மாறிவிட்டது. தேவைகள் மாறிவிட்டன. இதனை அவர்கள் புரிந்து கொண்டனர். அதன் விளைவன்றோ இந்த ஆதரவு!” இது தீவிர மோடி ஆதரவாளர் ஒருவர் சாதாரண உரையாடலின் போது முன்வைத்த வாதம். ஆம் காலம் மாறிக்கொண்டிருப்பதின் முன்னறிவிப்புதான்
இது. அதனை ஆழமாகப் புரிந்து கொள்ளவேண்டிய அவசியம் நம்முன் உள்ளது. அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மயக்கம் அல்லது மனமாற்றலின் பின்னால் மாபெரும் ரகசியமும் சுரண்டும் வர்க்க நலனும் உள்ளடங்கி உள்ளன.
முதலாவதாக , உலகமயம் , தாராளமயம் , தனியார்மயம் இவை இன்னும் தீவிரமாய் முதலாளிகள் விரும்புகிற நோக்கத்தோடும் வேகத்தோடும் அமலாக்கப்பட வேண்டும் ; மோடி அதற்குப் பொருத்தமானவர் ; குஜராத்தில் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரிவழங்கப்பட்டுள்ள கண்மூடித்தனமான சலுகைகள் இதற்கு ஓர் உதாரணம் : டாட்டா. ஆம் அவரின் நானோ கார் திட்டத்துக்கு அடி பத்தாயிரம் பெறும் நிலம் வெறும் 900 க்கு வழங்கப்பட்டது; அதாவது சதுர அடிக்கு 9100 ரூபாய் தானமாக தரப்பட்டது . நூறு ரூபாய்க்கு ஒரு பைசா 0.01ரூ வட்டிக்கு கடன், மற்ற சலுகைகளை எல்லாம் கணக்கிட்டால் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் டாடாவின் நானோ காருக்கு மோடி அரசு தரும் மானியம் அறுபதாயிரம் ரூபாய் .
இது போல் அதானி, எஸ்ஸார், ரிலையன்ஸ், லார்சன்- டூப்ரோ உள்ளிட்ட முதலாளிகளுக்கு பல லட்சம் ஏக்கர் நிலமும் சலுகைகளும் அள்ளிவழங்கினார் மோடி. மறுபக்கம் குடிமனை பட்டா கோரிய பழங்குடி மக்களின் 1.2 லட்சம் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதுதான் மோடியின் வளர்ச்ச்சி மாடல் அதாவது கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை லாப சுருட்டல் மாடல். கார்ப்பரேட் முதலாளிகளும்
அவர்களின் ஊடகங்களும் விரும்புவது இதைத்தான்... இதைத்தான். அடுத்ததாக, காங்கிரஸ் நாறிக்கிடக்கிறது. பிழைப்பது அரிது. மக்களின் கோபம் பெருகிக்கொண்டே இருக்கிறது; இதனை அறுவடை செய்யப்போவது யார் என்ற கேள்வி எழுகிறது. மாநிலக்கட்சிகளும் இடதுசாரிகளும் அறுவடை செய்தால் என்ன ஆகும்? முதலாளிகள் பெருங்கவலை அது. ஆம், மாநிலக் கட்சிகள் இதே கொள்கையை பின்பற்றினாலும் அடித்தட்டு மக்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதால் சில இலவச திட்டங்களை அமலாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் .
மேலும் இடதுசாரிகள் ஆதரவும் இருக்கும்போது முதலாளிகள் விரும்பிய வேகத்தில் அவர்களுக்கு சாதகமான காரியங்கள் நடக்காது. முதல் ஐ.மு.கூட்டணி அரசை இடது சாரிகள் ஆதரித்த போது இந்த அனுபவம் உண்டு. அதைத் தடுக்க கார்ப்பரேட் முதலாளிகள் விரும்புகிறார்கள் . மாற்று கொள்கையை தடுக்க மாற்று முகத்தை முதலாளிகள் நாடுவது அவர்களின் சுரண்டல் வர்க்கத் தேவை. காங்கிரசுக்கு மாற்றாக மோடியை முன்னிறுத்துவதின் பின்னால் சுரண்டும் வர்க்க நலன் சார்ந்த இந்த கணக்கும் முக்கிய பங்கு வகிக்கிறது. “சுபம் லாபம்” என்பதே கார்ப்பரேட் முதலாளிகள் கணக்கு. தேசபக்தியாவது புண்ணாக்காவது; சமூக ஒற்றுமையாவது மண்ணாங்கட்டியாவது; லாபம், மேலும் மேலும் லாபம் - இது மட்டுமே கார்ப்பரேட் கணக்கு. அடுத்து. இருகட்சி ஆட்சிமுறை, அதிபர் ஆட்சிமுறை இவையே தங்கள் சுரண்டும் வர்க்க நலனுக்கு ரொம்ப வசதியானது என்பது சுரண்டும் கூட்டத்தின் நெடுநாள் கனவு. உடனடியாகக் கைகூடாது என்பதை அவர்களும் அறிவர். ஆயினும் அதை நோக்கி மக்கள் மனதை மெல்ல மெல்ல பக்குவப் படுத்த மோடி - ராகுல் சண்டையாக இந்தத் தேர்தலை காட்சிப்படுத்த எத்தனிக்கின்றனர்.
கார்ப்பரேட் ஊடகங்களின் பணி இதுவாகத்தான் உள்ளது. கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஏற்பட்டிருப்பது மயக்கமோ மனமாற்றமோ அல்ல; சுரண்டும் வர்க்க லாபக் கணக்கே . இதனை அறியாத வரை அரசியலில் ஏமாளிகளாகவே இருப்பர் மக்கள்.
No comments:
Post a Comment