இந்தியாவில் சுமார் 600 பல்கலைக் கழகங்களுக்கும் மேல் இருக்கின்றன. இவற்றின் கீழ் 40 ஆயிரம் கல்லூரிகள் இயங்குகின்றன. ஆயினும் உயர்கல்வித் துறையில் ’பிரிக்ஸ்’ நாடுகள் என்று அழைக்கப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளின் நூறு நிறுவனங்களில் முதல் பத்து இடங்களில் இந்தியா ஒன்றைக்கூடப் பெறவில்லை. ``டைம்ஸ் உயர்கல்வி” இதழ் 2014ஆம் ஆண்டின் கல்வித்தரம் குறித்து `பிரிக்ஸ்’ நாடுகளின் பல்கலைக்கழகங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சண்டீகாரில் உள்ள பஞ்சாப் பல்கலைக் கழகம் 13ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் பயின்ற பல்கலைக்கழகம் இதுவாகும். இந்தியாவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி நிறுவனங்கள் அனைத்தையும் விட இது முன்னணியில் இருக்கிறது. உலக அளவிலான கல்வி நிறுவனங்களின் தரத்தை நிர்ணயிக்கையில் பஞ்சாப் பல்கலைக் கழகம் இரண்டாவது முறையாக இப்பெருமையைப் பெற்றுள்ளது. முன்னதாக, உலகின் முதல் 400 கல்வி நிறுவனங்கள் குறித்து டைம்ஸ் குழுமம் ஆய்வினை மேற்கொண்டு ஒரு பட்டியலை வெளியிட்டபோது, 226-250 ஆகியவற்றிற்கு இடையிலான கல்வி நிறுவனங்களில் இடம் பெற்ற ஒரேயொரு இந்திய நிறுவனம் பஞ்சாப் பல்கலைக் கழகம் மட்டுமேயாகும்.
ஒட்டுமொத்தத்தில் சீனா முன்னணியில் இருக்கிறது. முதல் பத்து இடங்களில் நான்கு இடங்களையும், முதல் 100 நிறுவனங்களில் 23 இடங்களையும் சீனம் பெற்றிருக்கிறது. இந்தியாவில் பஞ்சாப் பல்கலைக் கழகத்திற்கு அடுத்ததாக, ஐஐடி, கரக்பூர் 30ஆவது இடத்தையும், ஐஐடி, கான்பூர் 34ஆவது இடத்தையும், ஐஐடி-தில்லி மற்றும் ஐஐடி-ரூர்க்கி இணைந்து 37ஆவது இடத்தையும், ஐஐடி, குவஹாத்தி 46ஆவது இடத்தையும், ஐஐடி, சென்னை மற்றும் ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் 47ஆவது இடத்தைப் பெற்றிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில் மிகவும் சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று என்று பீற்றிக்கொள்ளப்படுகிற ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் 57ஆவது இடத்தைத்தான் பெற்றிருக்கிறது. அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் அதனை முந்தி இருப்பதுடன் 50ஆவது இடத்தை வகிக்கிறது. முதல் நூறு இடங்களில் சீனம் 23 இடங்களைப் பிடித்திருக்கக்கூடிய அதே சமயத்தில், இந்தியா பத்து இடங்களை மட்டுமே பிடித்திருக்கின்றது. மொத்தம் உள்ள நூறு நிறுவனங்களில் 23 நிறுவனங்கள் சீனத்தில் இருப்பதன் மூலம் உயர்கல்வித்துறையில் அது வல்லமைபொருந்திய ஒன்றாக முன்னேறியிருக்கிறது. இதற்கு அடுத்து தைவானில் 21 நிறுவனங்களும், இந்தியாவில் 10 நிறுவனங்களும் இருக்கின்றன. இந்தியாவில் முதலிடத்தைப் பெற்றுள்ள பஞ்சாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் அருண் குமார் இது குறித்துத்தன் மகிழ்ச்சியை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொள்வதுடன், ``பஞ்சாப் பல்கலைக் கழகம் சுதந்திரப் போராட்டக் காலத்திற்கு முன்பிருந்தே, நாடு பிரிவினை அடைவதற்குமுன் அது லாகூரில் இருந்த காலத்திலிருந்தே, முதன்மையான இடத்தை வகித்து வந்திருக்கிறது” என்றும், ``தற்போது முன்னணியில் இருக்கின்ற பெய்ஜிங் பல்கலைக்கழகத்தைப் போல் சாதனை படைத்திட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது” என்றும் கூறினார்.
No comments:
Post a Comment