தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 15 February 2014

செய்தித் துளிகள் . . .



நிதி அமைச்சரின் அநீதிப் பேச்சு!
வங்கிகளின் லாபத்தை வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வுக்கு மட்டும் பயன்படுத்த முடியாது, தேச வளர்ச்சிக்கும் பயன்படுத்த வேண்டும்” என்று, (வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் நடைபெறும் போது) நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறியது வடிகட்டிய ஏமாற்று வேலை.
5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மாற்றம் என்பது ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒப்பந்தம். அதை நிறைவேற்ற மறுக்கும் வங்கி நிர்வாகக் கூட்டமைப்பை எதிர்த்து வங்கி ஊழியர்கள் போராடுகிறார்கள்.
வங்கி ஊழியர்கள் போராடும் போது மட்டும்,
வங்கிகளின் லாபத்தைப் பற்றிப் பேசும் அமைச்சர்,
கார்ப்பொரேட் நிறுவனங்களும் பெருமுதலாளிகளும்
வாங்கிய பல ஆயிரம் கோடி வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்து,
வங்கிகளை நட்டத்தில் தள்ளியது ஏன்?
வாராக் கடன்களை வசூலிப்பதில் சாதாரண மக்களிடம் கடுமை காட்டும் அரசு கார்ப்பொரேட்டுகளிடமும் பெருமுதலாளிகளிடமும் சரணாகதி அடைவது ஏன்?
ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டு போராடும் போது தேச நலன் பேசும் அமைச்சர்கள்
மற்ற நேரங்களில் தேசத்தை மறந்து போவது ஏன்?


நவம்பர் 2014ல் கொல்கத்தாவில் அகில இந்திய மாநாடு
மேற்குவங்கம், கொல்கத்தா தொலைபேசி, டெலிகாம் ஃபேக்டரி, டெலிகாம் ஸ்டோர்ஸ் ஆகிய மாநிலச் சங்கங்கள் இணைந்து அகில இந்திய மாநாட்டை நவம்பர் 2014ல் கொல்கத்தாவில் நடத்துவதற்கு முன்வந்துள்ளன.
தொழிற்சங்கப் பாரம்பரியம் மிக்க மேற்கு வங்க மாநிலத்தில் மாநாடு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமையும் என்பது நிச்சயம்.


வரி ஏய்ப்பு
பன்னாட்டு நிறுவனங்கள் வரிஏய்ப்பு மூலம் அரசுக்கு எவ்வளவு நட்டத்தைத் தருகின்றன என்பது முழுமையாகத் தெரியவில்லை என்றாலும் வோடாஃபோன் நிறுவனத்தின் வரி ஏய்ப்பை ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.
ஹட்ச் பங்குகளை வாங்கியதில் 13000 கோடி வரி ஏய்ப்பு.
புனேயில் அதன் BPO நிறுவனத்தை விற்றதில் 3700 கோடி வரி ஏய்ப்பு.
தற்போது முறையற்ற பரிமாற்றங்கள் காரணமாக 3000 கோடி வரிஏய்ப்பு.
சுமார் 20000 கோடி வரி ஏய்ப்பின் மூலமாக கோடி கோடியாக லாபம் ஈட்டும் இது போன்ற நிறுவனங்களுக்குத் தான் அரசு தொடர்ந்து பல சலுகைகளை வாரி வாரி வழங்குகின்றது.

IBMல் ஆட்குறைப்பு
பொருளாதாரத் தட்டுப்பாடு காரணமாக கார்ப்பொரேட் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுக்க இருப்பதன் அறிகுறியாக, IBM நிறுவனம் 15000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. அதன் 4 லட்சம் ஊழியர்களில் 1 லட்சம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களுக்கு பெரும் பாதிப்பு இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இரட்டை இலக்க வளர்ச்சி
குஜராத், பஞ்சாப், கர்நாடகா, கேரளா தொலைத்தொடர்பு மாநிலங்களில் இரட்டை இலக்க வளர்ச்சியை ப்ச்ன்ல் அடைந்துள்ளது என்று நிர்வாகத்தின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதற்குக் காரணமான ஊழியர்கள் அதிகாரிகள் அனைவரையும் வாழ்த்துகிறோம்!
வெல்லட்டும் மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்
மத்திய அரசு ஊழியர்களின் 48 மணி நேர வேலைநிறுத்தம் வெற்றிகரமாக நடைபெற்றது. ‘மத்திய அரசு ஊழியர்கள் மகாசம்மேளனம்’ மட்டுமே மத்திய அரசு ஊழியர்களின் ஒப்பற்ற பாதுகாவலனாகத் திகழ்கிறது, அவர்களின் கோரிக்கைகளுக்காகப் போராடுகிறது. அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.


மொபைல் கட்டணம் உயரலாம்!
2G அலைக்கற்றை ஏலத்தின் வாயிலாக அரசுக்கு ரூ.61000 கோடி வருமானம் கிடைக்க உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு? அதிக அலைக்கற்றை கட்டணத்தைக் காரணம் காட்டி அழைப்புக் கட்டணங்களை தனியார் நிறுவனங்கள் உயர்த்தப் போகின்றன. வாடிக்கையாளர்கள் மீது சுமையை அதிகரித்து தனது லாபத்தை அதிகரிக்கும் முயற்சியில் தான் கார்ப்பொரேட் நிறுவனங்கள் முனைப்பாக செயல்படுகின்றன.

ITI புனரமைப்புக்கு ரூ.4156.79 கோடி
பொதுத்துறை நிறுவனங்கள் புனரமைப்புக் குழுவின் பரிந்த்துரையின் பேரில் பிரதமர். மன்மோகன் சிங் தலைமையில் கூடிய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ITI நிறுவனத்திற்கு ரூ.4156.79 கோடி வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.