இந்தியாவில்
அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித்துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத்துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை
நுழைத்து கொள்ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின்
குறியீடாக இங்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச்சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம்
வாரியிறைக்கப்படுகிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப்பாடற்ற சுதந்திர போக்கு
மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படுகிறது. இவர்களின்
எதிர்பார்ப்பின்படி இம்முதலீடுகள் நாட்டை வளமாக்கவில்லை. மாறாக இந்திய அரசு
அளிக்கும் அத்துனை சலுகைகளையும் அனுபவிப்பதோடு, சட்டவிரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்“ என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன
விவகாரங்களை கொண்டே விளங்க முடியும்.
தமிழக அரசின் ஒப்பந்தம்
ஏப்ரல் 2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் நோக்கியாவிற்கும்
மாநில அரசுக்குமிடையே ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை
அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2006ல் திமுக பதவியை பிடித்தது. ஒப்பந்தத்தை
பொதுமக்களின் பார்வைபடாதவாறு காத்தது. “சிட்டிசன்ஸ் ரிசர்ச் கலெக்டிவ்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், மூன்றாண்டு போராட்டத்திற்கு பின்
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை வெளியுலகின் பார்வைக்கு கொண்டு
வந்தது. நோக்கியா என்ற ஆக்டோபஸின் கரங்களில் தமிழகம் சிக்கியுள்ளது அம்பலமானது.
இந்த
ஒப்பந்தத்தின்படி ஏக்கருக்கு ரூ.3.75 லட்சம் என்ற கணக்கில் 210.87
ஏக்கர் சிப்காட்
நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவிற்கு
வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்திற்கு ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் வீதம் கிட்டத்தட்ட ரூ.480 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குத்தகையை பதிவுசெய்வதற்கான 4 சதவீத முத்திரைத் தாள் கட்டணத்தையும் தள்ளுபடி
செய்ததுடன், தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலத்தை பிற
நிறுவனங்களுக்கு கூடுதல் விலைக்கு குத்தகைக்கு விடுவதற்கான உரிமையையும்
நோக்கியாவிற்கு வழங்கியது தமிழக அரசு. நோக்கியா தனது செல்பேசியை உள்நாட்டில் விற்பனை
செய்வதன் மூலம் செலுத்தும் வாட் வரியையும், மத்திய விற்பனை வரியையும், தமிழக அரசு
திருப்பி செலுத்தும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய சலுகை.
செல்பேசி
வாங்கும் இந்திய குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் அரசின் கஜானாவுக்கு போகாமல், நோக்கியாவிற்கே திருப்பி விடப்பட்டுள்ளது. இச்சலுகையின் கீழ் 2005
முதல் 2011ம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.850 கோடிகளை தமிழக அரசு நோக்கியாவிற்கு தாரை
வார்த்துள்ளது. மற்ற சலுகைகளையும் கணக்கில் சேர்த்தால்
இதுவரை ரூ.2,500
கோடி அளவுக்கு
மக்கள் பணத்தை தமிழக அரசு நோக்கியாவிடம் இழந்துள்ளது.
மைய அரசின் சலுகைகள்
தமிழக அரசின்
சலுகைகள் ஒருபுறமிருக்க நோக்கியா நிறுவனம் சிறப்பு பொருளாதார மண்டலமாக செயல்பட்டு
வருவதால் மைய அரசு
இந்நிறுவனத்திற்கு சுங்கவரி,
உற்பத்தி வரி
விலக்குகளை அளித்துள்ளது. இந்த வரி விலக்குகளின் மூலம் 2005-06 மற்றும் 2006-07 ஆகிய இரு ஆண்டுகளில் மட்டும் ரூ.681.38 கோடிகளை மைய அரசு இழந்துள்ளது. இவை தவிர வருமான வரிச்சலுகை, ஏற்றுமதி வரிச்சலுகைப் போன்ற நேரடி சலுகைகளால் நோக்கியா தனதுமுதல் ஐந்தாண்டுகளில் மட்டும்
அடைந்த மொத்த லாபம் ரூ.10ஆயிரம் கோடிகளுக்கும் மேல். நோக்கியா ஸ்ரீபெரும்புதூரில் தொழில் துவங்க போட்ட
மொத்த முதலீடு வெறும் 650கோடிகள்தான் என்பதனை இச்சலுகைகளோடு ஒப்பிட்டால் நோக்கியா
அடித்திருக்கும் பகற்கொள்ளையின் பரிமாணம் நமக்கு பிடிபடும். இந்தக் கொள்ளையில்
நோக்கியா தனது தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டி கொள்ளையடித்ததை கணக்கில்
கொள்ளவில்லை.
வர்த்தக நேர்மை
சாதாரண ஒரு சிறு
வியாபாரியிடம் இருக்கும் வர்த்தக நேர்மை கூட நோக்கியாவிடம் இல்லை. இங்குஉற்பத்தி
செய்யப்படும் கைப்பேசிகளில் 50சதவீதத்தை
ஏற்றுமதி செய்யவுள்ளதாக புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டுள்ள நோக்கியா, உற்பத்தியின் 80சதவீதத்தை இங்கேயே சந்தைப்படுத்தியது. இந்த வர்த்தக பித்தலாட்டத்தால் ரூ.681.36கோடி சுங்க வரியாக வர வேண்டியது நோக்கியாவால்
ஏமாற்றப்பட்டு மைய அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
வரி ஏய்ப்பு
நோக்கியா
நிறுவனம் ரூ.21
ஆயிரம் கோடி
அளவுக்கு வரி ஏய்ப்புசெய்திருப்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. இங்கு தயாரிக்கப் படும் செல்பேசிகளுக்கான மென்
பொருளை பின்லாந்திலுள்ள தனது தாய் நிறுவனமான நோக்கியா கார்ப்பரேஷனிடமிருந்து
இறக்குமதி செய்து வருகிறது. நோக்கியா இந்தியா, இப்படி இறக்குமதி செய்யும் மென்பொருளுக்கு அதற்கான விலை யோடு ராயல்டி தொகையும்
செலுத்தி வருவதாக கணக்கு காட்டப்பட்டுள்ளது. இந்த ராயல்டி தொகை மட்டும் ரூ.25 ஆயிரம் கோடிகள், இதில் பத்து சதவீதம் வரியாக செலுத்தப்பட்டிருக்க வேண்டும். கடந்த 8 ஆண்டுகளாக இந்த வரியை நோக்கியா கட்டவே இல்லை.
இந்த ராயல்டி
வரிமட்டுமின்றி வெவ்வேறு இனங்களில் இந்திய அரசுக்கு சேர வேண்டிய ரூ.21 ஆயிரம்கோடிகளை வரி ஏய்ப்பு செய்து
பின்லாந்திற்கு கடத்தியுள்ளது நோக்கியா. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் தொடர்பாக மைய
அரசுக்கும், நோக்கியா இந்தி யாவுக்கு இடையே சட்டபோராட்டம்
நடந்து கொண்டிருக்க, கம்பெனியை மைக்ரோ சாஃப்ட் என்ற பன்னாட்டு
பகாசுர நிறுவனத்திற்கு மடைமாற்றி விற்றுவிட்டு கம்பி நீட்ட தயாரானது
நோக்கியா.கடந்த டிசம்பரில் நோக்கியாவின் இந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு
கைமாற்றிவிட வேண்டு மென முடிவாகியிருந்த நிலையில், வருமான வரித்துறை தில்லி உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலோடு நோக்கியா இந்தியா
நிறுவன சொத்துக்களை முடக்கியது.
இதற்கு பின்னரும்
வரிபாக்கியை கட்ட நோக்கியா தயாராக இல்லை. ஒரு சொத்து என்ற முறையில் சென்னை ஆலைக்கு
எந்த மதிப்பும் கிடையாது. நாங்கள் அந்த ஆலையின் பயன்பாட்டு உரிமையைத்தான்
மைக்ரோசாப்ட்டுக்கு விற்கிறோம். அதனை பயன்படுத்துவதோ, கைவிடுவதோ மைக்ரோ சாப்ட்டின் விருப்பம், எங்கள் சொத்துக்களை விற்க எங்களுக்கு உரிமையுள்ளது.
தடைகளை விலக்கினால் தான் சொத்துக்களை விற்கமுடியுமென வாதிட்டது. இறுதியில் தீர்ப்பு
அதற்குச் சாதகமாகவே அமைந்தது. முடக்கப்பட்ட நோக்கியா நிறுவன சொத்துக்களை
விடுவித்ததும் இடைக்கால தொகையாக ரூ.2 ஆயிரத்து 250கோடிகளை மத்திய அரசுக்கு செலுத்துவதோடு, முழுத்தொகையைச் செலுத்துவதற்கான வாக்குறுதியை
அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இப்படியொரு சமரச
ஏற்பாட்டை செய்யாவிட்டால் தொழிலாளர்களின் வாழ்க்கை பறிபோய்விடுமென சாக்கும்
சொல்லப்படுகிறது. வரி ஏய்ப்பு, வியாபார
பித்தலாட்டம், சுரண்டல், கொத்தடிமைத் தனம், கொலை, விபத்து என பலவித மான கிரிமினல் குற்றங்களை செய்துள்ள நோக்கியா இந்திய
கைப்பேசி சந்தையில் 50 சதவீதத்தைத் தன்னகத்தே கொண்டிருந்தது
என்பதுதான் உண்மை. ஏய்த்த வரியை
கட்டச் சொன்னவுடன் இந்தியாவில் தனக்கு நீதிமறுக்கப்பட்டதாக வாதாடுகிறது. இந்தியாவும் - பின்லாந்தும் கையெழுத்திட்டுள்ள
ஒப்பந்தத்தின்படியும், இரட்டைவரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின்படியும் இந்த
வரியை இந்திய தேசத்திற்கு கட்டத் தேவையில்லையென வாதிடுகிறது. இந்த
சூழலில்தான் மைக்ரோ சாப்ட் என்ற பகாசுர நிறுவனத்திற்கு நோக்கியாவை 5.44 பில்லியன் யூரோ (சுமார் 48 ஆயிரம் கோடி ரூபாய்)வுக்கு
மடைமாற்றிவிடப்பட்டுள்ளது. பெரும் நிறுவனங்கள் லாப நோக்கில் ஒன்றையொன்று விழுங்குவது உலகமய நிகழ்ச்சி
நிரலில் வெகு சாதாரணம். ஸ்டேட் வங்கி,
எல்ஐசி போன்ற
நிதியாதாரங்களை அதிகமாக கொண்ட இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் பிற கம்பெனிகளையும், பங்குகளையும் வாங்குவதற்கு ஏகப்பட்ட
கட்டுப்பாடுகளையும்,
தடைகளையும்
போடும் மைய அரசு மைக்ரோ சாப்ட் போன்ற பன்னாட்டு பகாசுரர்களுக்கு மட்டும் பட்டுக்
கம்பளம் விரித்து தாராளம் காட்டுகிறது.
பன்னாட்டு
தொழிற்குழுமங்களையும், அந்நிய முதலீடுகளையும் பட்டு கம்பளம், ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்கும் மத்திய
அரசு,
இரட்டை வரி
தவிர்ப்பு,
இருதரப்பு
முதலீட்டு பாதுகாப்பு ஒப்பந்தம், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் என
புதுப்புது பெயர்களில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஏறத்தாழ 80 நாட்டு நிறுவனங்களுடன் போட்டு
வைத்திருக்கிறது. இந்த ஒப்பந்தங்கள் இந்தியாவின் எல்லாவகையான பாதுகாப்புச்
சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்யுமளவுக்கு ஷரத்துக்களை உள்ளடக்கியது. அந்நிய
முதலாளிகள் இந்தியாவை சூறையாட கொடுத்த லைசென்சாகவும் உள்ளது. நோக்கியா போன்ற
நிறுவனங்கள் இந்தளவுக்கு தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதை அரசு கைகட்டி வேடிக்கையே
பார்த்துள்ளது.
நன்றி: தீக்கதிர்
No comments:
Post a Comment