கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும்,
முன்னாள் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினருமான
தோழர்.ஆர்.உமாநாத்
இன்று திருச்சி மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது
92.
|
உமாநாத் சிறு வயதிலேயே 1930-ல் நடந்த அந்நிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கேற்றவர்.
கல்லூரியில் பயின்றபோது வேலையின்மைக்கு எதிராக கண்ணனூர் முதல் சென்னை கோட்டை வரை
நடந்த பட்டினி பாதயாத்திரையில் பங்கேற்றார்.
|
கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டிருந்த
காலத்தில் 1940 ஆம் ஆண்டு தன்னை
கட்சியின் முழுநேர ஊழியராக இணைத்துக்கொண்டு தலைமறைவாக இருந்து கட்சி பணிகளை
மேற்கொண்டார்.
|
பிரிட்டிஷ் ஆட்சியை வன்முறை மூலம் தூக்கி
எறிய சதி செய்ததாக கைது செய்யப்பட்டு, சென்னை சிறையில்
அடைக்கப்பட்டார். 9 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவித்தார். 7 ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை நடத்திய உமாநாத், பல போராட்டங்கள், உண்ணாவிரதத்திற்கு
தலைமை வகித்துள்ளார்.
|
தோழர் உமாநாத் நடத்திய உண்ணாவிரத
போராட்டங்கள் மிகவும் பிரபலமானவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவை. 2 வாரம், 3 வாரம், 4 வாரம் என்று அவர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினார்.
உயிர் போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ்
பெற்றதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை
குத்தகை விவசாயிகளுக்கு பெற்றுத் தந்ததில் உமாநாத் பங்கு மகத்தானதாகும்.
|
7 வருடங்கள் 10 மாதங்கள் நாடாளுமன்ற உறுப்பினராகவும், 7 வருடங்கள் 2 மாதங்கள் சட்டமன்ற
உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். உமாநாத் சோவியத் யூனியன், மக்கள் சீனம், நிமேனியா, பல்கேரியா, ஆஸ்திரேலியா, ரோமாபுரி, யூகோஸ்லேவியா ஆகிய
நாடுகளுக்கு சென்றவர். கட்சி உறுப்பினராக தொடங்கி அரசியல் தலைமைக்குழு
உறுப்பினராக தன்னை உயர்த்திக் கொண்டவர்.
|
தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத்திலும், தமிழக சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைக்களுக்காக
சிம்ம கர்ஜனை செய்தவர். பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு வித்திட்டவர்.
பல தொழிலாளர் நலச்சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டங்கள் உதவின.
|
ஆலைப் பிரச்சினை முதல் உலக பிரச்சினை வரை
பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் உமாநாத் நிகரற்றவர்.
தமிழ்நாட்டில் உழைக்கும் பெண்கள் இயக்கத்தை சிஐடியு மூலம் உருவாக்கியே
தீரவேண்டும் என்று உமாநாத் உறுதியாக நின்றார். பெண்களிடம் உள்ள அறியாமையையும், மூடநம்பிக்கைகளையும் விரட்டி அவர்கள் பாரதி பாடியதுபோல்
நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும் நிமிர்ந்த ஞானச்செருக்கும் கொண்டவர்களாக பெண்ணுரிமைக்காக போராட
வேண்டும் என்று அறைகூவல் விடுத்தவர் உமாநாத்.
|
தலைப்புச் செய்திகள்
Wednesday, 21 May 2014
அஞ்சலி . . .
தனியார்மய முடிவை எதிர்த்து மே 23ல் வங்கி ஊழியர்கள் பேரணி
புதுதில்லி,மே 20-பொதுத்துறை வங்கிகளில் தனியார்
கார்ப்பரேட் நிர்வாகத்தை கொண்டுவர வேண்டும் என்று பி.ஜே.நாயக் குழு பரிந்துரை
செய்திருப்பதை கண்டித்து அகில இந்திய அளவில் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் மே 23ம் தேதி பேரணி நடத்துகிறார்கள்.
பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகளை 50 சதவீதத்திற்கும் கீழே குறைக்க வேண்டும் என்று கடந்த வாரம் நாயக்குழு மத்திய
அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. ஆக்சிஸ் வங்கியின் தலைவர் பி.ஜே.நாயக்
தலைமையிலான ஆர்பிஐ செயற்குழு இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது. பொதுத்துறை
வங்கிகளை தனியார்மயமாக்கும் எந்தவொரு முயற்சியையும் அனுமதிக்கமாட்டோம் என்று
பல்வேறு சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி
ஊழியர்களின் ஐந்து அகில இந்திய அமைப்புகள் பேரணி நடத்துகின்றன. இந்த அமைப்புகளில்
சுமார் 10 லட்சம் ஊழியர்கள் உள்ளனர். அகில இந்திய
வங்கி ஊழியர்கள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். இந்திய தேசிய வங்கி ஊழியர்சம்மேளனம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகிய அமைப்புகள் இந்த கண்டனப்
பேரணிக்கு அறைகூவல் விடுத்துள்ளன.
Wednesday, 7 May 2014
பொதுத்துறை வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட்டுகள் வாராக்கடன் ரூ. 2.04 லட்சம் கோடி தள்ளுபடி
கடந்த
13
ஆண்டுகளில் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளால் மொத்தம் 2
லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. கடனை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த
வங்கிகளின் “மோசமான கடன்கள்” கடந்த
7
ஆண்டுகளில் 4 லட்சத்து 95 ஆயிரம்
கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் சேமிப்பைச் சுரண்டும் கார்ப்பரேட்
நிறுவனங்களை அம்பலப்படுத்த மத்திய அரசு முன்வராத நிலையில் அகில இந்திய வங்கி
ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.
செவ்வாயன்று
(மே 6) சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில், வராக்கடன்களில்
முன்னிலையில் உள்ள 406 நிறுவனங்களின் பட்டியலை சங்கத்தின் பொதுச்செயலாளர்
சி.எச். வெங்கடாச்சலம் வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட
வங்கிகள் மூலம் பெரும் முதலாளிகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல்
கடன் வாரி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புப் பணத்தை
மத்திய அரசு முதலாளிகளுக்கு கடனாக வாரியிறைத்து வந்திருக்கிறது. கொடுத்த கடனை
வசூல் செய்ய அரசு தயங்கி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பட்டியல்
வெளியிடப்பட்டது. அதிக அளவில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தேர்தலில்
போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால்
தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.
கிங்
ஃபிஷர் விமான நிறுவனத்தை சார்ந்த விஜய் மல்லையா 2,673 கோடி ரூபாய் பல வங்கிகளில் கடனாகப் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிச்
செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மல்லையா கூறி வருகிறார். ஆனால் ஐபிஎல்
கிரிக்கெட் போட்டிக்கு யுவராஜ் சிங்கை பல கோடி ரூபாய் கொடுத்து ஏலம்
எடுத்துள்ளார். “தமிழகத்தில் ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ் நிறுவனம்
ரூ.9 ஆயிரத்து 38 கோடி
கடன் பெற்றுள்ளது இதுவரை திருப்பிதரவில்லை. மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை
எடுக்க மறுத்து வருகிறது.
தனிப்பட்ட
முறையில் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவராஜ் ரூ.450 கோடி கடனாக பெற்று திருப்பி அளிக்கவில்லை. தற்போது அவர் தெலுங்கு தேசம்
கட்சியில் இணைந்துள்ளார்,” என்று வெங்கடாச்சலம் கூறினார். தற்போது
வராக்கடனை வசூலிக்காமல் முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு விரும்புகிறது. சிறு
தொகைகளை வங்கியில் கடனாக வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்களின் பெயர்களை
படத்துடன் விளம்பரம் செய்கிறார்கள். பெரிய தொகையை வாங்கியவர்களின் விபரத்தை
வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயங்குகின்றன என்றும் அவர்
குற்றம் சாட்டினார். இனியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் நாடு
முழுவதும் வங்கிக் கடன் மோசடி செய்யும் பெரும்புள்ளிகளின் பெயர்கள், அவர்கள்
வாங்கிய தொகை உள்ளிட்ட விபரங்கள் சுவரொட்டிகளாக வெளியிடப்படும் என்றும் அவர்
தெரிவித்தார். திட்டமிட்டு வங்கிக் கடனை ஏமாற்றுவோரை கிரிமினல் குற்றவாளிகளாக
அறிவிக்க வேண்டும், கூட்டு மோசடிகளை வெளிப்படுத்த முறையான
விசாரணை நடத்த வேண்டும், வராக்கடன் வசூலை விரைவுபடுத்த வசூல்
சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம்
நடத்தப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தால் உண்டாகும் கடன்
நிலுவைக்கு சலுகை காட்டக்கூடாது, வங்கிக்கடன் பெற்று ஏமாற்றுவோரை பட்டியலிட்டு
காலமுறைப்படி ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் இ. அருணாசலம் உள்ளிட்டோர்
செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நன்றி: தீக்கதிர்.
Tuesday, 6 May 2014
கையளவு செல்பேசி... கடலளவு கொள்ளை
இந்தியாவில்
அந்நிய முதலீடு நுழைய முடியாத துறையை காண்பது இன்று அபூர்வம். தொழில்துறை, நிதித்துறை, சில்லரை வர்த்தகம் என எல்லா முக்கியத்துறைகளிலும் தனது ஆக்டோபஸ் கரங்களை
நுழைத்து கொள்ளையடித்து வருகிறது அந்நிய முதலீடு. இப்போக்கு வளர்ச்சியின்
குறியீடாக இங்கு உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான சலுகைகள், அடிமாட்டு விலைக்கு நிலம், வரிச்சலுகைகள் என இந்திய மக்களின் செல்வ வளம்
வாரியிறைக்கப்படுகிறது. அந்நிய முதலீடுகள் மீது கட்டுப்பாடற்ற சுதந்திர போக்கு
மத்திய, மாநில அரசுகளால் கையாளப்படுகிறது. இவர்களின்
எதிர்பார்ப்பின்படி இம்முதலீடுகள் நாட்டை வளமாக்கவில்லை. மாறாக இந்திய அரசு
அளிக்கும் அத்துனை சலுகைகளையும் அனுபவிப்பதோடு, சட்டவிரோதமான வழிகளிலும் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கிறார்கள் என்பதை “பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்“ என்பதை போல நோக்கியா இந்தியா நிறுவன
விவகாரங்களை கொண்டே விளங்க முடியும்.
தமிழக அரசின் ஒப்பந்தம்
ஏப்ரல் 2005ல் அதிமுக ஆட்சிக் காலத்தில் நோக்கியாவிற்கும்
மாநில அரசுக்குமிடையே ஸ்ரீ பெரும்புதூரில் ஒரு சிறப்பு பொருளாதார மண்டலத்தை
அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 2006ல் திமுக பதவியை பிடித்தது. ஒப்பந்தத்தை
பொதுமக்களின் பார்வைபடாதவாறு காத்தது. “சிட்டிசன்ஸ் ரிசர்ச் கலெக்டிவ்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் தகவல் உரிமை சட்டத்தின்கீழ், மூன்றாண்டு போராட்டத்திற்கு பின்
இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஷரத்துக்களை வெளியுலகின் பார்வைக்கு கொண்டு
வந்தது. நோக்கியா என்ற ஆக்டோபஸின் கரங்களில் தமிழகம் சிக்கியுள்ளது அம்பலமானது.
இந்த
ஒப்பந்தத்தின்படி ஏக்கருக்கு ரூ.3.75 லட்சம் என்ற கணக்கில் 210.87
ஏக்கர் சிப்காட்
நிலம் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நோக்கியாவிற்கு
வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசின் சிப்காட் நிறுவனத்திற்கு ஏக்கருக்கு ரூ.2.25 லட்சம் வீதம் கிட்டத்தட்ட ரூ.480 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த குத்தகையை பதிவுசெய்வதற்கான 4 சதவீத முத்திரைத் தாள் கட்டணத்தையும் தள்ளுபடி
செய்ததுடன், தனது தேவைக்கு போக மீதமுள்ள நிலத்தை பிற
நிறுவனங்களுக்கு கூடுதல் விலைக்கு குத்தகைக்கு விடுவதற்கான உரிமையையும்
நோக்கியாவிற்கு வழங்கியது தமிழக அரசு. நோக்கியா தனது செல்பேசியை உள்நாட்டில் விற்பனை
செய்வதன் மூலம் செலுத்தும் வாட் வரியையும், மத்திய விற்பனை வரியையும், தமிழக அரசு
திருப்பி செலுத்தும் என்பது ஒப்பந்தத்தின் முக்கிய சலுகை.
செல்பேசி
வாங்கும் இந்திய குடிமக்கள் செலுத்தும் வரிப்பணம் அரசின் கஜானாவுக்கு போகாமல், நோக்கியாவிற்கே திருப்பி விடப்பட்டுள்ளது. இச்சலுகையின் கீழ் 2005
முதல் 2011ம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூ.850 கோடிகளை தமிழக அரசு நோக்கியாவிற்கு தாரை
வார்த்துள்ளது. மற்ற சலுகைகளையும் கணக்கில் சேர்த்தால்
இதுவரை ரூ.2,500
கோடி அளவுக்கு
மக்கள் பணத்தை தமிழக அரசு நோக்கியாவிடம் இழந்துள்ளது.
Monday, 5 May 2014
மே 5 - மார்க்ஸ் பிறந்த தினம்
கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று.
உலகின் தலைசிறந்த காதல், நட்பு, சித்தாந்தம்
எல்லாம்
ஒரே ஒரு மனிதன் வசம் என்றால்
மார்க்ஸுக்கு தான் அப்பெருமை.
போராட்டம், வறுமை, வலிகள், பசி
இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும்
நிறைந்திருந்த பொழுது
எளியவர்களும், பாட்டாளிகளும்
எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என
ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்.
அவரின் எழுத்துக்கள்,
பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால்
சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின.
எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது
என்பதையும் விளக்கினார்.
எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள்
தகர்த்தெறிய
ஒன்று சேர வேண்டும் என அவரின்
எழுத்துக்களின் மூலம் உத்வேகப்படுத்தினார்தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வருவாய் அதிகரிப்பு
தொலைத்
தொடர்பு சேவை நிறுவனங்களின் மொத்த வருவாய் 2013 அக்டோபர் - டிசம்பர் மாத காலத்தில் 10.46 சதவீதம்
அதிகரித்து ரூ.58,385 கோடியாக உயர்ந்துள்ளது என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் தெரிவித்துள்ளது. இது 2012-ஆம்
ஆண்டின் இதே காலத்தில் ரூ.52,858 கோடியாக இருந்தது. தொலைத் தொடர்பு சேவை
தவிர்த்து ரியல் எஸ்டேட் மற்றும் இதர ஆதாரங்கள் வாயிலான வருவாயை மொத்த வருவாயில்
கழித்தால் நிறுவனங்களின் சரி செய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்) கிடைக்கும்.
இதன்படி, இத்துறை
நிறுவனங்களின் மொத்த வருவாய் 14.62 சதவீதம் அதிகரித்து ரூ.39,575 கோடியாக
உயர்ந்துள்ளது. ஒரு வாடிக்கையாளர் மூலம் பெற்ற சராசரி வருவாய் ரூ.99-லிருந்து
ரூ.116-ஆக
உயர்ந்துள்ளது. நிறுவனங்களின் ஒட்டுமொத்த சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் பார்தி ஏர்டெல் நிறுவனம் அதிக பங்குடன் (ரூ.9,010 கோடி)
முதலிடத்தில் உள்ளது.
அடுத்து வோடாபோன், ஐடியா, பி.எஸ்.என்.எல். டாட்டா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ்
கம்யூனி கேஷன்ஸ் மற்றும் ஏர்செல் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
Saturday, 3 May 2014
Friday, 2 May 2014
பெரு நிறுவனங்களுக்கா... மக்களுக்கா... வளர்ச்சி யாருக்கு?
கேள்விக்கென்ன பதில்?
விவசாயம் ஏன் நலிந்துவருகிறது?
சிறு குறுதொழில்கள் ஏன் நெருக்கடியில் உள்ளன?
வேலையின்மை ஏன் அதிகரித்துவருகிறது?
நகர்ப்புற,
கிராமப்புற
ஏழைகளின் அடிப்படை வசதிகள்
ஏன் தீர்க்கப்படாமல் உள்ளன?
பெரும்பான்மையான மக்கள்
ஏழ்மையில் உழல்கின்றபோது,
விரல்
விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டும்
டாலர் பில்லியனர்களாகக்
கொழுத்துள்ளார்களே, எப்படி?
இது போன்ற கேள்விகளை எழுப்பாமல்,
நாங்கள் வந்தால் ‘வானத்தை
வில்லாக வளைப்போம்; மணலைக்
கயிறாகத் திரிப்போம்!’
என்ற ரீதியில்
வாக்குறுதிகளை அளிக்கிறார்கள்.
மேற்கண்ட கேள்விகளுக்கு விடைகாண,
கடந்த 23
ஆண்டுகாலமாக அமலாக்கப்பட்ட, தற்போது
அமலில் உள்ள நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கையைப் பின்நோக்கிப் பரிசீலிக்க
வேண்டும்.
சுரண்டல் வரலாறு
இந்தியா,
பிரிட்டிஷ்
சாம்ராஜ்ஜியத்தின் காலனியாக அடிமைப்பட்டுக் கிடந்தபோது, சராசரியாக இந்திய உற்பத்தியில் 10 சதவீதம் ஆண்டுதோறும்
ஆங்கிலேயர்கள் இங்கிலாந்துக்கு எடுத்துச் சென்றனர். இந்த உபரி அந்தநாட்டின்
வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றியுள்ளது. சொல்லப்
போனால், வரலாற்றில்
ஒரு கட்டத்தில், குறிப்பாக 18ம் நூற்றாண்டின் இறுதியில் (1795) இங்கிலாந்தின்
மொத்த உற்பத்தியைவிட (157.44 மில்லியன்
பவுண்டுகள்) இந்தியாவின், குறிப்பாக
வங்கம், பிஹார்
ஆகிய பகுதிகளின் மொத்த உற்பத்தி மதிப்பு அதிக அளவில் (214 மில்லியன் பவுண்டுகள்) இருந்தது
எனத் தனது ஆய்வு நூலில் வல்லுநர் அமியகுமார் பக்ஷி கூறுகிறார்.
இந்தியாவைவிட மிகவும் குறைவான மக்கள் தொகையைக் கொண்டிருந்த
இங்கிலாந்து, காலனி
நாடுகளைக் கொள்ளையடித்து, பொருள்
உற்பத்தியில் உலகத்தின் முதன்மையான நாடாக (முதல் உலகப் போர் வரையில்) தன்னை
வளர்த்துக் கொண்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, நேரடியான காலனி ஆதிக்கம்
சாத்தியமில்லாமல் போயிற்று. ஆனால், நவீனத் தாராளமயக் கொள்கை மூலமாக
மேலைநாடுகள் கொள்ளையை (காலனி ஆதிக்கத்தின் போது இருந்ததை விடப் பல மடங்கு) புது
வடிவத்தில் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருக்கின்றன.
வளர்ச்சி
யாருக்கு?
கடந்த 23 ஆண்டு
காலமாக (6 1/2 ஆண்டுகள்
பாஜக, 16 ஆண்டுகள்
காங்கிரஸ்) காங்கிரஸ், பாஜக
கட்சிகள் ஆட்சியில் இருந்தன. இக்காலத்தில் இரண்டு கட்சிகளின் தலைமையிலான அரசுகள்
கடைப்பிடித்த பொருளாதாரக் கொள்கையால், ஆண்டுக்குச்
சராசரியாக 6 சதவீத
வளர்ச்சி ஏற்பட்டது. இந்த வளர்ச்சியின் பலன் யாருக்குச் சென்றது? சுமார் 120 கோடி மக்கள் வசிக்கும் இந்தியாவில், 70
பணக்காரர்கள் டாலர் பில்லியனர்களாக வளர்ந்தனர். இந்த டாலர் கோடீஸ்வரர்கள் 70 பேரின் மொத்தச் சொத்து மதிப்பு, நாட்டின் மொத்த உற்பத்தியில்
நான்கில் ஒரு பங்கு என்பது நம்மை மலைக்க வைக்கிறது. மறுபுறம், கிராமப்புறங்களில் 80 சதவீத மக்களும் நகர்ப்புறங்களில்
சரி பாதியினரும் நாள் ஒன்றுக்கு ரூ. 50 கூடச் செலவுசெய்ய முடியாத ஏழ்மையில் உள்ளனர். ஏற்பட்ட
வளர்ச்சியும் வேலை வாய்ப்பை அதிகரிக்கவில்லை. உருவாகியுள்ள தொழில்களிலும்
முறைசாராத் தொழில்களிலும் கூலி மிகவும் குறைவு. சமூகப் பாதுகாப்பு எதுவும் இல்லை.
வேளாண்மை நெருக்கடிக்கு உள்ளாகிக் கடந்த 15
ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 லட்சம்
விவசாயிகள் தற்கொலைக்குத் தள்ளப்பட்டனர்.
அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையினால் பன்னாட்டு
நிறுவனங்கள் இந்தியாவில் கேந்திரத் தொழில்களில் பலமாகக் காலூன்றியுள்ளன. அவர்களும்
இந்தியப் பெருமுத லாளிகளும் தங்கள் லாபத்தைத் தங்குதடையின்றி வெளிநாடுகளுக்கு
எடுத்துச் செல்கின்றனர். சலுகைசார்
பொருளாதாரக் கொள்கையினால் வளர்ந்துள்ள பல இந்தியப் பெருநிறுவனங்கள், இந்தியாவில் மூல தனம் செய்து
தொழில் தொடங்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று தொழில் தொடங்குகின்றனர்.
கடந்த 2013 ஏப்ரல்
முதல் 2014 பிப்ரவரி
வரை மட்டுமே சுமார் 29 பில்லியன்
( ஒரு பில்லியன் என்பது 100 கோடி)
அமெரிக்க டாலர் அளவுக்கு மூலதனத்தை வெளியே கொண்டுசென்றுள்ளனர். இங்குள்ள உழைப்பாளிகளைச் சுரண்டியும் இயற்கை வளங்களையும்
கனிம வளங்களையும் அடிமாட்டு விலைக்குப் பெற்றும் சேர்க்கப்படுகின்ற மூலதனத்தை
இங்கு வேலைவாய்ப்பைப் பெருக்க உதவாமல், வெளிநாடுகளுக்கு
எடுத்துச்செல்கிறார்கள். காலனி ஆதிக்க நாட்டில் நடந்ததைப் போல் தற்போது பல
வடிவங்களில் சுரண்டல் நடைபெறுகிறது.
மெகா ஊழல்களின்
காலம்
மேலும்,
நவீனத்
தாராளமயக் கொள்கை அமலாக்கம் தொடங்கிய பிறகு தான் மெகா ஊழல்கள் நடந்துள்ளன. இதற்கு
முன்பு ஊழல் இல்லை என்று சொல்ல முடியாது. ஆனால், ஆளும் அரசியல்வாதிகள், முதலாளிகள், அதிகாரிகள் போன்றோரின் கூட்டுக்
கொள்ளை (2ஜி, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு
போன்றவை) இன்றைய பொருளாதாரக் கொள்கையுடன் ஒட்டிப் பிறந்த ஒன்று.
இயற்கை வளங்களைப் பெரு நிறுவனங்கள் கொள்ளையடிக்க அனுமதிப்பதோடு, அரசின் நிதி வருவாயைப்
பெருநிறுவனங்களுக்கு வரிச் சலுகைகளாக வழங்குவதும் இன்றைய பொருளா தாரக் கொள்கையின்
முக்கிய அம்சம். இதுதான்
பாஜக காங்கிரஸ் கட்சிகளின் பொருளாதாரக் கொள்கை. நாட்டில்
ஏற்பட்டுள்ள மக்களின் அனைத்து வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கெல்லாம் மேற்கண்ட
பொருளாதாரக் கொள்கையே அடிப்படைக் காரணம். மாநிலங்களில்
அதிகாரத்துக்கு வரும் மாநிலக்
கட்சிகளும் இதே கொள்கைகளைத்தான் அமலாக்கி வருகின்றன.
உதாரணமாக,
2003-ம்
ஆண்டு பாஜக கொண்டுவந்த மின்சாரச் சட்டத்தை திமுக, மதிமுக,
பாமக, காங்கிரஸ், அதிமுக ஆகிய கட்சிகள் ஆதரித்தன.
இடதுசாரிக் கட்சிகள் நீங்கலாக,
அனைத்து
மாநிலக் கட்சிகளும் தாராளமயக் கொள்கைகளின் தீமைகளைப் பற்றிப் பேசுவது கிடையாது. இடதுசாரிக் கட்சிகளின் பிரச்சாரங்களைத் தவிர, வேறு எந்தக் கட்சிகளின்
பிரச்சாரங்களிலும் தேர்தல் அறிக்கைகளிலும் இந்தப் பிரச்னைகள் இடம்பெறாமல்
போய்விட்டது அவலமே. பெருநிறுவனங்களின் பிரதிநிதிகளே நாடாளுமன்றத்துக்குச் செல்ல
விருக்கிறார்கள் என்பதன் அறி குறியன்றி வேறென்ன இதெல்லாம்?
நன்றி:
தீக்கதிர்
Subscribe to:
Posts (Atom)