இதைவிட நாற்சந்தியில் நிற்க வைத்து பிரதமர் மன்மோகன் சிங்கை ராகுல் காந்தி கன்னத்தில் பளார், பளாரென்று அறைந்திருந்தாலும் கூடப் பரவாயில்லை. இந்த அளவுக்கு அவமானம் ஏற்பட்டிருக்காது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்திக்க இருக்கும் நாளில், இப்படியொரு கருத்தை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரதமரை ராகுல் காந்தி கேவலப்படுத்தி இருக்கக் கூடாது!
இரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக கிரிமினல் குற்ற வழக்கில் தண்டனை பெற்றிருக்கும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் தொடர்ந்து பதவியில் தொடர வகை செய்யும் அவசரச் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காகச் சட்டத்திருத்தம் அனுப்பப்பட்டபோது, அவர் அதில் சில ஐயப்பாடுகள் இருப்பதாகவும், வெளிநாடு சென்றிருக்கும் பிரதமர் நாடு திரும்பியவுடன் அவரிடம் சில விளக்கங்கள் பெற்ற பிறகு கையொப்பம் இடுவதாகவும் தெரிவித்திருந்தார். அதாவது, தனக்கு இந்த அவசரச் சட்டத்திருத்தத்தில் உடன்பாடு இல்லை என்பதை சொல்லாமல் சொல்லி விட்டிருக்கிறார் குடியரசுத் தலைவர்.
