‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை போவதோ?’
கோவை சிறையில் வ.உ.சி. இழுத்த செக்கு
சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
1907ம் ஆண்டில் வ.உ.சி. நடத்திய சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியைச் சேர்ந்த எஸ்எஸ் கேய்லி கப்பல்.
கப்பலோட்டிய தமிழன் எனவும், செக்கிழுத்த செம்மல் எனவும் போற்றப்பட்ட வ.உ.சியின் நடவடிக்கைகள், ஏதோ ஏகாதிபத்தியத்தினை எதிர்த்தார், கப்பலோட்டினார் அதனால் தண்டனை பெற்று சிறையில் செக்கிழுத்தார் என்பது மட்டும், அவரது தியாகம் அல்ல. அவரின் நடவடிக்கைகளை நினைத்தால் நாம் பின்பற்ற வேண்டிய ஏராளமான விஷயங்கள் இருக்கிறது.சுதேசி கப்பல் தொழில் என்பது வியாபாரம் மாத்திரம் அல்ல.
ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையினை சுதேசி கப்பல் விடுவதன் மூலம் வ.உ.சி. தீவிரப்படுத்தினார். அதில் மக்களையும் பங்கு பெற வைத்தார். ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கையில் ஒன்றுதான் சுதேசி கப்பல் தொழில் என மக்களை புரிய வைத்தார். அதனால் வ.உ.சி.யின் நடவடிக்கைகளுக்கு மக்கள் துணை நின்றனர். இரண்டு கப்பல்கள் வாங்கிட பொதுமக்களும் பணம் அளித்தனர்.வ.உ.சி.யின் நடவடிக்கைகளுக்கு பின்னால் மக்கள் துணை நிற்பதைப் பார்த்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரிட்டிஷ் கம்பெனி கப்பலில் கொழும்பிற்கும் தூத்துக்குடிக்கும் பயணக் கட்டணத்தை 5 ரூபாயிலிருந்து 75 பைசாவிற்கு குறைத்தது.
ஆனால் மக்கள் ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சியை புரிந்து வ.உ.சி.யின் சுதேசி கப்பலுக்கு ஆதரவு அளித்தனர். இதனால் பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு மாதம் ரூ.40 ஆயிரம் வரை நஷ்டமாகியது.அதேபோல், வ.உ.சி. சுதேசி கப்பல் விடுவது மாத்திரமல்லாமல் வெள்ளை ஏகாதிபத்தியத்தின் கோரல் மில்லில் நடக்கும் கொடுமைகளை கண்டும் வெகுண்டெழுந்தார். கூலி குறைவு, பத்து வயது சிறுவன் கூட கொடுமையாக வேலை வாங்கப்படுதல், தவறு செய்தால் பிரம்படி போன்ற ஏகாதிபத்தியத்தின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்டிட போராட்டம் நடத்தினார்.கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி பெற்றது. 50 சதவீதம் ஊதிய உயர்வையும் கோரல் மில் தொழிலாளர்கள் பெற்றனர்.
ஞாயிறு விடுமுறை உள்ளிட்ட சலுகைகளையும் பெற்றனர். கோரல் மில் தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக தூத்துக்குடி நகராட்சி, ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்டு வந்த ரயில்வே மற்றும் இதர நிறுவனங்களும் வ.உ.சி.யால், தங்கள் நிறுவனங்களிலும் வேலைநிறுத்தம் வரக் கூடும் என்ற அச்சத்தில் தங்கள் தொழிலாளர்களுக்கும் 50 சதவீதம் ஊதிய உயர்வினை அளித்தனர். வ.உ.சி.யின் தொழிற்சங்க போராட்டம் தொழிலாளர்களை பொருளாதார கோரிக்கைகளுக்கு மட்டுமல்லாமல் ஏகாதிபத்திய எதிர்ப்பு போரிலும் அனைத்து தரப்பு தொழிலாளர்களையும் பங்கெடுக்க வைக்க உதவி செய்தது.அடுத்த சில நாட்களில் கோரல்மில் தொழிலாளர்களின் போராட்டத்தினைத் தொடர்ந்து 1908 மார்ச் 10 அன்று விபின் சந்திரபால் விடுதலை நாளை சுயராட்சியம் நாளாக கொண்டாட வ.உ.சி. உள்ளிட்ட தலைவர்கள் முடிவு செய்தனர்.
ஆனால் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் இத்தகைய கொண்டாட்டத்திற்கு தடை விதித்தது. ஆனாலும் தடை உத்தரவை மீறி வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை நாள் கொண்டாட்டத்தை நடத்தினர். இவ்விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படாததைக் கண்டித்து பர்மா எண்ணெய் (பெட்ரோல்) நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக வ.உ.சி., சுப்பிரமணியசிவா, பத்மநாப ஐயங்கார் உள்ளிட்ட தலைவர்கள் ஆங்கிலேய ஏகாதிபத்தியம் கைது செய்தது. இதனைக் கண்டித்து பெஸ்ட் கம்பெனி ஊழியர்கள், கசாப்புக் கடைக்காரர்கள், குதிரை வண்டி தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் வ.உ.சி.யின் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக போராடினர்.இத்தகைய நடவடிக்கைகளில் பங்கேற்ற கோரல்மில் தொழிலாளர்கள் தாங்கள் சில நாட்களுக்கு முன்பு பெற்ற ஊதிய உயர்வைக் கூட இழந்தனர்.
பொருளாதாரத்தை இழந்தாலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை தொழிலாளிகளிடம் ஊட்டி அனைத்துத் தரப்பு தொழிலாளிகளையும் ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது வ.உ.சியின் வெற்றி. வ.உ.சி.யின் நடவடிக்கைகளை பார்த்து அஞ்சிய அரசாங்கம் தூத்துக்குடியிலும், திருநெல்வேலி போன்ற பகுதிகளிலும் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வை மேலோங்கி இருக்கிறது என அரசாங்கத்திற்கு அப்போதைய ஆட்சித் தலைவர் (வின்ச் துறை) ரிபோர்ட் அனுப்பினார்.
வ.உ.சி.யின் போராட்டங்களை பாரதி தனது பாடல்களில்நாட்டி லெங்கும் ஸ்வாந்திர வாஞ்சையைநாட்டினாய்; கனல் - மூட்டினாய்;வாட்டி யுன்னை மடக்கிச் சிறைக்குள்ளேமாட்டுவேன்; வலி - காட்டுவேன்.கோழைப் பட்ட ஜனங்களுக் குண்மைகள்கூறினாய்; - சட்டம் - மீறினாய்;ஏழைப்பட்டிங்கு இரத்தல் இழிவென்றேஏசினாய்; வீரம் - பேசினாய்.என கலெக்டர் வின்ச் வ.உ.சி.வுக்கு சொல்லுவது போலவும் அதற்கு பதிலாக வ.உ.சி. கலெக்டருக்கு பதில் மொழியாகபொழுதெல்லாம் எங்கள் செல்வங் கொள்ளைகொண்டுபோகவோ? நாங்கள் சாகவோ?அழுது கொண்டிருப் போமோ? - ஆண்பிள்ளைகள்அல்லமோ? - உயிர் - வெல்லமோ?நாங்கள் முப்போது கோடி ஜனங்களும்நாய்களோ? - பன்றிச்சேய்களோ?நீங்கள் மட்டும் மனிதர்களோ? இதுநீதமோ? - பிடி - வாதமோ?எனப் பாடியுள்ளார்.
இப்படிப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கை காரணமாக இரட்டை ஆயுள் தண்டனை கிடைத்து நான்கரை ஆண்டு காலம் கடுங்காவல் சிறை தண்டனையை அனுபவித்தார். தான் சார்ந்த காங்கிரஸ் கட்சி கூட வ.உ.சி.யை கைவிட்டபோதும், தன்னுடைய கொள்கைகளை விடாமல் தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் போராடியவர் வ.உ.சி.
- மா.முருகன், தூத்துக்குடி
No comments:
Post a Comment