தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday 9 October 2013

அமெரிக்காவில் நடப்பது என்ன?



ஏதோ இருத்தரப்பினர் சண்டையால் நம்மூரில் கடைகள் கதவடைப்பு செய்யும் நிலை போல இன்று அமெரிக்கா இருக்கிறது. உலக நாடுகளின் மூத்த அண்ணன் என்று கருதப்படும் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள், தேசிய பொழுதுப்போக்கு பூங்காக்கள், வன விலங்கு சரணாலயங்கள் போன்றவை அக்டோபர் முதல் தேதியிலிருந்து இழுத்து மூடப்பட்டன. இதற்கு கூறப்படும் காரணம் அமெரிக்காவின் பட்ஜெட் அவசரநிதி மசோதாவிற்கு எதிர்கட்சிகள் ஒப்புதல் தர மறுத்தது.

இந்தியாவில் லோக்சபா, ராஜ்யசபா என்கிற இரு அவைகள் இருப்பது போல அமெரிக்காவில் காங்கிரஸ் மற்றும் செனட் என்ற அவை அமைப்புகள் உள்ளன.

இந்தியாவின் நிதி ஆண்டு ஏப்ரல் முதல் மார்ச் வரை உள்ளது போல் அமெரிக்காவின் நிதி ஆண்டு அக்டோபர் முதல் செப்டம்பர் வரை உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல்  தேதிக்கு முன்பாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.   அமெரிக்காவில் அதிபர் ஒபாமா ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி (Democratic Party) இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காலக்கேடு நெருங்கிய தருவாயில் எதிர் கட்சியான குடியரசு (Republic) கட்சி ஒப்புதல் அளிக்க மறுத்து விட்டனர்.


இதற்கு எதிர் கட்சி கூறும் காரணம் என்ன?

அதிபர் ஒபாமா அமெரிக்காவில் உள்ள சாதாரண மக்களுக்கும், வயதானவர்களுக்கும் எளிமையான மருத்துவ வசதி செய்யும் வகையில் ஒபாமாகேர் என்ற காப்பீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். அமெரிக்காவில் மருத்துவ செலவு என்பது இன்ஷூரன்ஸ் இல்லாமல் பணக்காரராக இருந்தாலும் கூட சமாளிக்க முடியாத ஒன்று என்று உலகறிந்த விஷயம்.

ஒபாமா ஆட்சி பொறுப்பு ஏற்றதும் தனது முக்கியப் பணியாக இந்த மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் திருத்தங்கள் செய்து சாமானிய மனிதனுக்கும், முன்னுரிமை தந்து காப்பீடு அளிக்கும் வகையில் அரசு நிதி ஒதுக்கீட்டில் வழி செய்துள்ளார். ஆனால் பணக்காரர்களுக்கு சாதக கட்சியான குடியரசு கட்சி (Republic Party) ஆரம்ப முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது.

இந்த சுகாதார பாதுகாப்பு காப்பீட்டு திட்டத்திற்கும் சேர்த்து பட்ஜெட்டில் அவசர நிதி மசோதாவை நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் ஒபாமா அரசு கொண்டு வந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த அவசர நிதி மசோதாவை ஒப்புதல் அளிக்காமல் எதிர் கட்சிகள் புறக்கணித்தன. இதனால், எல்லை பாதுகாப்பு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு, உணவுத்துறை போன்ற அத்தியாவசிய செலவுகளை தவிர மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து செலவுகளும் நிதிப் பற்றாக்குறை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் ஏற்படும் போர்களின் மூலம் பெரும் வருவாயை ஈட்டும் அமெரிக்கா ஒரு சண்டை பொருளாதார (War Economy) நாடாக இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது.

சிரியாவின் மீது போர் தொடுக்க வேண்டும் என்று எதிர் கட்சிகள் கோரியுள்ள நிலையில் ஒபாமா அதற்கு இணக்கம் தெரிவிக்காதலால் அவருடைய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை பட்ஜெட்டில் சேர்க்காமல் எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்று பலர் கருத்து கூறுகின்றனர். .

அமெரிக்கா வரலாற்றில் இதற்கு முன் 1995– ல் கிளிண்டன் ஆட்சியில் நடந்த கதவடைப்பின் போது கூட பொருளாதாரம் இந்த அளவுக்கு சீர்க்கெட்டு இருந்த்து இல்லை.

இந்தியாவில் இந்த நிலை ஏற்படுமா?

இந்தியாவிலும் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றால்தான் அடுத்த ஆண்டிற்க்கான செலவை செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால் இங்கு சில வித்தியாசங்கள் உள்ளன.

இந்திய அரசியல் சாசனப்படி மத்திய அரசு பெறும் வரவுகள் மற்றும் பெறும் கடன்கள் அனைத்தையும் Consolidated Fund of India என்கிற கணக்கில் போடப்படும். அரசாங்கம் இந்தப் பணத்தை எடுக்க பாராளுமன்ற ஒப்புதல் பெற்று அரசு செலவுகளை செய்ய வேண்டும் இதைத்தான் (Vote on Account) என்று கூறுவார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் அரசாங்கம் செய்யும் செலவுக்குத்தான் அதிகாரம் உள்ளதோ தவிர, வருவானம் ஈட்டும் வரிகள் விதிக்க அதிகாரம் இல்லை.  மேலும் ஜனாதிபதி இத்தகைய சூழ்நிலைகளில் அவரது அதிகாரத்தை செலுத்த சட்டத்தில் இடமிருக்கிறது.  

இதன் விளைவுகள் என்ன?

பாஸ்போர்ட் மற்றும் விசா வழங்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த நெருக்கடி தீரும் வரை  வெளிநாட்டு மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பிறர் தங்கள் அமெரிக்கப் பயணத்தை ஒத்தி வைக்க வேண்டியதுதான். 
நயாகரா வீழ்ச்சி, தேசிய பொது இடங்கள், சுதந்திர தேவி சிலை, பொழுதுப்போக்கு பூங்காக்கள் ஆகியவை மூடப்படுள்ளன. சுமார் 7 லட்சத்து 83 ஆயிரம் அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த அரசியல் சண்டையால் அமெரிக்க மக்களில் சிலருக்கும், வர்த்தக நிறுவன்ங்கள் சிலவற்றுக்கும் விரைவாகவே பாதிப்பு இருக்கும். அமெரிக்காவிலேயே, சுற்றுச்சூழல் பராமரிப்பு நகரங்களில் குப்பை கூழங்கள் அகற்றுவது போன்ற பொதுச் சுகாதாரப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலை நீண்ட நாள் நீடிக்குமானால் அமெரிக்கா அரசு வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாத நிலை ஏற்படும். இதனால் உலக நாடுகள் மத்தியில் அமெரிக்காவின் Rating குறைந்து டாலரின் மதிப்பு அதிக அளவு குறையும். உலகிலேயே அதிகம் கடன் வாங்கிருக்கும் நாடான அமெரிக்கா, சீனாவிடம் தான் அதிக கடன் வாங்கியுள்ளது. மேலும் கடன் கொடுக்க எந்த நாடும் முன்வராது. கடந்த பல ஆண்டுகளாக இருந்து வரும் வேலையில்லா பிரச்சனை இந்த் ஆண்டில் தான் சற்றே தளர்ந்தது. ஆனால் அதற்க்குள் அரசாங்கமே சம்பளம் இல்லாமல் அரசு வேலையில் உள்ளோர்களுக்கு சம்பளம் தராமல் கட்டாய விடுப்பில் செல்லுமாறு கூறுவது வள்ர்ச்சியை பலவீனப்படுத்தும். உள்நாட்டு பொருளாதார பிரச்னைகளை ஏற்படுத்தும். 

ஏற்கனவே இருக்கும் பொருளாதார மந்த நிலையையும் பின்விளைவுகளையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் ஆளும் கட்சியும் எதிர் கட்சியும் நடப்பு சிக்கலிலிருந்து வெளியே வந்து ஒரு ஒப்பந்தத்திற்கு கூடிய விரைவில் வருவார்கள் என்று எதிர்ப்பார்போம். 

நன்றி: நாணயம் விகடன்







No comments:

Post a Comment