தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 18 October 2013

முதலாளிகளின் லாபத்தை பாதுகாக்க அமெரிக்க கட்சிகள் உடன்பாடு சமூகநலத் திட்டங்கள் வெட்டு



அமெரிக்காவில் அரசாங்கமே திவாலாகிவிடக்கூடும் என்ற சூழ்நிலை, தற்காலிகமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது. கடந்த 16 நாட்களாக நீடித்து வந்த ஒபாமா அரசாங்கத்தின் செயலின்மை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒபாமா அரசின் பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து தற்சமயத்திற்கு முடிவுக்கு வந்துள்ளது. எனினும் அமெரிக்க உழைக்கும் மக்கள் மீது வரலாறு காணாத தாக்குதலை கட்டவிழ்த்து விடுவது என ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியும் எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியும் ஒப்புக்கொண்டிருக்கின்றன. 2008ம் ஆண்டு துவங்கிய பொருளாதார நெருக்கடி கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. அமெரிக்கப் பொருளாதாரத்தில் வரலாறு காணாத தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள முதலாளித்துவப் பொருளாதாரத்தின் இந்த நெருக்கடி ஐரோப்பிய நாடுகளையும் இந்தியா உள்பட வளரும் நாடுகளையும் கடுமையாக பாதித்துள்ளது. நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அமெரிக்காவின் ஆளும் ஒபாமா அரசாங்கம் தனது சொந்த மக்கள் மீது பொருளாதார தாக்குதலைத் தொடுப்பதன் மூலம், உலகின் இதர பகுதி மக்கள் மீது பொருளாதாரத் தாக்குதலையும் சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப்போரைத் தூண்டிவிட்டு ஆயுத விற்பனையை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்க ஆளும் வர்க்க பெரும் முதலாளிகளின் லாபத்தை தக்க வைத்துக்கொள்வது என பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்க மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு  எழுந்துள்ளது.

இந்தப் பின்னணியில், அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சியடையத் துவங்கிவிட்டதாக ஒபாமா அரசு மீண்டும் மீண்டும் கூறினாலும், உண்மையில் அமெரிக்கப் பொருளாதாரம் வெகுவேகமாக வீழ்ச்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் கடன் எல்லை மீறி போய்விட்டது. கடன் உச்சவரம்புக்கு நாடாளுமன்றத்திடம் ஒபாமா நிர் வாகத்தால் அனுமதி பெறுவதில் சிக்கல் எழுந்தது. இந்நிலையில், அக்டோபர் 1ல் துவங்கிய நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கும், ஒபாமா தனது நாட்டு மக்களுக்கு அளித்த உறுதிமொழியான சுகாதாரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மசோதாவிற்கும் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெற முடியவில்லை. நாடாளுமன்றத்தின் செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டு அவைகளிலும் கடந்த செப்டம்பர் 30ம் தேதி நடைபெற்ற அமர்வில் மேற்கண்ட பிரச்சனைகளில் ஒபாமா நிர்வாகம் தோல்வியைச் சந்தித்தது. பட்ஜெட் செலவினங்களுக்கான மசோதா நிறைவேறாததால், அக்டோபர் 1ல் துவங்கிய நிதியாண்டிற்கான செலவினங்களுக்கு பணம் இல்லாமல் அரசாங்கமே மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கியது. இதன் காரணமாக இரவோடு இரவாக ஒபாமா நிர்வாகம் அரசாங்கத்தின் பணியை நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. அத்தியாவசியத் தேவைகள் தவிர அனைத்துத் துறைகளிலிருந்தும் ஊழியர்கள் வேலை பறிக்கப்பட்டு வீதியில் எறியப்பட்டனர். 8 லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்களின் வேலை பறிபோனது. கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலைமைக்கு யார் காரணம் என்று ஒபாமா கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருவரையொருவர் தூற்றிக்கொண்டன. மறுபுறத்தில் நிலைமையை உடனடியாக சரி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்து நாடெங்கிலும் போராட்டங்கள் எழுந்தன. இந்நிலையில் பெருமுதலாளிகளின் நலன்களை பாதுகாக்கும் விதமாக பட்ஜெட் செலவினங்களிலும் ஒபாமாவின் சுகாதாரம் உள்ளிட்ட திட்டங்களிலும் மாற்றங்கள் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டு, மீண்டும் மசோதா புதனன்று மாலை செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்டது. ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள செனட் சபையில் 81 உறுப்பினர்களின் ஆதரவோடு மசோதா நிறைவேறியது. 18 வாக்குகள் எதிராக பதிவாகின.

இதையடுத்து நள்ளிரவே பிரதிநிதிகள் சபையிலும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பிரதிநிதிகள் சபை எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் அதிகமாக உள்ள அவை ஆகும். எனினும் இந்த அவை யில் உள்ள 198 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களோடு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 87 உறுப்பினர்கள் இணைந்து மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். 144 வாக்குகள் எதிராக பதிவாகின. இதனையடுத்து வியாழனன்று அதிகாலை மசோதாவில் ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திட்டார். இதைத்தொடர்ந்து, கடந்த 16 நாட்களாக நீடித்து வந்த அரசாங்கத்தின் செயலின்மை தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த மசோதாவின்படி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதிக்குள் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பை உயர்த்துவதற்கான அனுமதியை ஒபாமா அரசு பெறவேண்டும்; மேலும் ஜனவரி 15ம் தேதி வரையிலும் அரசாங்கத்தின் செயல்பாடுகளுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றுமாத காலத்திற்குள் நாட்டின் நிதி நிலைமையை சரி செய்து கொள்வதற்கான வாய்ப்பு ஒபாமா அரசுக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே எப்படியேனும் நிலைமையை சரி செய்து கொள்ள தீர்மானித்துள்ள ஒபாமா அரசு, அனைத்து விதமான சமூகப்பாதுகாப்புத்திட்டங்கள், சுகாதாரத் திட்டங்கள், கல்வி, வீட்டுவசதி, உணவு, சுற்றுச்சூழல், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் என அனைத்திலும் மிகப்பெரும் அளவில் கைவைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. கடந்த 16 நாட்களாக இரு தரப்பினரும் மசோ தாவை நிறைவேற்றுவதற்கான நடை முறைப்பிரச்சனைகளை மட்டுமே விவாதித்தனர்; நாட்டின் நெருக்கடியைத் தீர்ப்பதற்கான முடிவுகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும், அமெரிக்க உழைக்கும் வர்க்க மற்றும் நடுத்தர வர்க்க மக்களின் வாழ்வாதாரத்திற்கான நிதியை வெட்டுவது என்று கூட்டாக முடிவெடுத்தனர். மசோதா நிறைவேறினாலும், ஏற்கெனவே வேலை பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அரசு ஊழி யர்களின் கதி, கடுமையாக நிதி ஒதுக்கீடு வெட்டப்பட்டுள்ள பல் வேறு சமூகத்திட்டங்களின் கதி என் னாகும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படவில்லை. எனினும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, நடுத்தர வர்க்க மக்களின் வருமானத்தை உறுதிப்படுத்துவது, வீட்டுவசதி திட்டங்கள் நிறைவேற்றுவது என பல திட்டங்களை கைவசம் வைத்திருப்பதாகவும், இதற்காக எதிர்க்கட்சியுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி ஒபாமா கூறியிருக்கிறார்.

நன்றி: தீக்கதிர்

No comments:

Post a Comment