தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 4 October 2013

லாலுவுக்கு 5 ஆண்டு சிறை



கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் முக்கிய குற்றவாளியான பிகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத்துக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையையும், ரூ.25 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் மூலம் லாலு பிரசாத் தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழப்பதுடன், 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தடுக்கப்படுகிறார்.

"இந்தப் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்யப்படும்' என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் மனோஜ் ஜா கூறினார்.


17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் 45 பேர் குற்றவாளிகள் என கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அறிவித்தது. அதில், 8 பேர் அன்றைய தினமே ஜாமீன் பெற்றனர்.

மீதமுள்ள 37 பேருக்கான தண்டனை விவரங்களை ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரவாஸ் குமார் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் வியாழக்கிழமை அறிவித்தார். ராஞ்சியில் உள்ள வீர்ஸா முண்டா சிறையில் இருந்தவாறு குற்றவாளிகள் கேட்டறிந்தனர்.

தண்டனை விவரம்: ரூ. 37.7 கோடி மதிப்பிலான கால்நடைத்தீவன ஊழல் வழக்கின் விசாரணையின் போது, 1997 ஆம் ஆண்டு லாலு பிரசாத் 135 நாள் நீதிமன்றக் காவலில் இருந்துள்ளார். தற்போது லாலுவுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ. 25 லட்சம் அபரதாமும் விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று முறை பிகார் மாநில முதல்வராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெகன்னாத் மிஸ்ராவுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. 2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஐக்கிய ஜனதா தள எம்.பி. ஜெகதீஷ் சர்மாவுக்கு நான்கு ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

முன்னாள் எம்எல்ஏ ஆர்.கே. ராணாவுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனையும் ரூ. 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. தவறு செய்த அதிகாரிகளுக்கு குறைந்தபட்சம் ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ. 1.5 கோடி வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையை சந்திக்க நேரிடும்.


கருணை காட்ட வேண்டும்: நீதிபதி பிரவாஸ் குமார் வியாழக்கிழமை மதியம் தண்டனையை அறிவித்தவுடன் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்த லாலு பிரசாத்தின் வழக்குரைஞர், "மூத்த குடிமகனான லாலு பிரசாத், நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விகித்த போது ரயில்வே

துறையை லாபகரமாக இயக்கினார். இது போன்ற காரணங்களுக்காக அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதேபோல் ஜெகன்னாத் மிஸ்ரா, ஜெகதீஷ் சர்மா, ஆர்.கே. ராணா ஆகியோரின் வழக்குரைஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அனைவரது வாதங்களையும் நீதிபதி பிரவாஸ் குமார் ஏற்க மறுத்துவிட்டார்.



"நான் குற்றமற்றவன்'

தண்டனை விவரங்களை நீதிபதி, விடியோ கான்ஃபரன்சிங் மூலம் அறிவித்தார். அதைக் கேட்ட லாலு பிரசாத், "நான் குற்றமற்றவன். இந்த வழக்கில் என் மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது' என்று நீதிபதியிடம் கூறினார். கால்நடைத்தீவன ஊழல் வழக்கில் கடந்த திங்கள்கிழமை முதல் லாலுபிரசாத் ராஞ்சியில் உள்ள வீர்ஸா முண்டா சிறை எண் 3312 யில் அடைக்கப்பட்டுள்ளார். வீட்டு உணவை சாப்பிட்டு வரும் லாலு, தினந்தோறும் தனது கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியும் வருகிறார்.

பதவி இழக்கும் 3 எம்பிக்கள்

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் சிறைத் தண்டனை பெறும் எம்.பி., எம்.எல்..க்கள் வகித்து வரும் பதவியை பறிக்க வேண்டும் என்று கடந்த ஜூலை 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி, பதவி இழக்கும் எம்பிக்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

மருத்துவப் படிப்புக்கான இடங்கள் ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூதுக்கு நான்கு ஆண்டு சிறைத்தண்டனை அக்டோபர் 1-ஆம் தேதி வழங்கப்பட்டது. பதவியை இழக்கும் முதல் எம்பியானார் ரஷீத் மசூத். இதையடுத்து லாலு பிரசாத்தும், ஜெகதீஷ் சர்மாவும் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளனர். தண்டனை பெறும் எம்பிக்களைக் காப்பாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த அவசரச் சட்டம், பின்னர் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சூழ்ச்சியில் மாட்டிக்கொண்டார்

பாஜகவும், ஐக்கிய ஜனதா தளத் தலைவர் நிதீஷ் குமாரும் செய்த சூழ்ச்சியில் லாலு பிரசாத் மாட்டிக் கொண்டார் என்று அவரது மனைவி ராப்ரி தேவி குற்றம்சாட்டினார். இந்தத் தீர்ப்பு அரசியல் ரீதியாக வழங்கப்பட்ட தீர்ப்பு என்றும் கட்சியின் தலைவராக லாலு பிரசாத் தொடர்ந்து நீடிப்பார் என்றும் ராப்ரி தேவி கூறினார்.

மேலும் 4 வழக்குகள்

கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு மீதான மேலும் நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மொத்தம் ரூ. 950 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் மொத்தம் 53 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 45 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள எட்டு வழக்குகளில், நான்கு வழக்குகளில் லாலு பிரசாத் சம்பந்தப்பட்டுள்ளார்.

உடனடியாக இடைத்தேர்தல் கிடையாது: தேர்தல் ஆணையம்

"மக்கள் பிரதிநிதிகள் சட்டப்பிரிவுகளின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா ஆகிய இருவரும் தண்டனை விதிக்கப்பட்ட நாளில் இருந்து மக்களவை உறுப்பினர் பதவி வகிக்கும் தகுதியை இழந்து விட்டனர். வழக்கமாக பதவிக் காலம் நிறைவடையும் முன்பாக காலியாகும் தொகுதிகளுக்கு ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். இந் நிலையில், லாலு பிரசாத் உறுப்பினராக இருந்த பிகாரின் சரன் தொகுதிக்கும், ஜெகதீஷ் சர்மாவின் ஜஹானாபாத் தொகுதிக்கும் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட்டால், அதன் பிறகு மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலை அத் தொகுதிகள் சந்திக்க வேண்டும். எனவே, மக்களவைத் தேர்தலை நடத்தும் போது காலியாகும் இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது' என்று தலைமைத் தேர்தல் ஆணைய உயரதிகாரி கூறினார்.

இதற்கிடையே, "மக்களவை உறுப்பினர் பதவியை இழக்கும் இரு உறுப்பினர்கள் தொடர்பான அறிவிப்பை குடியரசுத் தலைவருக்கும் நாடாளுமன்றத்துக்கும் மத்திய சட்டத் துறை முறைப்படி தெரிவிக்கும். அது குறித்து தேர்தல் ஆணையத்தின் கருத்தை குடியரசுத் தலைவர் கேட்கும்போது, பொதுத் தேர்தலுடன் இரு தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தலாம் என்ற நிலையை தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்' என மத்திய சட்டத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

லாலுதான் தலைவர்: ராஷ்ட்ரீய ஜனதா தளம்

ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுதான். தலைமையில் மாற்றமில்லை என ராஷ்டீரிய ஜனதா தளம் அறிவித்துள்ளது. மேலும் லாலு விரைவில் ஜாமீனில் வெளிவருவார் எனவும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியை சேர்ந்த எம்.பி. ராம்கிருபால் யாதவ் வியாழக்கிழமை கூறியதாவது:

அரசியல் சதியில் லாலு சிக்கியுள்ளார். இந்தச் சதியின் பின்னணியில் பிகார் முதல்வர் நிதீஷ் குமாரும், பாஜகவும் உள்ளது. இதுகுறித்து மக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வோம்.

லாலு ஓர் அப்பாவி. ஏழைகளுக்காக குரல் கொடுத்ததற்காகவும், மதச்சார்பின்மையை வலுப்படுத்தியதற்காகவும் அவர் தண்டிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் பணத்தைப் பெற்றவர்கள் வெளியில் சுதந்திரமாக உலவுகின்றனர் என்றார்.

லாலு பிரசாத் யாதவ் சிறைக்குச் சென்றுவிட்டதால் கட்சியின் தலைவர் பதவியில் மாற்றம் வரக்கூடும் என்பதை கட்சியின் மூத்த தலைவரான ரகுவன்ஸ் பிரசாத் சிங் மறுத்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், "ஒருவர் 5 அல்லது 10 நாள்கள் இல்லாவிட்டால் என்ன ஆகிவிடப் போகிறது? லாலு விரைவில் ஜாமீனில் வருவார் என்பதால், தலைவர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை. நான் லாலுவிடம் பகவத் கீதை நூலைக் கொடுத்துள்ளேன். அதில் அவர் பாதி படித்து முடிக்கும்போது ஜாமீனில் வெளியே வந்துவிடுவார்' என்றார் ரகுவன்ஸ் பிரசாத் சிங்.

No comments:

Post a Comment