தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Friday 6 September 2013

புதிய ஓய்வூதியத் திட்டம் ... திக்குத் தெரியாத ஓடம்



புதிய ஓய்வூதியத் திட்டம்
(NEW PENSION SCHEME)
அதன் நடைமுறைக்கான
ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம்
(PENSION FUND REGULATORY AND DEVELOPMENT AUTHORITY)

ஓய்வூதிய ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையம் (PFRDA) 2003ல் உருவாக்கப்பட்டது.
ஓய்வூதிய திட்டத்தில் இதுவரை ஓய்வூதியம் என்பது, கடைசி மாத ஊதியத்தில் 50% என்று, ஒரு வரையறுக்கப்பட்ட, உத்தரவாதமான பலனாக (defined benefit) இருந்தது.
1.1.2004 முதல் ஆண்டுக்கு ரூ. 6000 அல்லது 10%க்குக் குறையாமல்  பங்களிப்பு (CONTRIBUTION) என்ற வரையறுக்கப்பட்ட பங்களிப்பு (defined contribution) அடிப்படையில் புதிய ஒய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டது.
இந்த புதிய ஓய்வூதியத் திட்டத்தை நடமுறைப் படுத்துவதும்  ஒழுங்குமுறைப் படுத்துவதும் தான் இந்த (PFRDA) ஆணையத்தின் பணி. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் (PFRDA) மசோதா.
2005ல் அறிமுகப்படுத்தப்பட்டு இடதுசாரிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இந்த மசோதா அப்போது அமலாகவில்லை.
பின்னர், பாராளுமன்ற பொருளாதார நிலைக்குழுவின் ஆய்வுக்கு வைக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவர் ஜஸ்வந்சிங். இந்தக் குழு பரிந்துரைத்த முக்கியமான மக்கள் விரோத, ஊழியர் விரோத அம்சம் தான், அந்நிய நேரடி முதலீட்டை ஓய்வூதியத்துறையில் 26% அனுமதிக்க வேண்டும் என்பது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை 04.10.2012 அன்று நடைபெற்ற அமைச்சரவை  ஏற்றுக்கொண்டு திருத்தங்களுக்கு ஒப்புதல் அளித்தது. அதன் அடிப்படையில் திருத்தப்பட்ட மசோதா 04.09.2013 அன்று எதிர்ப்புகளை புறந்தள்ளி வாக்கெடுப்பு அடிப்படையில் பாராளுமன்ற மக்கள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சங்கள்
1.1.2004 க்குப் பிறகு மத்திய அரசுப் பணியில் சேரும் அனைத்து ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதியத் திட்டம் கட்டாயமாக்கப்படும்.
27 மாநில அரசுகள் தங்களது ஊழியர்களுக்கும் இத்திட்டத்தை அமல்படுத்துவதாக அறிவித்துள்ளன.
அரசு ஊழியர்கள் அல்லாத பிற பகுதி அமைப்பு சாரா தொழிலாளர்களும் விருப்பத்தின் அடிப்படையில் இந்த திட்டத்தில் 1.5.2009 முதல் சேர்ந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் தற்போது 52.83 லட்சம் ஊழியர்கள், உறுப்பினர்கள் ஆக உள்ளனர். அவர்களுடைய பங்களிப்புத் தொகை ரூ. 35000 கோடி.
நேரடியாகவோ, தங்களது அலுவலகம் வாயிலாகவோ இத்திட்டத்தில் உறுப்பினராகலாம்.
உறுப்பினருக்கு நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் (PERMANENT PENSION ACCOUNT NUMBER – PPAN) வழங்கப்படும்
ஒருவருக்கு TIER – 1, TIRE – 2 என்று இரண்டு கணக்குகள் துவக்கப்படும்.
TIER 1 கணக்கில் செய்யப்படும் பங்களிப்புத் தொகையை, உறுப்பினர் 60 வயது முடிக்கும் வரை திரும்பப்பெற முடியாது.
TIER 2 கணக்கில் பங்களிப்பு கட்டாயமில்லை, அது உறுப்பினரின் விருப்பத்தைப் பொறுத்தது. இதில் பங்களிக்கப்படும் பணத்தை ஒரு சாதாரண வங்கிக் கணக்கைப் போல, அவ்வப்போது விருப்பத்திற்கேற்ப திரும்பப் பெறலாம்.
ஊழியர்கள் செலுத்துகின்ற  பங்களிப்புத் தொகை பல்வேறு திட்டங்களில் சந்தையில் முதலீடு செய்யப்படும்.
முதலீட்டு திட்டத்தை ஊழியர்கள் தேர்ந்தெடுக்க வாய்ப்பு இருக்கிறது.
தங்களது விருப்பப்படி (ACTIVE CHOICE) தங்களது பங்களிப்புத் தொகையில் 50%க்கு மிகாமல் ஒரு பகுதியை பங்குச் சந்தையிலும், மேலும் ஒரு பகுதியை அரசு சாராத நிரந்தர வருமானம் தரக்கூடிய நிதி நிறுவனங்களிலும் மற்றொரு பகுதியை அரசு பிணையங்களிலும் முதலீடு செய்வதற்கு உறுப்பினர்கள் விருப்பம் அளிக்கலாம்.
அல்லது
திட்டத்தின் தன்விருப்பப்படி (AUTO CHOICE) முதலீடு செய்ய அனுமதிக்கலாம். இதன் படி, 35 வயது வரை 50% தொகையை பங்குச் சந்தையிலும் 55 வயது வரையிலும் 10% தொகையை பங்குச்சந்தையிலும் மீதித் தொகை மற்ற திட்டங்களிலும் முதலீடு செய்யப்படும்.

இந்த முதலீட்டை நிர்வகிக்க
LIC PENSION FUND LTD
SBI PENSION FUND LTD
UTI RETIREMENT SOLUTIOIN LTD
HDFC PENSION MANAGEMENT CO LTD
ICICI PRUDENTIAL PENSION LTD
KOTAK MAHINDRA PENSIO FUND LTD
RELIANCE CAPITAL PENSIION FUND LTD
DSP BLACK ROCK PENSION FUND LTD
ஆகிய 8 நிறுவனங்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

கணக்கில் சேர்ந்த தொகையைத் திரும்பப் பெறுதல்:

கணக்கில் சேர்ந்த தொகையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மருத்துவச் செலவு போன்ற காரணங்களுக்காக தகுந்த ஆதாரங்களுடன், கடனாகப் பெறலாம்.
உறுப்பினர் 60 வயதில் ஓய்வு அடையும் போது, தனது TIER – 1 கணக்கில் சேர்ந்திருக்கும் தொகையில் 60% தொகையைத் திரும்பப் பெறலாம். மீதி 40% தொகையை கட்டாயமாக் ஆண்டு வைப்புத்தொகையாக முதலீடு செய்ய வேண்டும்.
இந்த ஆண்டு வைப்புத்தொகை முதலீட்டிற்காக
LIC
SBI LIFE INSURANCE
ICICI PRUDENTIAL LIFE INSURANCE
BAJAJ ALLIANZ LIFE INSURANCE
STAR UNION DAI-ICHI INSURANCE CO LTD
RELIANCE LIFE INSURANCE CO LTD
HDFC STANDARD LIFE INSURANCE CO LTD
ஆகிய 7 ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் நியமிக்கப் பட்டுள்ளன.

உறுப்பினர் இறந்து போகும் பட்சத்தில் ஆண்டு வைப்புத் தொகை நிர்ப்பந்தம் இன்றி, 100% தொகையையும் திரும்பப் பெறலாம்.
வேறு ஏதாவது காரணத்தால் ஓய்வுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்றால் 80% தொகையை ஆண்டு வைப்புத் தொகையாக முதலீடு செய்ய வேண்டும். மீதி 20% தொகையை திரும்பப் பெறலாம்.

இறுதியாக,
திருப்பி அளிக்கப்படும் உறுப்பினர்களின் பங்களிப்புச் சேமிப்புத் தொகைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முதலீட்டில் இழப்பு என்றால் அதன் முழு பொறுப்பும் உறுப்பினர்களையே சாரும். அரசுக்கோ ஆணையத்திற்கோ எந்தப் பொறுப்பும் இல்லை.  

இந்த திட்டம் ஏன் ஊழியர்களுக்குப் பாதகமானது?
உத்தரவாதமான ஒரு ஓய்வூதியம் என்ற தத்துவம் தூக்கி எறியப்பட்டுள்ளது.
இதுவரை இருந்து வந்த, கடைசி ஊதியத்தில் 50% ஓய்வூதியம்
என்ற உத்தரவாதம் இனி மேல் இல்லை.
இதுவரை இருந்து வந்த
சேவைக்காலத்திற்கான பணிக்கொடை (RETIREMENT GRATUITY)
இனி மேல் இல்லவே இல்லை.
ஊழியர்களின் பணம் பங்குச் சந்தையில் முதலீடு செய்யப்பட்டு
அதிலிருந்து கிடைக்கும் பணத்தின் பங்கு மட்டுமே ஊழியர்களுக்கு திருப்பித் தரப்படும்.
எவ்வளவு கிடைக்கும் என்பது சந்தையின் நிலையைப் பொறுத்தது.
குறைந்தபட்ச உத்தரவாதம் கூட கிடையாது.
தனது ஊதியமே எவ்வளவு என்று தெரியாமல்
தடுமாறும் அமைப்புசாரா ஊழியர்கள்
எவ்வளவு கிடைக்கும் எதில் கிடைக்கும் என்று
பங்குச் சந்தை அறிவோடு எவ்வாறு முதலீடு செய்வார்கள்?
பங்குச் சந்தை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வரும் இந்த வேளையில்
ஊழியர்களின் ஊதியப் பணத்தை
சந்தையில் முதலீடு செய்வது என்பது சரியா?
பங்குச் சந்தையின் நிலையை
பெரும் பொருளாதார மேதைகளே கணிக்க முடியாத போது,
தனது பொருளாதாரத்தையே திட்டமிடத் தெரியாத
சாமான்யமான, சாதாரணமான ஊழியர்கள்
எப்படித் திட்டமிட்டு முதலீடு செய்ய முடியும்?
உழைப்பின் ஊதியத்தை பங்குச் சந்தையில் தொலைத்து விட்டு
ஓய்வுக்குப் பின் அல்லாடும் நிலைக்கு ஊழியர்களை தள்ளலாமா?
பெருமுதலளிகளின் வர்த்தக விரிவாக்கத்திற்கான முதலீட்டைப் பெறுக்க
அப்பாவி அன்றாடம் காய்ச்சி ஊழியர்களின் ஊதியத்தை
திட்டம் போட்டு அபகரிக்கலாமா?
ஏற்படும் இழப்புக்கு அரசோ ஆணையமோ பொறுப்பில்லை என்று
கைகழுவும் திட்டத்தை எப்படி நம்புவது?
இவ்வளவு தொகை பிடிக்கப்படும் என்று சொல்லி விட்டு
குறைந்த பட்சம் இவ்வளவு தொகை திருப்பித் தரப்படும்
என்று சொல்லமுடியாத திக்குத் தெரியாத
இந்த புதிய ஓய்வூதியத் திட்டம் தேவைதானா?

1 comment:

  1. அற்புதமான விளக்கம். தெளிவு செய்திக்கு நன்றி

    ReplyDelete