தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Saturday 29 November 2014

"நூறு ரூபாயாகக் கொடுத்தால் எப்படிப்பா"



இன்று ( நவம்பர் 29) கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் 
அது ஆகஸ்ட், 1957 ஆம் ஆண்டு. தனது மரணப் படுக்கையில் கிடந்தார் அந்தக் கலைஞர். ராயப்பேட்டை மருத்துவமனை எப்போதுமில்லாத பரபரப்புக் கோலம் பூண்டிருந்தது. அன்றைய ‘இந்து’ ஆங்கில நாளேட்டின் பிரதான பக்கங்களில் அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் தினசரி கட்டம்போட்டு வந்துகொண்டிருந்தன. தமிழக மக்களின் மனங்களிலெல்லாம் குடிகொண்டிருந்து வாட்டியது கவலை. அவர் உயிர் பிழைக்கவேண்டுமே... அவருக்கு ஒன்றுமாகிவிடாதிருக்க வேண்டுமே என்பதே மக்களின் சிந்தையில் ஓடிக்கொண்டிருந்தது.
மக்களையெல்லாம் மனங்கலங்கச் செய்துகொண்டிருந்த அந்தக் கலைஞன்தான் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். அவர் நகைச்சுவை நடிகர்தான். ஆனால் மக்களின் மனங்களில் நாயக அந்தஸ்தில் இருந்தவர். ரசிகர்களின் அன்பை அந்தளவுக்குப் பெற்றிருந்த இன்னொரு நகைச்சுவைக் கலைஞன் அந்நாளில் இல்லை. இந்நாளில் மட்டும் என்னவாம்? தனது 49வது வயதிலேயே மரித்துப்போன அந்த மகாகலைஞன் பதித்த தடமென்பது தமிழ்க் கலையுலகில் மட்டுமல்ல, இந்தியாவெங்கிலுமே இணையில்லாதது. இத்தனைக்கும் அவரது கல்வியறிவு என்பது வெறும் நான்காம் வகுப்போடு நின்றுபோன ஒன்றுதான்.
ஆனால் அந்தக் கலை உள்ளம், கல்வி- கேள்விகளில் சிறந்து விளங்கியவர்க்குக்கூட வழிகாட்டுமளவுக்கு உயர்ந்து விளங்கியது. நாடகத்தைப் பார்க்கும் ஆசையில் அந்நாளில் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலில் முகாமிட்டிருந்த டி.கே.எஸ். சகோதரர்களின் மதுரை ஸ்ரீ பால சண்முகானந்தா சபாவில் சோடா விற்கக் கிளம்பினான் சிறுவனான கிருஷ்ணன். நாடகத்தையும் அதன் பாடல்களையும் கவனித்தான். தினசரி இதே வேலையாக இருந்தான். அதே சமயத்தில் சோடா வியாபாரமும் கனஜோராக நடந்துகொண்டிருந்தது.ஒருநாள் கிருஷ்ணனின் தந்தையார் சுடலைமுத்து அச்சிறுவனை டி.கே.எஸ். சகோதரர்களிடம் கொண்டுபோய் நிறுத்தி, “இவன் நாடகத்தின்பேரில் பெரும் பைத்தியமாக இருக்கிறான்.
இவனைச் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா...” என்றார். புதிதாகச் சேர்ந்த சிறுவர்களுக்குப் பாடம் நடந்துகொண்டிருந்தது. சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தவர் டி.கே. சண்முகம். சங்கரதாஸ் சுவாமிகளின் பாடல் வரிகள்தான் அன்றைய பாடம். இடையில் சண்முகம் எழுந்துசென்று தண்ணீர் அருந்தப் போனார். திரும்ப வந்தவருக்கு வியப்பு. மகரக்கட்டு சாரீரம் கொண்ட ஒரு சிறுவன், தான் விட்ட இடத்திலிருந்து பாடத்தைத் தொடர்ந்துகொண்டிருந்தான். கேட்டார் சண்முகம் : “உனக்கெப்படித் தெரியும் இந்தப் பாட்டு?” சொன்னான் அந்தச் சிறுவன் இப்படி: “நாகர்கோவிலில் உங்கள் நாடகம் நடந்தபோது அங்கே நான் சோடா விற்றுக் கொண்டே பாடம் பண்ணிக்கொண்டேன்!”சண்முகத்துக்கு வியப்பு கலந்த மகிழ்ச்சி. “பலே... இனி நீயே வகுப்பை நடத்து” - சொல்லிவிட்டுச் சென்றார். நாடகக் குழுவில் மாணவனாகச் சேர்ந்த அன்றைக்கே ஆசிரியனாக உயர்ந்த அந்தச் சிறுவன்தான் பின்னாளில் கலைவாணர் என்று கம்பீரம் பெற்ற என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் நடித்தால்தான் நாடகமே ஓடும் என்ற அளவுக்கு அவரது புகழ் ஓங்கியது. அன்றைக்கு சினிமா இருந்தது. ஆனால், அது பேசவில்லை.
அதனால் நாடகக் கலைஞர்களுக்கு அதன்பால் ஈர்ப்பு இல்லை. காலம் ஒருநாள் சினிமாவுக்கும் குரலை வழங்கியது. பேசாப் படத்தின் மீதிருந்த வெறுப்பு மாறி நாடகக் கலைஞர்களை சினிமா ஈர்க்கத்தொடங்கியது. எல்லிஸ் ஆர். டங்கன் எனும் அமெரிக்க சினிமா கலைஞன் தமிழ் மண்ணில் தனது கலை முயற்சியைத் தொடங்க எண்ணி ‘சதி லீலாவதி’ எனும் படத்தை எடுக்கத் திட்டமிட்டிருந்தார். கதை விவாதம் நடந்தது. புதிய கலைஞர்களை நாடக அரங்கிலிருந்து தேர்வு செய்கிற முகாம். அங்கே சினிமா வாய்ப்பு வேண்டி ஏராளமான நாடகக் கலைஞர்கள் குழுமியிருந்தனர். அதில் எம்.கே.ராதா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ராமச்சந்திரன் போன்ற பின்னாளின் நட்சத்திரங்களும் அடக்கம். விவாதம் நகைச்சுவை காட்சிகள் குறித்து நகர்ந்தது. நகைச்சுவை நடிகர்கள் கூட்டத்தில் ஒருவராக அமர்ந்திருந்த என்.எஸ்.கிருஷ்ணன் ஏதோ சொல்ல எழுந்தார். எல்லோரும் பதறினார்கள். கிடைக்கப்போகிற சினிமா வாய்ப்பை இவன் ஏதாவது சொல்லப்போய்க் கெடுத்துவிடுவானோ? கிருஷ்ணனின் சட்டையைப் பின்பக்கமிருந்தவர் பிடித்து இழுத்தார். கிருஷ்ணன் முண்டினார். “நகைச்சுவைக் காட்சி பற்றி விவாதிக்கிறபோது என் மனதில் பட்டதை நான் சொல்ல வேண்டாமா?” - வினா தொடுத்தார். தமிழறியாத இயக்குநர் டங்கன் அருகிலிருந்தவரிடம் விசாரித்தார். “அவர் என்ன சொல்ல வருகிறார்? அவரைப் பேச விடுங்கள்...” கிருஷ்ணன் கம்பீரமாகச் சொன்னார்: “நான் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை நான் சொல்கிறபடிதான் எடுக்க வேண்டும்..!” வியந்துபோனார் டங்கன். துணிச்சலான அந்தப் பேச்சு அவரிடம் திறமையிருப்பதை டங்கனுக்கு உணர்த்தியது. டங்கன் பதில் சொன்னார், “சரி, நீங்கள் நடிக்கும் நகைச்சுவைக் காட்சிகளை நீங்கள் சொல்கிற விதத்திலேயே எடுப்போம்“.நாடகத்தில் எப்படி மாணவனாகச் சேர்ந்த முதல்நாளே ஆசிரியரானாரோ அதேபோல சினிமாவில் முதல் வாய்ப்பு கிடைத்தபோதே துணிவோடு குரலெழுப்பி, தனது நகைச்சுவைக் காட்சிக்கு தானேபொறுப்பென்ற உரிமையைப் பெற்றார்.
இப்படியொரு தனித்துவக் கலைஞனாக அவர் விளங்கியதாலேயே தனது நகைச்சுவைக் காட்சிகளிலாகட்டும், பாடல்களிலாகட்டும் சமூக சீர்திருத்தக் கருத்துக்களை அவரால் தாராளமாக முன்வைக்க முடிந்தது. உலகத்துக்கு ஒரு சாப்ளின் என்றால் தமிழுக்கு, இந்தியாவுக்கு ஒரு கலைவாணர் என்று ஆனார். எண்ணற்ற கலைஞர்கள் அவருக்கு நிழல்போல இருந்தனர். அவரது காதல் மனைவி டி.ஏ. மதுரம் கலையுலகிலும் அவரது இணையாக ஈடுகொடுத்துச் சாதனை புரிந்தார். அவரது உள்ளமறிந்த கவிவாணராக உடுமலை நாராயண கவி அவருக்கேயான தனித்துவமிக்க பாடல்களை இயற்றித் தந்துகொண்டேயிருந்தார். இந்த இணையற்ற கூட்டணி சினிமாவின் நகைச்சுவைக்கு ஒரு பண்பாட்டு ஞான அறச்சாலையின் அந்தஸ்தை வழங்கியது. கலைவாணர் சிரிக்க வைத்து நாட்டைச் செழிக்க வைத்தார்.
அன்றைக்கு சினிமாக்காரர்களுக்கு இருந்த ‘கூத்தாடிகள்’ என்ற இழிச்சொல்லை மாற்றி, ‘கலைஞர்கள்’ என்ற கௌரவத்தைப் பெற்றுத்தந்தது அவரது உன்னதக் கலை. தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையை, பொதுவுடைமை இயக்கத்தின் சமுதாய சமத்துவக் கருத்துக்களை, காந்தி மகாத்மாவின் தனி மனித ஒழுக்க விழுமியங்களை ஒருசேர உள்வாங்கிக்கொண்ட கலைவாணர் அந்தக் கருத்துக்களையெல்லாம் தனது கலையின் வாயிலாக மக்களுக்கு வழங்கி மகிழ்ந்தார். “நானும் சீர்திருத்தக் கருத்துக்களைச் சொல்கிறேன். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் சொல்கிறார். நான் சொல்லும்போது அழுகிய முட்டையையும் நாற்காலிகளையும் வீசி எறிகிற ஜனங்கள் கிருஷ்ணன் சொன்னால் காசு கொடுத்துக் கேட்டு கை தட்டி ரசித்துச் சிரிச்சுட்டுப் போகிறார்கள். அந்த வகையில் என்னைவிட அவர் ஒசந்துட்டார்” இப்படியொரு பிள்ளையுள்ளத்தோடு கலைவாணரைப் பாராட்டியவர் தந்தை பெரியார்.
அத்தோடு நின்றுவிடவில்லை கலைவாணர். தான் ஈட்டிய பொருளையெல்லாம் இல்லையென்று வந்தவருக்கெல்லாம் அள்ளி அள்ளிக் கொடுத்தார். தன் வீட்டில் திருட வந்தவனுக்கும்கூட அவரது கருணைப் பார்வை கிடைத்தது. அவனுக்கும் அள்ளித்தந்துவிட்டே மனந்திருந்த அறிவுறுத்தினார். “உனக்கு எவன் கிருஷ்ணன் என்று பெயர் வைத்தது? உனக்குக் கர்ணன் என்றுதான் பெயர் வைத்திருக்க வேண்டும்“ - என்று வருமானவரி அதிகாரியொருவரே நெகிழ்ந்து அவரைப் புகழ்ந்தார். தனது 49 ஆம் வயதில் மரணத்தைத் தழுவுகிற வரையிலும் இந்தக் கொடைகுணம் அவரிடம் தொடர்ந்தது. அப்போது அவருக்கு வறுமை. கொடுத்தால் வாங்கமாட்டார் எனத் தெரிந்து, மருத்துவமனைப் படுக்கையுள் தனக்கே தெரியாமல் எம்.ஜி.ஆர். வைத்துவிட்டுப்போன நூறு ரூபாய்க் கத்தையினை எடுத்துக்கொண்டு எம்.ஜி.ஆரிடமே சண்டை பிடித்தார் இப்படி: “நூறு ரூபாயாகக் கொடுத்தால் எப்படிப்பா... கொஞ்சம் சில்லரையாக மாற்றித்தந்தால் வருகிறவர்களுக்கெல்லாம் தருவேனே...” தனக்காகத் தரப்பட்ட பணத்தையும் அவர் இப்படித்தான் பயன்படுத்த நினைத்தார், வறுமையின் பிடியிலிருந்தபோதிலும். எல்லோரையும் சிரிக்க வைத்தார், மூடத்தனங்களுக்கு எதிராக சிந்திக்க வைத்தார், அதனால் கிட்டிய பொருளையெல்லாம் இல்லாதவர்க்குக் கொடுத்து தானும் மகிழ்ந்து சிரித்தார். அதனால்தான் அவர் நூறாண்டுகளைக் கடந்தும் தமிழ் ரசிகர்களின் மனங்களிலெல்லாம் இன்னமும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

கலைவாணருக்கு நிகர் கலைவாணரே என்றுதான் சொல்ல வேண்டும். சக மனிதனை இழிவு செய்யாத, ஊனத்தைக் கிண்டலடிக்காத, பெண்ணைக் கீழ்த்தரமாகக் கொச்சைப் படுத்தாத, இரட்டை அர்த்த வசனத்தை நம்பிக் கடை விரிக்காத அதி உன்னத நகைச்சுவை அவருடையது. கலைவாணரின் இந்த அளவுகோலை வைத்து இன்றைய நகைச்சுவைக் காட்சிகளை எடை போட்டால் எதுதான் அந்தத் தரத்தோடு நமக்கு மிஞ்சும் சொல்லுங்கள்? கலைவாணர் கலைவாணர்தான்

No comments:

Post a Comment