தலைப்புச் செய்திகள்


BSNLEU காரைக்குடி மாவட்டச் சங்கம் தங்களை வணங்கி வரவேற்கிறது!
தங்களின் தோழமையுள்ள,
M.பூமிநாதன்
, மாவட்டச் செயலர்
P.மகாலிங்கம், மாவட்டத் தலைவர்

Wednesday, 7 May 2014

பொதுத்துறை வங்கிகளை சூறையாடும் கார்ப்பரேட்டுகள் வாராக்கடன் ரூ. 2.04 லட்சம் கோடி தள்ளுபடி

கடந்த 13 ஆண்டுகளில் பெரும் வர்த்தக நிறுவனங்களுக்கு பொதுத்துறை வங்கிகளால் மொத்தம் 2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடனை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் இந்த வங்கிகளின் மோசமான கடன்கள்கடந்த 7 ஆண்டுகளில் 4 லட்சத்து 95 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. பொதுமக்களின் சேமிப்பைச் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களை அம்பலப்படுத்த மத்திய அரசு முன்வராத நிலையில் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) இந்த விவரங்களை வெளியிட்டுள்ளது.

செவ்வாயன்று (மே 6) சென்னையில் செய்தியாளர்கள் முன்னிலையில், வராக்கடன்களில் முன்னிலையில் உள்ள 406 நிறுவனங்களின் பட்டியலை சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் வெளியிட்டார். நாடு முழுவதும் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பெரும் முதலாளிகளால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கு எல்லையில்லாமல் கடன் வாரி வழங்கப்பட்டு வந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புப் பணத்தை மத்திய அரசு முதலாளிகளுக்கு கடனாக வாரியிறைத்து வந்திருக்கிறது. கொடுத்த கடனை வசூல் செய்ய அரசு தயங்கி வரும் நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பட்டியல் வெளியிடப்பட்டது. அதிக அளவில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அவர் கூறினார்.

கிங் ஃபிஷர் விமான நிறுவனத்தை சார்ந்த விஜய் மல்லையா 2,673 கோடி ரூபாய் பல வங்கிகளில் கடனாகப் பெற்றுள்ளார். கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று மல்லையா கூறி வருகிறார். ஆனால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கு யுவராஜ் சிங்கை பல கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்துள்ளார். தமிழகத்தில் ஆர்ச்சிட் கெமிக்கல்ஸ் நிறுவனம் ரூ.9 ஆயிரத்து 38 கோடி கடன் பெற்றுள்ளது இதுவரை திருப்பிதரவில்லை. மத்திய அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது.

தனிப்பட்ட முறையில் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சாம்பசிவராஜ் ரூ.450 கோடி கடனாக பெற்று திருப்பி அளிக்கவில்லை. தற்போது அவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்துள்ளார்,” என்று வெங்கடாச்சலம் கூறினார். தற்போது வராக்கடனை வசூலிக்காமல் முழுமையாக ரத்து செய்ய மத்திய அரசு விரும்புகிறது. சிறு தொகைகளை வங்கியில் கடனாக வாங்கி திருப்பி செலுத்த முடியாதவர்களின் பெயர்களை படத்துடன் விளம்பரம் செய்கிறார்கள். பெரிய தொகையை வாங்கியவர்களின் விபரத்தை வெளியிடுவதற்கு ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும் தயங்குகின்றன என்றும் அவர் குற்றம் சாட்டினார். இனியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றால் நாடு முழுவதும் வங்கிக் கடன் மோசடி செய்யும் பெரும்புள்ளிகளின் பெயர்கள், அவர்கள் வாங்கிய தொகை உள்ளிட்ட விபரங்கள் சுவரொட்டிகளாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார். திட்டமிட்டு வங்கிக் கடனை ஏமாற்றுவோரை கிரிமினல் குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும், கூட்டு மோசடிகளை வெளிப்படுத்த முறையான விசாரணை நடத்த வேண்டும், வராக்கடன் வசூலை விரைவுபடுத்த வசூல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நாடு தழுவிய இயக்கம் நடத்தப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களின் தவறான நிர்வாகத்தால் உண்டாகும் கடன் நிலுவைக்கு சலுகை காட்டக்கூடாது, வங்கிக்கடன் பெற்று ஏமாற்றுவோரை பட்டியலிட்டு காலமுறைப்படி ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும் என்றும் சங்கத்தினர் வலியுறுத்தினர். தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் இ. அருணாசலம் உள்ளிட்டோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


நன்றி: தீக்கதிர்.

No comments:

Post a Comment